நம் நாட்டில் ஏன் இன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது தெரியுமோ?

நம் நாட்டில் ஏன் இன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது தெரியுமோ?

ந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமன் மால் பெங்கானி கூறுவது:  ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள் ஈடுபட்டவன், 50 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஈடுபட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

1. தொழில் துறைக்குத் தேவையான ஆக்சிஜனும், மருத்துவத்திற்கான ஆக்சிஜனும் ஒரே இடத்தில்தான் தயாரிக்கப் படுகின்றன, ஒரே மாதிரியான் தொட்டிகளிலும், ஒரே மாதிரி கலன்களிலும் (சிலிண்டர்களிலும்தான் நிரப்பப் படுகின்றன. மருத்துவத்திற்கான ஆக்சிஜனின் ஒவ்வொரு தொகுதியையும் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு செய்து சான்றிதழ் தர வேண்டும். வேறு எந்த வேறுபாடும் இல்லை. தொழிற்சாலைகளுக்கு 99.5 சதவீதம் தூய்மையான ஆக்சிஜனும், மருத்துவத் துறை ஆக்சிஜன் 93 சதவீதத் தூய்மையுடன் இருக்க வேண்டும். இதுதான் உலகளாவிய நடைமுறை.

2. இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அறவே இல்லை. மருத்துவத் துறைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தயாரிக்க மொத்த உற்பத்தித் திறனில் 1 சதவீதத்தைப் பயன்படுத்தினால் போதும் என்று நீங்கள் அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். கொரொனா தடுப்பிற்காக இது 5 சதவீதம் அதிகரித்தால் போதும்

3. என் கணக்கின் படி இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. இது அதிகமாகக் கூட இருக்கலாம். இதில் 80 சதவீத ஆக்சிஜன் தயாரிப்புத் திறன் எஃகு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருக்கிறது. இது எஃகு மற்றும் இரும்பு உற்பத்தியில் பயன்படுகிறது. ஜாம்நகரில் இருக்கும் ரிலையன்ஸ் ஆலையில் பெட்ரோலிய கல்கரியை வாயுவாக மாற்றுவதற்காக ஒரு நாளைக்கு 22000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப் படுகிறது.

4. ஆலைகளின் தேவைக்காக அவற்றுக்குள்ளேயே ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் பெரும்பாலும் கிழக்கு இந்தியாவிலும், சில மும்பை, குஜராத்திலும், சில கர்னாடகத்திலும் இருக்கின்றன. இவை 5 முதல் 10 சதவீத ஆக்சிஜனை திரவமாக உற்பத்தி செய்து, பெரிய தொட்டிகளில் சேமித்து வைக்கின்றன. இந்த திரவ ஆக்சிஜன் ஆலை உற்பத்தி குறையும் போது அவசரத் தேவைக்காகவும், ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக உள்ள போதும் பயன்படுத்தப் படுகிறது.

5. இவை தவிர ஆக்சிஜன் தயாரிப்பை மட்டுமே செய்யும் லிண்டே, இன்னோக்ஸ் போன்ற நிறுவனங்கள் திரவநிலை ஆக்சிஜனைத் தயாரித்து தொட்டிகள் மூலமும், லாரிகள் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றன.

6. பல ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனங்கள் திரவ நிலை ஆக்ஸிஜனை வாங்கி, ஆவியாக மாற்றி, சிலிண்டர்களில் விற்கின்றனர்.

7. கடைசி நிலைப் பயன்பாட்டாளருக்கு மூன்று வழிகளில் ஆக்சிஜன் சப்ளை செய்யப் படுகிறது. ஒன்று, 80 சதவீத ஆக்சிஜன் ஆலையிலிருந்து குழாய்கள் மூலம் கடைநிலைப் பயன்பாட்டாளருக்கு அனுப்பப் படுகிறது. இரண்டு, 15 சதவீத ஆக்ஸிஜன் திரவமாக தொட்டிகள், லாரிகள் மூலமாக அனுப்பப் படுகிறது. மூன்று, 5 சதவீதத்திற்கும் குறைவான ஆக்சிஜன்தான் சிலிண்டர்கள் மூலமாக அனுப்பப் படுகிறது.

