கூமாப்பட்டிக்கு வந்துடாதீங்க-பொதுப்பணித் துறை வேண்டுகோள்!
விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ‘கூமாப்பட்டி‘ என்ற வில்லேஜ் ‘ஒரு தனி தீவு’ என்ற ரீதியில் இணையத்தில் ரீல்ஸ் வைரலாகி வரும் நிலையில், அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், சிறிய கிராமமான கூமாப்பட்டியில் சுற்றுலா வசதிகள் ஏதும் இல்லை என்றும், சுற்றுலா பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதனிடையே, அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்த வீடியோவில் வைரலாகி வரும் நபர், தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்து ரீல்ஸ் எடுத்து போட்டுள்ளாரா? என்று அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களைத் திறந்தாலே கூமாப்பட்டி என்ற பெயர் தான் டிரெண்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு பொருளை விளம்பரம் செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு மத்தியில், ஒற்றை ரூபாய் செலவில்லாமல் கூமாப்பட்டி கிராமத்தை இந்திய அளவில் புகழ் பெறச் செய்துவிட்டார் இளைஞர் ஒருவர். அந்த இளைஞர் தன் வீடியோக்களில், ‘ஏங்கே…. யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தாலும் சரி, மன உளைச்சல் இருந்தாலும் சரி அதை சரி பண்ண இந்த கூமாபட்டிக்கு வாங்க, இந்த கூமாப்பட்டி ஒரு தனி தீவு, இது ஒரு ஐஸ்லாண்டு,’ என்று அந்த இளைஞர் கூவி கூவி அழைக்கிறார். மேலும், அந்த கிராமத்தில் உள்ள பச்சை, பசும் இயற்கை சூழலையும் காட்டியுள்ளார். அணை நீரில் குளித்தபடி இந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், ‘இது சொர்க்க பூமிங்க.. அழகிய தீவுங்க….எங்க ஊரு தண்ணீர் சர்பத் மாதிரி இருக்குங்க… ஏங்கே…’ என அந்த இளைஞர் கொடுத்த ஹைப்பால், அப்படி என்ன தான் கூமாபட்டியில் இருக்கிறது என்று பலரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அதேவேளையில், கூமாப்பட்டிக்கு அவெஞ்சர்ஸ் படத்தின் சூப்பர் ஹீரோ தோர் (thor) கூமாப்பட்டிக்கு வந்தது போன்ற ஏ.ஐ., வீடியோவும் பரவி வருகின்றன.
இதனால், கூமாப்பட்டி நேஷனல் அளவில் பேமஸ் ஆகிவிட்டது. மேலும், இந்த கூமாப்பட்டி எங்கு இருக்கிறது? அங்கு என்ன சிறப்புகள் இருக்கின்றன? என்று நெட்டிசன்களும் இணைய தளங்களில் சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டனர். அதிலும், சில இன்ஸ்டா பிரபலங்கள், கூமாப்பட்டிக்கே சென்று, தங்கள் பங்கிற்கு வீடியோக்களை எடுத்து ரீல்ஸ் போட்டு வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களோடு தற்போது கூமாப்பட்டியும் இணைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் வீடியோவில் இளைஞர் காட்டிய இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதி என்பதால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
உண்மை நிலை என்ன?
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அர்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப்பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, 6-வது மைல் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை மற்றும் பூங்கா ஆகியவை உள்ளன.மேலும், மலையில் ராக்காச்சி அம்மன் கோயில், அய்யனார் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், தென் திருமாலிருஞ்சோலை காட்டழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதனால், மேற்கு தொடர்ச்சி மலை விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.
பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் சாலை சேதமடைந்தும், போதிய பேருந்து வசதிகளும் இல்லாமல் உள்ளது. செல்போன் டவர் இல்லாததால் அவசர உதவிக்கு கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பிளவக்கல் அணை பூங்கா கரோனா ஊரடங்கின் பொது பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் பின் திறக்கப்படாததால் உபகரணங்கள் சேதம் அடைந்து உள்ளன. பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தும் இதுவரை பணிகள் தொடங்க வில்லை.

