வேட்டி தினம்!

வேட்டி தினம்!

ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடை பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்டகாலமாய் நின்று நிலைத்தது வேட்டி. அது, தமிழர்கள் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு மட்டுமின்றி, பாரம்பரியத்தின் பகட்டான பதிவும்கூட. மானம் காத்ததுடன் மண்ணின் மணத்தை மாண்புற மலரச் செய்ததும் இந்த வேட்டிதான்.இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழைமையான ஆடைகளில் வேட்டியும் ஒன்றாகும். வேத காலத்தைச் சேர்ந்த நூல்களில் கி.மு. 1500 முதல் 500 வரை வேட்டியைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இது கி.மு. 3300 1,300ல் செழித்தோங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களால் அணிந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. இது தவுத்தா எனச் சம்ஸ்க்ருத மொழியிலும் தோத்தி என ஒரியாவிலும், ધૉતિયુ தோத்தியு எனக் குஜராத்தியிலும், চওৰকীয়কা சூரியா என அசாமிய மொழியிலும், ধুতি தூட்டி என வங்காள மொழியிலும், ಢೊತಿ/ಕಛ್ಛೆ ಪನ್ಛೆ தோத்தி அல்லது கச்சே பான்ச்சே எனக் கன்னட மொழியிலும்,‌ தோத்தர், அங்கோஸ்தர், ஆத்-செஸ்ச்சே அல்லது புத்வே எனக் கொங்கணி மொழியிலும், മുണ്ട് முந்த்து என மலையாளத்திலும், ధోతీ/పంచె தோத்தி அல்லது பன்ச்சா எனத் தெலுங்கிலும், धोतर தோத்தர் என மராத்தியிலும், ਲ਼ਾਛ லாச்சா எனப் பஞ்சாபி மொழியிலும் மற்றும் மர்தானி என உத்திரப் பிரதேசம், பீகார், டெராய், பகுதிகளிலும், வேட்டி எனத் தமிழிலும் அழைக்கப்படுகிறது.

என்னதான் விதவிதமான உடைகள் அணிந்தாலும், வேட்டி கட்டி நடக்கும்போது ஆண்களிடையே தோன்றும் கம்பீரமே தனி அழகு பிளஸ் கவர்ச்சி எனலாம். சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பாகவே நமது முன்னோர் வேட்டி மட்டுமே அணிந்து வலம் வந்துள்ளனர். எல்லாவற்றையும் விட தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடை என்றாலே அது வேட்டி தான். ஆனால் நாகரிக வளர்ச்சியாலும், தொழில்நுட்ப புரட்சியாலும் வேட்டி கட்டும் வழக்கம் மங்கி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டிக்கு பின்னால் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஒளிந்துள்ளது என்பதையும் நாம் மறந்துவிட வேண்டாம். வேட்டியை நமக்கு தந்த மகத்தான நெசவாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து அவர்களுக்கு உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.

இன்று தமிழர்கள் பேண்ட், ஜீன்ஸ், பெர்முடா, கைலி, லெகின்ஸ், டிசர்ட், டாப்ஸ் என பல வகையான ஆடைகளை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் பழந்தமிழ் மக்கள் தம்முடைய சந்ததிகள் இதுபோன்ற நாகரிக ஆடைகளை அணிவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். பண்டையத் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பூவையும், தழையையும் கோத்து அதை ஆடையாக அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ”கொண்டைக் கூழைக் தண்தழைக் கடைசியர்”(புறம்-61), “அளிய தாமே சிறுவெள்ளாம்பல்!, இளையம் ஆகத் தழையாயினவே” (புறம்-248),”அணித்தழை நுடங்க ஓடி”(புறம்340), “ஆம்பூந் தொடலை அணித்தழை அல்குல்” (புறம்-341) போன்ற வரிகள் மூலம் இதை தெரிந்துகொள்ள முடிகின்றது.

