அனந்தபுரத்தில் அரும்பிய தாமரையான தினமலர் நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே!

அனந்தபுரத்தில் அரும்பிய தாமரையான தினமலர் நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே!

மிழ்நாட்டு மக்களால் இன்றைக்குப் பெரிதும் நேசிக்கப்படும், ‘தினமலர்’ நாளிதழ், இதே செப்.,6, 1951 காலையில்தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் மலர்ந்தது. டி.வி.இராம சுப்பையர் இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர்.

நாஞ்சில் நாட்டில் தமது திறமையால் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டவர் டி.வி.ஆர்., உடனடியாக லாபம் தரும் பல்வேறு தொழில்களை விட்டு விட்டுக் கொஞ்சமும் அனுபவம் இல்லாத, நெருக்கடிகள் மிகுந்த இந்த நச்சுப் பிடித்த தொழிலுக்கு ஏன் வந்தார்? இந்த ஆசை அவரை எப்போது ஒட்டிக் கொண்டது? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள, 1951க்கு முன் கொஞ்ச காலம் பின்னோக்கிச் சென்று வர வேண்டியுள்ளது. இதுபற்றி டி.வி.ஆரே கூறியும் உள்ளார்:( தகவல் உதவி: கட்டிங் கண்ணையா )

நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் தீவிரமாக ஈடுபடவும், மக்களுக்குத் தொண்டு செய்யவும், ஒரு பத்திரிகை வேண்டும் என்று என் மனதில் ஏற்கனவே ஒரு எண்ணம் உண்டு அது அவ்வப்போது மேலும் வலுப்பட்டதால் அதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினேன். சில நண்பர்களிடம் இது பற்றி ஆலோசனை செய்தேன். பெரும்பாலும் அதற்கு எதிராகவே கருத்துக் கூறினர். ஊக்கம் தருவார் யாரும் இல்லை. அதன் பாதகங்கள் பற்றி அச்சுறுத்தியவர்கள்தான் அதிகம். பத்திரிகை நடத்திப் பணத்தை இழந்து, வாழ்க்கையில் நொடித்துப் போனவர்கள் பற்றியெல்லாம் விரிவாக கூறினர். நாகர் கோவிலில் வழக்கறிஞர் சிதம்பரம்பிள்ளை, ‘தமிழன்’ என்று ஒரு வார இதழை இரண்டு மூன்று ஆண்டுகள் நடத்தி மேலும் நடத்திச் செல்ல முடியாமல் கைவிட்டு விட்டார். நேசமணி, ‘திங்கள்’ என்ற ஒரு வார இதழை சிறிது காலம் நடத்திப் பின் நிறுத்தி விட்டார். மாகலிங்க முதலியார், ‘தேவி’ என்ற வார இதழ் தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டார். இதுதான் நாஞ்சில் நாட்டின் அந்தநாள் நிலைமை.

இந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே ஒரு தமிழ் நாளிதழைத் தொடங்கி நடத்த நினைப்பவனைப் பைத்தியக்காரன் என்றே நினைத்தனர். என் இயற்கை சுபாவப்படி, நஷ்டமே வருவது என்று வைத்துக் கொண்டாலும், எவ்வளவு நஷ்டம் வரும், அந்த நஷ்டத்தை நம்மால் தாங்க முடியுமா, அதற்குள்ள பணபலம் நம்மிடம் உள்ளதா என்று கணக்குப் போட்டேன். மாதம் ஆயிரம் ரூபாய் நஷ்டம் வரலாம் என்று தெரிந்தது. இதன்படி பத்திரிகை மக்களிடம் வேரூன்றும் வரையான (உத்தேசம் ஐந்து வருட காலங்களுக்கு) 60 ஆயிரம் ரூபாய் நஷ்டம் வரும். அதை நம்மால் தாங்க முடியுமா என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது. அப்போது இருந்த என் பொருளாதார நிலையில் தாங்க முடியும் என்ற நிலைமை இருந்தது.

உடனே மனத்தை உறுதி செய்து கொண்டு, யார் சொன்னதையும் பொருட்படுத்தாமல், விரைவாகச் செயலில் இறங்கி விட்டேன். என்னுடைய பள்ளித் தோழரின் தம்பியான ஆசாரிப்பள்ளம் குழந்தை சாமி என் எண்ணத்தை அறிந்து என்னிடம் வந்தார். அவர், ‘தினசரி’யில், சொக்கலிங்கத்தின் கீழ் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர். பத்திரிகை தொடங்க அவரை ஆசிரியராக ஏற்றுக் கொண்டால் ஒத்துழைப்புத் தருவதாவும் கூறினார். அவரும் சில கணக்குகளையெல்லாம் சொல்லி ஆறு மாதத்துக்குள் மாதம் ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று புள்ளி விவரங்களோடு கூறினார். நான் வெளிப் பார்வைக்குச் சரியென்று சொன்னாலும், மாதம் ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்ற தீர்மானத்துடனேயே செயலில் இறங்கினேன்.

இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் வஞ்சியூர் நீதிமன்றத்திற்கெதிரில் ஓர் இடமும் பார்த்து, வாடகை பேசி முன் பணமும் கொடுத்துச் சாவியும் வாங்கி ரெடியாகிவிட்டது. அச்சு இயந்திரத்தை கொண்டு போய் திருவனந்தபுரத்தில் நிர்மாணித்து, பத்திரிகை தொடங்கத் தயாராகிவிட்டேன்; பெயர் வைப்பது தான் பாக்கி. பெயர் வைப்பதற்கு நானும், என் தமிழ் ஆசிரியர் சுசீந்திரம் தசாவதானி ஆறுமுகம் பிள்ளையும் யோசித்தோம். அவர், ‘பொன்மலர்’ என்று பெயர் வைக்கலாமென்றார். நான் நாளிதழ் என்பது பெயரிலேயே தொனிக்க வேண்டுமென்று சொன்னேன். இறுதியில், ‘தினமலர்’ என்ற பெயர் வைப்பதாக முடிவாகியது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, 1951ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி திறப்பு விழா நடத்துவது என்று முடிவு செய்தேன். அன்று திருவிதாங்கூர் முதல் அமைச்சராக இருந்த கேசவனைத் திறந்து வைக்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர் இசைவது போலத் தோன்றியது.

நான், ஒரு நாளிதழ் என்று விளக்கினேன். ‘டெய்லி ஆணோ?’ என்று மலையாளத்தில் என்னிடம் கேட்டு மெதுவாக நழுவி விட்டார். அவர், ‘கேரளகவுமதி’ என்ற மலையாளப் பத்திரிக்கையின் உரிமை யாளர்களில் ஒருவர். அந்த இதழ்,முதன் முதலாக மாத இதழாவும், பிறகு மாதம் இரு முறையாகவும், பிறகு வார இதழாகவும் வெளிவந்து, பின் நாளிதழாகி, மிகுந்த கஷ்டத்துடன் வளர்ந்த ஒரு நாளிதழ். நாளிதழ் என்ற உடன், இதன் வெற்றியில் அவருக்கு அச்சம் ஏற்பட்டதோ என்னவோ. தன் கையால் திறந்து, பின் அதற்கு ஏதாவது ஏற்பட்டால் தமக்கு இழுக்கு வருமோ என்றுதான் நழுவினாரோ என்று நான் அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து தெரிந்துகொண்டேன். பிறகு, என் ஆப்த நண்பர், பிரபலத் தமிழறிஞரான வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு விழா நடத்தினேன்.

✍எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்: (நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்)

ஆக ‘தினமலர்’ மலர்ந்தது தமிழ்நாட்டில் அல்ல; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில். டி.வி.ஆர்., பத்திரிகையைத் தொடங்கிய இடமும், பின்னர் அதன் கிளைகளை விரிவாக் கிய இடங்களும், இவருக்கு முன் தமிழ்ப் பத்திரிகை கால் ஊன்றாத புதிய இடங்கள்தான் என்பதையும் கவனிக்க வேண்டும். முழுவதும் மலையாளிகளே நிறைந்த அவர்கள் ராஜ்யத்தில், மலையாளப் பத்திரிகைகள் அன்றைக்கே கொடிகட்டிப்பறந்த அந்தக் கோட்டையில், ஒரு தமிழ் நாளிதழ் தொடங்கப்படுகிறது. ஆரம்பவிழா டி.வி.ஆரின் செல்வாக்கை நமக்கு உணர்த்தவே செய்கிறது.

விழாவிற்குத் திருவிதாங்கூர் சர்வ கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியர் ராவ்சாகிப் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமை தாங்கினார். திருவனந்த புரம் மேயர் பெர்ணாண்டஸ், மாஜி அரசாங்கப் பிரதமச் செயலாளர் சி.ஒ.மாதவன், லஷ்மண சாஸ்திரிகள், திருவனந்தபுரம் கலெக்டர் இராமானுஜம் ஐயர், அட்வகேட் சுப்பிரமணியபிள்ளை, தென்னிந்திய கார்ப்பரேஷன் காளியப்பச் செட்டியார், அரசாங்கச் செயலாளர் வெங்கட சுப்பிரமணிய ஐயர், திருவிதாங்கூர் பேங்க் மேனேஜிங் டைரக்டர் வேதமுத்து மற்றும் நகரப்பிரமுகர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள தமிழர்கள் ஏராளமாக விழாவில் கலந்து கொண்டனர்.

✍️©️நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!