டைநோ சார்ஸ்- விமர்சனம்!

டைநோ சார்ஸ்- விமர்சனம்!

சில பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட கண்டன அறிக்கையில் ‘வட சென்னை பகுதியை ரவுடிகள், வன்முறைக் கும்பல்கள் வாழும் இடமாக தமிழ் சினிமாவில் பல படங்கள் சித்தரிக்கின்றன என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டுவருகின்றன.. வட சென்னை சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? வட சென்னையில் வாழும் மக்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்களா? வட சென்னை பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமா? அப்படி உங்கள் கூற்றுப்படி வட சென்னையில் சமூக விரோதிகள் மட்டுமே வாழ்வதாக வைத்துக் கொண்டால் வட சென்னையை தரம் தாழ்த்தி படமெடுப்போரே வடசென்னையின் தரம் உயர்த்த எப்போதாவது சிந்தித்ததுண்டா..? என்று கேட்டதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வட சென்னையை மையமயாக வைத்து வந்திருக்கும் கேங்ஸ்டர் டிராமா படங்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறது டைனோசர்ஸ். ஆனால் கதையை கையாண்ட விதத்தில் தனித்து நிற்கிறது இப்படம் என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

அதாவது ஹீரோ  ‘Die No Sirs’ என்னும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நாயகன் மண்ணு என்கிற ‘ஆற்றல் மண்’ (உதய் கார்த்திக்) ரிஷி ஆகியோர் பிரதர்ஸ். இவர்களுக்கு (ஸ்ரீனி) மாறா என்ற பெரிய ரவுடி குளோஸ் ப்ரண்டாக இருக்கிறார். மெயின் வில்லன் மானேக்‌ஷாவிடம் அடியாளாக இருக்கும் மாறா மேரேஜூக்குப் பிறகு திருந்தி வாழ முயல்கிறார். இது பிடிக்காத மானேக்‌ஷா திட்டம் போட்டு தனது எதிரியை வைத்து மாறாவை போட்டுத் தள்ளி விடுகிறார். இந்த கொலைக்கு ரவுடியிஸம் கொஞ்சமும் பிடிக்காத ஹீரீஉதய் கார்த்திக்கும் ஒரு விதத்தில் காரணமாகிறார். இதையடுத்து வெகுண்டெழும் உதய் கார்த்திக் தன் அண்ணனின் நண்பன் மாறாவின் கொலைக்கு பழி தீர்ப்பது எப்படி? என்பதே டைனோசர்ஸ் படத்தின் கதை.

புது முக ஹீரோ உதய் கார்த்திக், ஏற்றுக் கொண்ட கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் அதிலும் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்து கொண்டு ஒட்டு மொத்த ரவுடிக் கூட்டத்தை சமாளிப்பதெல்லாம் ரசிக்கும்படியே இருக்கிறது. . நாயகி சாய் பிரியா தேவா எடுபடவில்லை. என்றாலும் இருவருக்குமான காதல் காட்சிகள் அழகு. காதலை சொல்லும் விதம் க்யூட். பைக்கில் செய்யும் ஸ்டண்ட் ரசிக்க வைத்தது. முழுக்க நட்பிலும், தியாகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கும் ரிஷியின் பாத்திரம் மனம் கவர்கிறது. மாறாவின் மரணம் நிச்சயிக்கப்படும் இடமும் அதற்கான கவுண்ட் டவுனும் அற்புதமான நிமிடங்கள். அந்த ட்ரீட்மென்ட்டுக்காகவே இயக்குனர் மாதவனைப் பாராட்டலாம்.

போபோ சசியின் இசை மற்றும் ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரும்பலம். அதிலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்..

அடிதடியுடன் கூடிய சென்னையின் எதார்த்த முகங்களை அச்சுப் பிசகாமல் அப்படியே பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் மாதவன். முதல் பாதியை கேஷூவலாகக ஆரம்பித்து பின் வன்முறை என்னும் சீரியஸ் கதைக்குள் பயணித்து அட்டகாசமான அதிரடி நிறைந்த இன்டர்வல் காட்சியோடு முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியையும் கலகலப்பாக ஆரம்பித்துப் போகப் போக பழி வாங்கும் படலத்தை நகைச்சுவை கலந்த திரைக்கதையோடு சற்று குழப்பம் நிறைந்த காட்சி அமைப்புகள் மூலம் கொடுத்து படத்தை முடித்துள்ளார்.

ஆனால் ஒரு தாதாயிச படத்தில் காமெடி நெடி தூக்கலாக இருப்பதால் இப்படத்தின் வெயிட் குறைந்து விடுவதென்னவோ நிஜம்

மார்க் 3/5

error: Content is protected !!