டாக்டர் – விமர்சனம்!

டாக்டர் – விமர்சனம்!

கொல பசி வேளையில் ஒரு ஹோட்டலுக்கு போனால் ருசியான சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுவது வாடிக்கைதானே.?. ஆனால் அந்த நம்பிக்கை எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாமல் போவதும் வாடிக்கைதானே..!? அப்படித்தான் கோலிவுட்டில் மிகையான எதிர்பார்ப்பை தூண்டிய படங்கள் எல்லாமே ரசனைக்குரியதாக இருக்காது என்பது உண்மை.. ஆனால் தற்போது நெல்சன் திலீப் குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரிலீஸாகி இருக்கும் டாக்டர் படம் சினிமா ரசிகர் ஒவ்வொருவரும் ஃபீல் குட் என்று சொல்லும் விதமாக இருக்கிறது..இந்த டாக்டர் விருந்திலும் வாழை இலையில் சின்ன கிழிசல், பரிமாறிய போது உப்பை வலது பக்கம் வைத்து விட்டார்கள்.,பரிமாறிய பெண்ணின் மேலாக்கை சரியாக இழுத்து மூடவில்லை என்பது போன்ற குறைபாடுகளும் உண்டென்றாலும் 21/2 மணி நேர சினிமா முடிந்து ஸ்மைலான முகத்தோடு வெளியேற முடிவதே மகிழ்ச்சிதான்.

கதை என்னவென்றால் பேமண்டுக்காகவே அச்சாக்கும் ஒரு நாளிதழ் சொன்னது மாதிரி கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே ‘டாக்டர்’ அப்ப்டீன்னு சிங்கிள் லைனில் சொல்லி வாரி விடலாம்.. ஊஹூம்ம்.. கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் ரொம்ம்ம்ம்ப நல்ல மற்றும் ஸ்ட்ரிக்ட் டாக்டரான சிவகார்த்திகேயன் மிலிட்டரியில் ஒர்க் செய்கிறார். இப்பேர்பட்டவர் ஒரு நிகழ்ச்சியில் பிரியங்கா மோகனை சந்தித்து சினிமா வழக்கப்படி லவ்வில் விழுகிறார். நெருங்கிப் பழகி மேரேஜ் செய்வதற்கு முன், டாக்டரின் ஓவர் டிசிப்பிளின் உள்ளிட்ட காரணங்களால் லடாய் ஆகி விடுகிறது. இச்சூழலில், பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அதை தெரிந்ததால் நாயகன் தன்னை நிராகரித்த நாயகியின் அண்ணன் மகளை தேடும் பணியில் ஈடுபடுகிறார். இந்த தேடுதலில் கொஞ்சம் அதிர்ச்சியூட்டும் தகவல்களும், மர்மங்களும் நாயகனுக்கு தெரிய வருகிறது. இதை அடுத்து நாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகளை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சிவகார்த்திகேயன் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே  கதை.

ஹீரோ சிவகார்த்திகேயன் எதிராளியை தன் பேச்சு சாமர்த்தியத்தால் மட்டுமே வீழ்த்தும் வழக்கமான பாணியில் இருந்து விலகி இன்னொரு ட்ராக்கில் நடித்து நிஜமாகவே அசத்தி இருக்கிறார். குறிப்பாக ஓப்பனிங் சாங் கூட இல்லாதது ஆச்சரிய மகிழ்ச்சி பக்கத்து சீட் பார்ட்டி சொன்னது போல் பிரியங்கா மோகன் ஹீரோயினுக்குரிய நல்ல அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார். ஆம்.. அழகாக வந்து டைரக்டர் குறிப்பிட்ட அளவான நடிப்பை கொடுத்து வசீகரிக்கிறார். வில்லனாக் வருகிறார் வினய். இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்திருக்கலாம். ஆனாலும் பல இடங்களில் வினய் நடிப்பு கவர்கிறது. யோகிபாபுவை விட ரெடின் கிங்ஸ்லியின் காமெடி படத்திற்கு பெரிய பலம். அர்ச்சனா, தீபா சங்கர், போன்றோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

குறிப்பிட்டு சொல்லவேண்டியது பின்னணி இசை, படம் முழுக்க நம்மையும் கதையோடு இழுத்து செல்வதில் அனிருத் இசை அசத்தல். ஒளிப்பதிவு அபாரம். ஒரு க்ரைம் படம் என்பதை மறைத்து ஒரு கமர்ஷியல் கொண்டாட்டத்தை கண் முன் கொண்டு வந்துள்ளது விஜய் கார்த்திக் கேமரா.

ஆக.. வெகு நாட்கள் கழித்து தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறக்க, என்ஜாய் செய்து பார்க்கும் படமாக வந்திருக்கிறது டாக்டர். டார்க் காமெடியில், க்ரைமை சரிவிகிதத்தில் கலந்து, படத்தின் திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யப்படுத்துகிறார் நெல்சன். தன் முதல் படத்தில் அங்கங்கே தடுமாறியவர், இந்தப்படத்தில் நிதானமாக சிக்ஸர் விளாசியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதை அமைத்த விதமும், நம்ப முடியாததாக இருந்தாலும் ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. படத்தின் காட்சிகளில் நம் இவ்வொருவரையும் ஒன்ற வைத்து விடும் மேஜிக் அவரிடம் இருக்கிறது. படம் முழுக்கவே புதுப்புது ஐடியாக்கள் வந்து நம்மை ஈர்க்கிறது. ஆனால் இடைவேளை வரை கலகலவென செல்லும் கதை இரண்டாம் பாதியில் கொஞ்டம் தடுமாறுகிறது என்றும் கிளைமாக்ஸ் காதில் பூ சுற்றுகிறார்கள் என்றும் லாஜிக் இல்லை என்றும் சொல்வோரும் ஒரு முறைப் பார்க்கலாம் என்றே சொல்கிறார்கள் என்பதுதான் இயக்குநர் நெல்சனின் வெற்றி

மொத்தத்தில் இந்த டாக்டர்- ஐ நம்பி போய் பாருங்க.. சந்தோசமா திரும்பி வருவீங்க!

மார்க் 3.5 / 5

Related Posts

error: Content is protected !!