பெரியார் கல்விக்காக செய்தது என்ன தெரியுமோ?

பெரியார் கல்விக்காக செய்தது என்ன தெரியுமோ?

‘கல்விக்காக பெரியார் என்ன செய்திருக்கிறார்? ஏதாவது நிதி கொடுத்திருக்கிறாரா?’ என்று சீமான் பேசிய காணொளியொன்றைப் பார்த்தேன். சீமான் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது, நமது அறியாமையைத்தான் காட்டும் என்றிருந்த நான், வேறு வழியில்லாமல்தான் இப்போது பதிவிடுகிறேன். காரணம், செஞ்சோற்றுக் கடன். இப்போது திருச்சியிலுள்ள ‘தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)’ எவ்வாறு தொடங்கப்பட்டதென்பது சீமானுக்குத் தெரியுமா? நான் அக்கல்லூரியில் படித்தவன் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

அந்தக் காலத்தில் திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி என பையன்களுக்கு நான்கு கல்லூரிகள்தான் இருந்தன. நான்குமே பிரபல கல்லூரிகள். செயிண்ட் ஜோசப் கல்லூரி 1844-லேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தவர்கள், பிரெஞ்சு ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள். தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களுக்கான கல்லூரியாக 1882-ல் ஆரம்பிக்கப்பட்டது பிஷப் ஹீபர் கல்லூரி. இந்த இரண்டு கல்லூரிகளிலும் கிறிஸ்துவர்களுக்கே முன்னுரிமை. அதனால் இந்து உயர்சாதியினருக்கு முன்னுரிமை கொடுத்து 1919-ல் ஆரம்பமானது நேஷனல் கல்லூரி. 1951-ல் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுத்து உருவானது ஜமால் முகமது கல்லூரி.

இந்நிலையில்தான், அந்த நான்கு கல்லூரிகளிலும் இடம் கிடைக்காத சூத்திரர்கள் எங்கே போய்ப் படிப்பார்கள்? அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கல்லூரியொன்றை ஆரம்பிக்க வேண்டுமென நினைத்தார் பெரியார். அதற்காக 1965-ல் திருச்சி காஜாமலை பகுதியில் 9.65 ஏக்கர் நிலத்தை 3.5 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். அதில் சில பழைய கட்டுமானங்களும் இருந்தன. முழு நேரமும் சமுதாயப் பணியிலுள்ள தன்னால் கல்லூரி நடத்த முடியாது என்பதால் அதை அப்படியே அரசாங்கத்திடம் ஒப்படைத்து கல்லூரி தொடங்கச் சொன்னார்.

அதன்படி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இக்கல்லூரி. அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம், 24.08.1965 அன்று கல்லூரியைத் தொடங்கி வைத்தார். பெரியார் இடம் வாங்கிக் கொடுத்ததால், கல்லூரிக்கு, ‘பெரியார் ஈவெரா கல்லூரி’ என்று அன்றைய அரசாங்கம் பெயர் சூட்டியது. இப்படி பெரியார் வாங்கிக் கொடுத்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிதான் இன்று ‘தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ யாகத் தன்னாட்சி பெற்று, இப்போது 52.62 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கிறது. இது சீமான் அவர்களுக்கான பதிவு அல்ல. உங்களுக்கான பதிவே.

செ.இளங்கோவன்

error: Content is protected !!