தீபாவளி பாதுகாப்பு மற்றும் முதலுதவிக் குறிப்புகள்!

தீபாவளி பாதுகாப்பு மற்றும் முதலுதவிக் குறிப்புகள்!

ளி, உற்சாகம், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளின் பண்டிகையான தீபாவளித் திருநாள் நம் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் மிக முக்கிய அங்கமான பட்டாசுகளை வெடித்து மகிழும் வேளையில், பாதுகாப்பைக் கடைப்பிடிப்பது தலையாய கடமையாகும். விபத்துகளைத் தவிர்த்து, நாமும் நம் அன்புக்குரியவர்களும் நலமுடன் இருப்பதற்கு, சில அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், எதிர்பாராமல் விபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி விவரங்களையும் அறிவது மிகவும் அவசியம்.  இதையொட்டி பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை , தீபாவளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடிட வழங்கியுள்ள முக்கியமான முதலுதவிக் குறிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் இதோ.

பாதுகாப்பாகத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடிட சில முக்கியமான முதலுதவிக் குறிப்புகள்

1. பட்டாசு மற்றும் மத்தாப்புகளால் தீக்காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

கண்காணிப்பும் பொறுப்பும்:

  • குழந்தைகள், சிறார், சிறுமியரை பெரியோர்களின் மேற்பார்வையின்றி பட்டாசு மற்றும் மத்தாப்பு கொளுத்த அனுமதிக்கக் கூடாது.
  • கட்டாயம் பெரியோரின் மேற்பார்வையிலேயே அவர்கள் பாதுகாப்பாகப் பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • சிறார் சிறுமியரை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் பெரியோரே, கையில் பட்டாசு வைத்து வெடிப்பது, கையில் ராக்கெட் விடுவது போன்ற காரியங்களை அறவே தவிர்த்து விட வேண்டும்.
  • தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைகள் தங்களின் வீர தீர செயல்களைக் காட்டுவதாக எண்ணி, கையில் அணுகுண்டு வெடிப்பது, பெரிய சரத்தை கையில் தூக்கி எரிவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சரியான இடம் மற்றும் உடை:

  • பட்டாசு / மத்தாப்பு வெடிக்கும் இடத்தில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க வேண்டாம்.
  • பட்டாசு மத்தாப்பு கொளுத்துமுன் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாடைகளைத் தவிர்க்க வேண்டும். தரையில் தட்டும் பேண்ட்கள், தொல தொலவெனத் தொங்கும் துப்பட்டாக்கள், வேட்டிகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
  • நல்ல டைட் ஃபிட் ட்ரெஸ் – டீ சர்ட் / ட்ராக் ட்ரவுசர் போன்றவற்றை போட்டுக் கொள்வது நல்லது.

முன்னெச்சரிக்கை:

  • பட்டாசு / மத்தாப்பு கொளுத்தும் இடத்தில் வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • எப்போதும் வெடிக்காத பட்டாசு/ மத்தாப்பு போன்றவற்றை மீண்டும் கொளுத்தத் தீமூட்ட முயற்சி செய்யக் கூடாது.

2. தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

உடலில் தீப்பற்றினால் (STOP – DROP – ROLL):

  • உடுத்தியிருக்கும் துணியில் தீப்பற்றிக் கொண்டால், அது வேட்டியாக இருப்பின் உடனே யோசிக்காமல் வேட்டியை அவிழ்த்து தூர எரிந்து விட வேண்டும்.
  • ஒருவேளை சட்டையில் தீப்பற்றிக் கொண்டாலோ அல்லது சேலையில் அல்லது சல்வாரில் தீப்பற்றினால் உடனே:
    • நின்ற இடத்தில் இருந்து அப்படியே கீழே படுத்துக் கொண்டு உருள வேண்டும். (STOP – DROP – ROLL – நிற்க – கீழே படுக்க – உருளுக)
    • தீ முழுவதுமாக அணையும் வரை இவ்வாறு முன்னும் பின்னும் உருண்டு கொண்டே இருக்க வேண்டும்.
  • தீயைக் கை கொண்டு தட்டி அணைப்பது அல்லது தண்ணீருக்காக அலைந்து திரிந்து நேரத்தை வீணடிப்பது தவறு. இவ்வாறு உருளுவதால், தீ எரிவதற்குரிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் தீ தானாக அணைந்து விடும்.

