முதல்வர் ஸ்டாலினின் பயண திட்டத்தில் மாற்றம்!

பொதுமக்களின் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 12லிருந்து 6ஆக குறைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் .
சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டம் அண்மையில் நடைபெற்றது,இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தாமல் முதலமைச்சரின் வாகனமும் சேர்ந்தே செல்லும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6ஆக குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது முதல்வரின் பாதுகாப்புக்காக மொத்தம் 13 அல்லது 12 கார்கள் முதல்வர் பயணிக்கும் காரின் முன்புறமும், பின்புறமும் செல்லும். இதில் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம்பெறும். அதேபோல் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதல்வரின் காருக்கு முன்னதாக சென்று அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனக் கண்காணிப்பார். அந்த வகையில் ஏக கெடுபிடி ஏற்படுவதை தவிர்க்க கான்வாய் பாணியை மாற்ற ஏற்பாடு செய்யப்படிருக்கிறதாம்
முதலமைச்சரின் ஒப்புதலோடு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்றே முதலமைச்சரின் பாதுகாப்பு வாகன எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கையும் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,