சசிகலா-வுக்கு ஜெயிலில் ஸ்பெஷல் சலுகை! – மறுக்கிறார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி !

சசிகலா-வுக்கு ஜெயிலில் ஸ்பெஷல் சலுகை! – மறுக்கிறார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி !

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் மற்ற கைதிகள் போல சாதாரண கைதியாக சசிகலா நடத்தப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள். எனவே சசிகலா கைதி உடையில் தண்டனையை அனுபவித்து வருவதாக கருதப்பட்டது. ஆனால் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து எல்லா சலுகை களையும் அனுபவித்து வருவதை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். அவர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு அனுப்பிய 2 கடிதங்களில் சசிகலா என்னென்ன சொகுசு வசதிகளை சிறைக்குள் அனுபவித்து வருகிறார் என்பதை பட்டியலிட்டு இருந்தார். இதன் மூலம் சிறைக்குள் சசிகலாவுக்கு நவீன வசதிகள் கொண்ட சமையல் அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சசிகலாவுக்காக சிறைத்துறை அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கி கொடுத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேற்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

பொதுவாக முறைகேடாக சொத்து சேர்த்த வழக்குகளில் சிக்குபவர்களுக்கு ஒரே ஒரு அறைதான் கொடுக்கப்படும். அதற்குள் கைதிகளுக்கு ஏற்ப ஒரு நாற்காலி, மேஜை வழங்கப்படும். வேறு எந்த சிறப்பு சலுகைகளும் கொடுக்கப்பட மாட்டாது.ஆனால் சசிகலா தரப்பில் பணம் வாரி இரைக்கப்பட்டதால், அவருக்கு தேவையான எல்லா வசதிகளும் சிறைக்குள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. சிறைச்சாலை பெண்கள் பிரிவின் முதல் மாடியில் அவருக்கு சமையல் அறை, படுக்கை அறை, பார்வையாளர் சந்திப்பு அறை, உடமைகள் வைக்கும் அறை, புழங்குவதற்கு ஒரு அறை என மொத்தம் 5 அறைகள் கொடுக்கப்பட்டிருந்தது.

இவை தவிர சசிகலா நடமாடுவதற்காக தாழ்வாரத்திலும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.மேலும் 5 அறைகள் தவிர தனக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் சசிகலா சிறைக்குள் வரவழைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அவரது படுக்கை அறையில் 2 பேர் படுக்கும் வசதி கொண்ட புதிய கட்டிலும் அதில் புதிதாக வாங்கப்பட்ட சொகுசு மெத்தையும் இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் புதிய மின் விசிறி, வாட் டர்-ஹீட்டர், மினரல் வாட்டர் கேன், இன்ஸ்டன்ட் காபி மேக்கர் ஆகியவையும் சசிகலா அறைக்குள் இருந்ததாக டி.ஐ.ஜி. ரூபா பட்டிய லிட்டுள்ளார். மேலும் சசிகலா அறைக்கு கேபிள் டி.வி. இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாம். அதிலும் அதி ரக எல்.இ.டி. தொலைக்காட்சி ஒன்றும் அங்கு இருந்தது. அதில் சசிகலா தினமும் தனக்கு பிடித்த படம் பார்த்தும், செய்தியை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குற்றவாளியான சசிகலா தங்கி இருந்த 5 அறைகளின் வீடியோ காட்சிகள் தொலைக் காட்சிகளில் வெளியானது. இந்த நிலையில் அறைக்குள் சசிகலா நைட்டியுடன் தூங்குவது மற்றும் நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ காட்சியை கன்னட தொலைக்காட்சியான பிரஜா டி.வி. ஒளிபரப்பியது. மேலும் சசிகலா சம்பந்தப்பட்ட 4 நிமிட வீடியோ காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பப்படும் என்று கன்னட டி.வி. சேனல்கள் அறிவித்து உள்ளன.

சசிகலா அனுபவித்து வந்த இந்த சிறப்பு சலுகைகள் வெளியில் தெரியவந்ததால் கர்நாடகா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த குழு விசாரணையை தொடங்கும் முன்பே பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை காட்டிக் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது. சசிகலாவுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக சமையல் அறை இடித்து அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. சசிகலாவுக்கு எதிராக தகவல்களை சொல்வார்கள் என்று கருதப்பட்ட 32 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இவை சசிகலா விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் பெங்களூர் சிறைச்சாலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகளை கர்நாடக மாநில அரசு நேற்று மேற்கொண்டது. சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா உள்பட 4 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட னர். இதைத் தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலிலும் நேற்று கடும் கெடுபிடிகள் காணப்பட்டன.

குறிப்பாக சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. நேற்று சசிகலா வி.ஐ.பி. போல நடத்தப்படவில்லை. மற்ற சாதாரண கைதிகள் நடத்தப்படுவது போல நடத்தப்பட்டார்.இதனால் சிறையில் நேற்று சசிகலா மிகவும் அவதிப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களூர் சிறையில் தினமும் காலை 7.30 மணிக்கு கைதிகளுக்கு உணவு வழங்கப்படும். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு வகை உணவு கொடுப்பார்கள். ஆனால் சசிகலா லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததால் தனியாக ஆள் வைத்து இட்லி அல்லது தோசை சமைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்றும் இன்றும் அவரால் விருப்பப்படி சாப்பிட முடியவில்லை.