முதலுதவி:

  • தவிர்க்க வேண்டியவை: ஒருபோதும் தீக்காயத்தில் பல் விலக்கும் பேஸ்ட், ஃப்ரிட்ஜில் வைத்த மாவு, ஐஸ் கட்டி, இங்க், வெண்ணெய் போன்றவற்றைத் தடவக் கூடாது. இவை வெப்பத்தைத் தக்க வைத்து காயத்தைப் பெரிதாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
  • உடனடி குளிர்வித்தல்: உடனடியாக தீக்காயம் பட்ட இடத்தை ஓடும் குழாய் நீரில் காட்டி குளிர்விக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு இருபது நிமிடங்கள் தீக்காயத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.
  • உடை/ஆபரணம் அகற்றுதல்: கை கால்களில் தீக்காயம் பட்டிருப்பின், உடனடியாக கை வளையல்கள், மோதிரம், வாட்ச், கொலுசு, இறுக்கமான உடை போன்றவற்றை கழட்டி விட வேண்டும். (காரணம் – விரைவில் தீக்காயம் வீங்கக் கூடும்).
  • மருத்துவமனை சிகிச்சை: குளிர்வித்த பிறகு, சில்வர் சல்ஃபா டயசின் களிம்பைப் பூசி அதற்கு மேல் ஒட்டிக்கொள்ளாத ட்ரெசிங் (STERILE NON ADHESIVE BANDAGE) போட்டு மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
  • ஒருபோதும் பஞ்சு வைத்து அமுக்கக் கூடாது. வேறு ஏதேனும் மூலிகைத் தைலங்கள் உபயோகிக்கக் கூடாது.

3. கண்களில் காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • கண்களைச் சுத்தமான குளிர்ச்சியான நீர் கொண்டு நன்றாக அலச வேண்டும்.
  • கண்களைக் கட்டாயம் தேய்த்து விடக்கூடாது. இது பட்டாசுத் துகள்களை மேலும் உள்ளே அழுத்தி விடக்கூடும்.
  • இரு கண்களையும் சுத்தமான துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
  • கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் எந்தப் பட்டாசுத் துகள்களையும் நீங்களாக எடுக்க முயற்சிக்கக் கூடாது.
  • உடனடியாக கண்கள் நல சிறப்பு நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

4. தீக்காய விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றவை (நீரிழப்பு):

  • தீக்காயத்தின் அளவைப் பொறுத்து, நமது உடலில் இருந்து நீரிழப்பு (Dehydration) தீவிரமான அளவு ஏற்படும்.
  • உடலின் பரப்பளவில் 10%க்கு மேல் உள்ளாகும் தீக்காயங்களுக்கு கட்டாயம் மருத்துவமனையில் அட்மிஷன் செய்து ரத்த நாளம் வழி க்ளூகோஸ் ஏற்ற வேண்டும். குழந்தைகள், சிறார், சிறுமியரைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • தொற்று ஏற்படாமல் இருக்க முறையான மருத்துவ சிகிச்சை செய்து அதற்குரிய ஆண்டிபயாடிக் மருந்துகள், களிம்புகள் பூசப்பட வேண்டும். டிடி ஊசி போடப்பட வேண்டும்.

இனிய தீபாவளித் திருநாளை, மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து, சொந்தங்களுடன் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் கொண்டாடிட வாழ்த்துகிறேன்.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

Related Posts

error: Content is protected !!