‘பிரேக் ஃபாஸ்ட்’:காதலைக் கொண்டாடும் காந்தி கிருஷ்ணாவின் புதிய படைப்பு!
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற ரசனைமிகு படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிரேக் ஃபாஸ்ட்’ (Breakfast) என்ற அழகான காதல் காவியத்துடன் மீண்டும் களமிறங்கியுள்ளார். புதுமுகங்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:
இன்றைய தலைமுறை காதலும்… தீர்வும்!
இயக்கநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா பேசுகையில், “இது முழுக்க முழுக்க இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான காதல் கதை. இன்றைய இளைஞர்கள் காதலைப் பார்க்கும் விதம், பிரிவை எதிர்கொள்ளும் முறை ஆகியவற்றை இதில் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளேன்.

கதைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே புதுமுகங்களைத் தேர்வு செய்தேன். ராணவ் மற்றும் ரோஸ்மின் இருவரும் எனது எதிர்பார்ப்பை மீறி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் பனிப்பொழிவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். ‘எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ (Accept the Reality) என்பதுதான் இப்படத்தின் மையக்கரு” என்றார்.
பிரிந்தவர்களைச் சேர்க்கும் ‘பிரேக் ஃபாஸ்ட்’!
நாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் புகழ் ராணவ் கூறுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கமிட்டான படம் இது. சிறு வேடங்களில் நடித்த எனக்கு, காந்தி கிருஷ்ணா சார் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாவது ஒரு கனவு போலிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு, பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள்; விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதிகள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வார்கள்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நாயகி ரோஸ்மின் பேசுகையில், “மலையாளத்தில் நடித்திருந்தாலும், தமிழில் இதுதான் எனது முதல் படம். எனது சினிமா பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும்” என்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திக் மோகன், இதில் தனக்குச் சவாலான ரொமான்ஸ் காட்சிகள் இருந்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
இடைவெளி ஏன்? – இயக்குநர் விளக்கம்
தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்ற கேள்விக்கு பதிலளித்த காந்தி கிருஷ்ணா, “சினிமாவில் இது போன்ற இடைவெளிகள் எதிர்பாராதவை. ‘கரிகாலன்’, ‘இன்ஜினியர்’ போன்ற பெரிய புராஜெக்ட்கள் சில காரணங்களால் தள்ளிப்போயின. இந்தப் படத்திற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், நான் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பவன். தற்போது என்னிடம் 13 முழுமையான திரைக்கதைகள் தயாராக உள்ளன. இனி தொடர்ந்து படங்கள் வரும்” என்றார்.
பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிரேக் ஃபாஸ்ட்’, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


