நாகாக்கள் ‘நாய் கறி உண்பவர்கள்’ என இழிவுபடுத்துவதா?.. கேவலம்- ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு கவர்னர் ரவி கண்டனம்!

நாகாக்கள் ‘நாய் கறி உண்பவர்கள்’ என இழிவுபடுத்துவதா?.. கேவலம்- ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு கவர்னர் ரவி கண்டனம்!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும், தமிழக கவர்னர் ஆர். என் ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவத்தில் இன்று வரை கருத்து மோதல் நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களை கவர்னர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில் நாகா இன மக்களை திமுக அமைப்புச் செயலரான ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியதாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் பதிவு, தமிழ்நாட்டின் இன்னொரு அரசியல் சர்ச்சைக்கு வழிக்காட்டியிருக்கிறது.

அதாவது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகா இன மக்கள் குறித்து அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், என இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.பாரதியின் இத்தகைய பேச்சுக்குத்தாம்ன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கவர்னர் ரவி, ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் , ‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு.பாரதியை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் ஆர்.எஸ்.பாரதி மேடை ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோவில், “இங்கே உட்கார்ந்து இருக்கும் ஆளுநர் நம் ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்றே செயல்படுகிறார். எத்தனையோ ஆளுநர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஆளுநர் வேண்டுமென்றே வம்புக்கு சண்டைக்கு இழுக்கிறார். நாம் அனுப்புகிற மசோதாக்களை கூட கையெழுத்து போட முடியாது என்கிறார்.

நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா… ஊரைவிட்டே விரட்டி அடித்தார்கள். நாகாலாந்து காரன் நாய் கறி துன்னுவான். நாய்க்கறி தின்பவனுக்கே அவ்வளவு சுரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினான் என்றால்… தமிழனுக்கு எவ்வளவு சொரணை இருக்கும். அவரை வெளியே அனுப்பும் நாளில், அங்கே தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்” என்று ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார்.

ராஜ்பவனின் ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியான ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பதிவு, தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் வெளியாகி இருக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி முன்னதாக நாகாலந்தில் பணியாற்றியவர். அந்த வகையில் நாகா மக்களுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் அவர் பதிவிட்டிருப்பது புதிய சர்ச்சைகளை கிளப்ப உள்ளது என்று நம்பலாம்.

error: Content is protected !!