இந்த ஊரும், இப்போது ட்ரெண்டாகி வரும் விஷயம் குறித்து வத்திரயிருப்பு கவுதமன் என்பவர் சொல்லும் போது,” எவனோ ஒருத்தன் சொந்த ஊர்ப்பாசத்துல உயர்வுநவிற்சியா கூமாப்பட்டி ஐலண்ட்னு சொல்லி ட்ரெண்டிங் ஆக்குறத நம்புறீங்க… நான் அங்கருக்க அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் 11, 12 படிச்சேன்… எங்கப்பாவும் அந்த ஸ்கூலில் தான் 10 வருஷத்துக்கு மேல ஆசிரியரா இருந்தாங்கன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா?!!கூமாப்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு ஓரஞ்சாரம் இடிக்காம பஸ்ஸ நேக்கா ஓட்டிட்டு வர்றதே டிரைவரோட பெரிய தெறமை தான்! ரொம்ப அடசலான ரோடு… ஊரு… எங்க ஸ்கூலுக்கு முன்னால ஒரு பெரிய கழிவு நீர் ஓடை ஓடிட்டு இருக்கும்… எருமை மாடுகளும், தாமரைப்பூவுமா கெடக்கும்! ஊருக்கு முன்னால பெரிய குளம், விராகசமுத்திரம்னு ரெண்டு பெரிய கண்மாய் இருக்கும்… மழை பெஞ்சா தண்ணி நெரம்பி கடல்போல நிக்கும்… ரோட்டையே வழிமறிக்கும்… மழை பெய்யாமப்போனா வறண்டு கருவேலங்காடா கிடக்கும்… வயக்காடெல்லாம் நெல்லு விளையிறப்ப பச்சையா இருக்கும்… அறுவடை செஞ்சாச்சுன்னா கரட்டுக்காடா கெடக்கும்!கூமாப்பட்டி மட்டுமில்ல, வத்ராப்பு, கான்சாபுரம், தம்பிபட்டி, மகராஜபுரம், ராஜபாளையம், வடக்க தேனி, கம்பம், பெரியகுளம், தெக்க தென்காசி, குற்றாலம்னு மேற்கு தொடர்ச்சி மலைல மழை பெஞ்சாலே அடிவாரத்துல ஏகப்பட்ட நீரூற்று, நீரோடைன்னு ஒரு மாசத்துக்கு ஓடுறது வழக்கம் தான்… மத்த நாளெல்லாம் காஞ்சிபோய் தான் கெடக்கும்! அந்த இன்ஸ்டா ட்ரெண்ட் பண்ற பயபுள்ள, இந்த வயக்காட்டையும், மழை பெஞ்சா ஓடுற தண்ணியையும், மேற்கால கான்சாபுரம் தாண்டி இருக்குற பிளவக்கல் டேமையும் ட்ரோன் ஷாட் எடுத்துட்டு, அம்புட்டையும் கூமாப்பட்டி கணக்குல காட்டுது!வெயிலு வெளுத்து வாங்குறப்ப, ஊட்டி, கொடைக்கானல்னு நாங்க டூர் போறது வழக்கம்… இதுக்கு மேலயும் சிம்லான்னு நினைச்சுக்கிட்டு கூமாப்பட்டி தீவுக்கு டூர் வரலாமான்னு கேக்குற உங்ககிட்ட நான் என்னத்த சொல்ல!”என்றார்
முன்னரே பிளவக்கல் அணை மற்றும் பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கூமாப்பட்டியில் உள்ள வயல்வெளிகள், ஒடைகள், பிளவக்கல் அணை, கண்மாய்கள் ஆகியவற்றில் எடுத்த பழைய ரீல்ஸ் வீடியோக்களை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் கூமாப்பட்டி தற்போது ட்ரெண்டாகி இணையவாசிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அடிப்படை வசதியின்றி தாங்கள் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