நேற்று காலை சசிகலாவுக்கு ஜெயில் உணவான எலுமிச்சை சாதமும், டீயும் கொடுக்கப்பட்டது. மதியம் ராகி ரொட்டியும், தயிர் சாதமும் வழங்கப்பட்டது. இரவில் வழக்கமாக அவர் சப்பாத்தி சாப்பிடுவாராம். ஆனால் இரவு சாம்பார் சாதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.சிறப்பு சலுகைகளை ரகசியமாக பெற்ற சசிகலா, அசைவ உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 6 மணிக்கு எழுந்து விடும் சசிகலா 10 மணிக்கு பார்வையாளர்களை சந்திக்க தயாராகி விடுவார். தினமும் அவர் பார்வையாளர்களை சந்தித்ததாக தெரிகிறது.

ஆனால் நேற்று அவர் தன் அறையில் இருந்து வெளியில் வரவில்லை. தனது தனி அறைக்குள் முடங்கிக் கிடந்தார். சிறை ஊழியர்களிடும் அவர் நேற்று வழக்கம்போல பேசவில்லை. சசிகலாவுக்கு சிறைக்குள் இருந்த ஒரே பொழுதுபோக்கு டி.வி. பார்ப்பதுதான். அடுத்தடுத்து புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு வந்த டி.வி. கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவர் அறையில் இருந்த உயர்ரக எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டியும் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இப்படி அடுத்தடுத்து அனைத்து சலுகைகளும் பறிபோனதால் சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சிறப்பு உணவு இல்லை, சிறப்பு வசதிகள் இல்லை என்பன போன்ற காரணங்களால் சசிகலா சிறைக்குள் விரக்தி அடைந்தி ருப்பதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் சசிகலாவிடம் குமுறலை ஏற்படுத்தி இருக்கிறது. அவரிடம் ஓரிரு நாட் களில் அதிகாரிகள் குழு விசாரணை நடத்த உள்ளது. சசிகலா விவகாரத்திலும் ரூபா அதிரடியாலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகள் 2 பிரிவுகளாக இருப்பதால் அந்த சிறையில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக
கைதிகளில் ஒரு பிரிவினர் நேற்று சிறைக்குள் ரூபாவை மாற்றக்கூடாது என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. அந்த கைதிகளை சமாதானப்படுத்துவதற்குள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

சசிகலாவுக்கு தனி அறைகள் ஒதுக்கி கொடுத்ததாக தகவல் வெளியானதால் தற்போது அவர் சிறையில் உள்ள வேறு ஒரு சாதாரண கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. முன்பு நைட்டி மற்றும் சேலை யில் இருந்த அவர் தற்போது சிறைத்துறை கொடுத்துள்ள சீருடையில் உள்ளார். அவர் சிறை அறையில் இருந்து வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை. அவர் தங்கி உள்ள அறை அருகே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு அவர் சிறையில் நடமாடும் காட்சிகள் சிறை சூப்பிரண்டு மற்றும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறையில் உள்ள டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

டி.வி. பார்க்கும் வசதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அவர் பார்வையாளரை பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை வளாகத்தில் உள்ள தனி அறையில் அவர் பார்வையாளரை சந்திக்கக் கூடாது என்றும் சிறை வளாகத்தில் எல்லா கைதிகளும் பார்க்கும் இடத்தில் நின்று கொண்டே கம்பிக்கு வெளியே உள்ள பார்வையாளர்களிடம்பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வசதிகள் ரத்து செய்யப்பட்டதால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக அ.தி.மு.க ( அம்மா ) அணி பொது செயலாளர் புகழேந்தி சென்னை அடையாறில் உள்ள தினகரனை சந்தித்து பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலா பற்றி குற்றச்சாட்டுக்களை முன் வைத்த டிஐஜி ரூபாவைப் பற்றி பரபரப்புக் புகார் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம், “தனது துறை ரீதியான பிரச்சினையிலிருந்து தப்பிக்க சசிகலா பெயரை ரூபா பயன்படுத்தியுள்ளார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட 2 மெமோக்களில் இருந்து தப்பிக்கவே சசிகலாவின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார். சசிகலா பயன்படுத்தியதாக சமூகவலைத்தளத்தில் வெளியான அறையின் புகைப்படங்கள் பொய்யானது. அது பாகுபலி கிராபிக்ஸை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டு உள்ளது.

சட்டப்படி சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அது தவிர சசிகலாவிற்கு கூடுதலாக ஒன்றும் கொடுக்கப்பட வில்லை. அப்புறம் எப்படி அவர் அங்கு சமைக்க முடியும். நியாயம் இல்லாமல், இதயம் இல்லாமல் இப்படி பேசுகிறார்கள்.சசிகலா 20 ஆண்டுகள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். 63 வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் நிறைய சாப்பிட முடியாது. அவர் கொஞ்சம் தான் சாப்பிடுவார். இவரைப் பற்றி தொடர்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும்.

சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும். பரப்பன அக்ரஹாரா சிறை 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Related Posts