அப்படியென்றால் ஏன் இன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. பின்வரும் காரணங்களைத்தான் கூற முடியும்

1. போதிய அளவு லாரிகள், சேமிப்புத் தொட்டிகள், சிலிண்டர்கள் இல்லாமை. இவை மிகவும் விலை உயர்ந்தவை. ஒரு லாரியின் விலை ரூ.45 லட்சம். ரு. 300 மதிப்பேயுள்ள ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் சிலிண்டரின் விலை ரு.10000. சாதாரண நாட்களில் வாயுத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தச் சொத்துக்களை வாங்கி வைக்கின்றன. அப்படித்தான் செய்யவும் முடியும்

2. ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் நடைமுறைப் (லாஜிஸ்டிக்ஸ்) பிரச்சினைகள் உள்ளன. பெரும்பாலான ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் புவியியல் ரீதியாக சில இடங்களில்தான் இருக்கின்றன. வாடிக்கையாளருக்கு ஆக்சிஜனை விநியோகிக்க ஆலையிலிருந்து 200 முதல் 1000 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். சாலைகள் நல்லவையாக இருந்தால் கூட ஒரு லாரி ஆக்சிஜனை ஏற்றிச் சென்று திரும்பி வருவதற்கு 7 முதல் 8 நாட்கள் பிடிக்கும். சிலிண்டர் வினியோகமும் இப்படித்தான்

3. வாயுத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகபட்ச லாபத்தை அடைவதில் குறியாக இருப்பது.

4. கொரொனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக வந்ததால் அரசாங்கம் உடுக்கை இழந்தவன் போல நிற்கிறது. இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே ஊகித்து, தயார்நிலையில் இருந்திருந்தால் இப்போதுள்ள அபாயகரமான சூழலைத் தவிர்த்திருக்கலாம். நமது ஜனநாயக அமைப்பில் இதைச் சொல்வது செய்வதை விட எளிது. அரசாங்கங்கள் இப்போதுதான் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவை பின்வரும் முறைகளில் திட்டமிட்டிருக்கலாம்

அ. வாயுத் தயாரிப்பு நிறுவனங்கள் வினியோக முறைகளை மருத்துவ நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு கறாரான அறிவுரையை வழங்கியிருக்கலாம். விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பது போல வாயு நிறுவனங்களுக்கு அதற்கான இழப்பீட்டைக் கொடுக்க முன் வந்திருக்கலாம்.

ஆ. ஆலையின் பிற தேவைக்காக வைத்திருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்களில் (கேப்டிவ் பிளாண்ட்) தயாராகும் ஆக்சிஜனின் ஒரு துளியைக் கூடத் தம் தேவைக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கலாம்.

இ. ஆக்ஸிஜனை ரயில்கள் மூலம் அனுப்பி அவை தங்கு தடையின்றி செல்லுமாறு (க்ரீன் டோர் டிராக்) உத்தரவிட்டிருக்கலாம்.

ஈ. அனைத்து மருத்துவ மனைகளும் ஆக்ஸிஜன் தயாரிப்பு சாதங்களை நிறுவியிருக்கலாம். அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளிலும் இந்த வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ. 200 கோடி வழங்குவதாக பிரதமர் இப்போது அறிவித்திருக்கிறார். இதைக் கொண்டு 500 தயாரிப்பு சாதனங்களை நிறுவ முடியும். பொதுவாக பொதுத் துறை நிறுவனங்களில் இத்தகைய ஒதுக்கீடு 15 சத வீதம் கூடப் பயன்படுத்தப் படுவதில்லை.

உ. பெரிய தனியார் மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் தவறும் இதில் இருக்கிறது. பொது மக்களிடமிருந்து ஏராளமான பணம் வசூலிக்கும் அவர்கள், இது போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதில்லை. வேறு எதற்காக கொழுத்த சம்பளமும், போனசும் அவர்கள் வாங்குகிறார்கள்? இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் பட்சத்தில் பெரிய தனியார் மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் தலைகள் உருள வேண்டும்.

(இவை  என். ராம்  அனுப்பி வைத்த தகவல்கள்.

மொழிபெயர்ப்பு: ஆர். விஜயசங்கர்)

error: Content is protected !!