இந்தியத் தொலைக்காட்சியின் வித்தான தூர்தர்ஷன் 66 ஆண்டுகள் நிறைவு !

இந்தியத் தொலைக்காட்சியின் வித்தான தூர்தர்ஷன் 66 ஆண்டுகள் நிறைவு !

ன்று செப்டம்பர் 15, இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு பொன்னான நாள். சரியாக 66 ஆண்டுகளுக்கு முன்பு, 1959-ஆம் ஆண்டு, டெல்லியில் ஒரு சிறிய சோதனையாகத் தொடங்கியதுதான் தூர்தர்ஷன் எனும் மாபெரும் ஊடகம். அன்று யாருக்குமே தெரியாது, ஒரு சிறிய டிரான்ஸ்மிட்டரும், தற்காலிக ஸ்டுடியோவும் ஒரு நாள் இந்தியாவையே இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறும் என்று.

வானொலிக்கு அப்பால் ஒரு புதிய உலகம்

அதுவரை, நமது ஒரே பொழுதுபோக்கு வானொலிதான். ரேடியோவில் செய்திகள் கேட்போம், பாடல்கள் கேட்போம். ஆனால், எதுவுமே கண்ணுக்குத் தெரியாது. அத்தகைய காலகட்டத்தில், தொலைக்காட்சி என்ற ஒரு புதிய பெட்டி வீட்டுக்கு வந்தபோது, இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு வியப்பு. கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒலி, இனி கண்ணுக்குத் தெரியும் காட்சியாக மாறியது. அதுவரை நாம் கேட்டறிந்த இந்தியா, இனி காட்சிகளாக நம் வீட்டு வரவேற்பறையில் தோன்றியது.

1965-ஆம் ஆண்டில், தூர்தர்ஷன் அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக தினமும் ஒளிபரப்பாகத் தொடங்கியது. அப்போது நமக்கு ஒரே ஒரு சேனல்தான் இருந்தது. அதில் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், விவசாயப் பாடங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என அத்தனையும் ஒரே சேனலில் கிடைத்தது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கலை மற்றும் தகவல்கள் மூலம் ஒரே புள்ளியில் இணைத்தது.

தனித்துவமான அடையாளமாக மாறிய தூர்தர்ஷன்

1972-ல் மும்பை, அமிர்தசரஸ் போன்ற முக்கிய நகரங்களுக்கும் தூர்தர்ஷன் தன் சேவையை விரிவுபடுத்தியது. 1975-க்குள் ஏழு முக்கிய நகரங்களில் இதன் சேவை கிடைத்தது. 1976-இல் தூர்தர்ஷன் அகில இந்திய வானொலியிலிருந்து பிரிந்து ஒரு தனி அமைப்பாகச் செயல்படத் தொடங்கியது.

இந்தியத் தொலைக்காட்சியின் பொற்காலம் 1982-இல் தொடங்கியது எனச் சொன்னால் அது மிகையில்லை. அந்த வருஷத்தில்தான், இந்தியாவின் முதல் வண்ணத் தொலைக்காட்சி (Color TV) அறிமுகமானது. முதன்முதலாக, சுதந்திர தின விழாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் உரை வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதே ஆண்டில் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணத்தில் ஒளிபரப்பானபோது, இந்திய மக்களிடையே தொலைக்காட்சிக்கான ஆர்வம் பல மடங்கு அதிகரித்தது. அதுவரை கறுப்பு-வெள்ளை உலகத்தில் இருந்த நாம், வண்ணங்களின் உலகத்துக்குள் கால் பதித்தோம். அந்த நிகழ்ச்சிகள் இந்தியாவை ஒரு குடும்பமாக இணைத்தன.

கலை மற்றும் தொழில்நுட்பப் புரட்சி

வசதிகள் குறைவாக இருந்தபோதிலும், ராமாயணம், மகாபாரதம், ஹம் லாக், புனியாத், மால்குடி டேஸ் மற்றும் உதான் போன்ற நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனின் காலத்தால் அழியாத அடையாளங்கள். அவை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் சமூக விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றன.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், ஊரடங்கு நேரத்தில் தூர்தர்ஷன் மீண்டும் தனது சமூகப் பொறுப்பை உணர்த்தியது. பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுடன் இணைந்து, தொலைக்காட்சி, வானொலி, யூடியூப் வழியே மெய்நிகர் வகுப்புகளையும், பிற கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பியது. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வுகளுக்குத் தயாராகப் பெரிதும் உதவியது.

இன்றைய தூர்தர்ஷன், தொழில்நுட்பத்திலும் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறது. தூர்தர்ஷன் கிசான் சேனலில் AI க்ரிஷ், AI பூமி என்று இரண்டு AI தொகுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த AI தொகுப்பாளர்கள் மனித தொகுப்பாளர்களைப் போலவே செயல்பட்டு, 24 மணி நேரமும் இடைவிடாமல் செய்தி வழங்க முடியும். அதுமட்டுமில்லாமல், இவர்கள் 50 மொழிகளைப் பேசுவார்கள்!

இன்று கிட்டத்தட்ட 90 சதவீத இந்திய மக்கள், 1400-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்மிட்டர்கள் வழியாகத் தூர்தர்ஷனை பார்க்கிறார்கள். 46 ஸ்டுடியோக்களில் இருந்து தினமும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இப்போது நம்மிடம் நூற்றுக்கணக்கான சேனல்கள் இருந்தாலும், நமது மனங்களில் அந்தத் தூர்தர்ஷன் காலம் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. காரணம், அது ஒரு ஊடகம் மட்டுமல்ல, அது நம் அனைவரையும் ஒரு குடும்பமாக இணைத்த ஒரு அற்புதப் பெட்டி.

தனுஜா