மேலும் கம்பளி, பஞ்சு, பட்டு, ஒருவகை மலையெலியின் மயிர் போன்றவற்றாலும் நெய்யப்பட்ட ஆடைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. “உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; (புறம்-189) என்ற பாடல் அரசனுக்கும், வேடனுக்கும் உண்ணப்படும் பொருள் ஒரு நாழித் தானியமே. உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே என இடித்துரைக்கின்றது. வேட்டி அணியும் வழக்கம் அன்றே இருந்தது என்பதையும், அது அரசனுக்கும், விலங்குகளை வேட்டையாடி பிழைக்கும் வேடனுக்கும் சமமாகவே இருந்திருக்கின்றது என்பதும் இதன் மூலம் தெரிகின்றது. பொதுவாக தமிழ்ச் சமூகம் என்றில்லாமல் அனைத்து இடங்களிலும் இதுதான் இயல்பான போக்காக இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் இன்று வேட்டி என்பது இந்து பண்பாடு அது தமிழரின் பண்பாடு கிடையாது என சொல்லும் போக்கு உள்ளது. அது தவறான வாதமாகும். தமிழ் பேசும் மக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்தார்கள் என்பதையும், சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு நிலத்தில் தோன்றிய பண்பாடு அத்தோடு புவியியல் ரீதியாக இணைந்த மற்ற பகுதிகளுக்கும் பரவுவது தவிர்க்க முடியாதது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்தில் ஆன ஜரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேற்கத்திய பாணி உடைகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய பெருமை மற்றும் எதிர்ப்பின் சின்னமாக வேட்டி இருந்தது. மகாத்மா காந்தி சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக வேட்டியை ஊக்குவித்தார். அதை அணிந்தும் கொண்டார். இந்தியர்களை உள்நாட்டு ஆடைகளை அணிய ஊக்குவித்தார்.வேட்டி அணியும்போது அதனுடன் துண்டு அணியும் வழக்கம் உண்டு தமிழ் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் துண்டினை அணிந்திருப்பார்கள். ஆப்பிரிக்காவிலும் வேட்டி அணியப்படுகிறது பெரும்பாலான சோமாலியர்கள் மற்றும் அவ்வாறு இனத்தவர்கள் அணியப்படும் இந்த வேட்டிக்கு மகாவிசு என பெயரிட்டு உள்ளனர்.

இன்று மேற்கத்திய பாணி ஆடைகள் நகர்ப்புறங்களில் மேலோங்கி இருந்தாலும் கிராமப்புறத்தில் இன்றும் மத விழாக்கள் திருமணங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் வேட்டி இன்னும் பரவலாக அணியப்படுகிறது. நகர்ப்புறத்திலும் விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் ஆண்கள் வேட்டி அணிகிறார்கள்.முன்பெல்லாம் வேட்டி கட்டுவதில் உள்ள சிரம, பயணிக்கும் உண்டாகும் அசௌகரியங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் அதை அணிவதை முற்றிலும் தவிர்த்து வந்தனர். அதனை தவிர்க்க இன்றைய இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகைகளில் வேட்டிகளில் பெல்ட் மாடல், செல்போன் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பாக்கெட் என பல புதிய மாடல்களும் இளைஞர்களின் பார்வையை வேட்டி பக்கம் திருப்பியுள்ளது. எனலாம். இந்த எளிய மாடல் வேட்டிகள் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

வேட்டி என்பது பாரம்பரியம், எளிமை மற்றும் கலாசார அடையாளத்தின் சின்னமாக இந்தியாவில் இருக்கிறது. மேலும் மானம் காத்த வேட்டியை தந்த மகத்தான நெசவாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.எனவே இன்று ஒருநாள் மட்டும் வேட்டி அணிந்து ‘பவுசு’ காட்டிவிட்டு அதோடு நின்றுவிடாமல், அடிக்கடி வேட்டி கட்டுவதுதான் ‘மவுசு’ என்பதை உணர வேண்டும்.புதிய ஆடைகள் வாங்கும்போது தவறாமல் ஒரு வேட்டியாவது வாங்கிட வேண்டும். வாரத்தில் ஒருநாள் அல்லது 2 நாள் வேட்டி அணிந்து பணியாற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.நம் உணவில் இயற்கை வேண்டும் என்கிறோம், வாழ்வியலில் இயற்கை வேண்டும் என்கிறோம், சமைக்கும் எண்ணெய்யாக இருந்தால் கூட அதிலும் இயற்கையான செக்கு எண்ணெய் வேண்டும் என்கிறோம். ஆனால் உடையில் மட்டும், செயற்கையான ரெடிமேட் ஆடைகளை விரும்புகிறோம். அதை விரும்பக்கூடாது என்றில்லை; அவற்றோடு நம் பாரம்பரிய உடைகளையும் விரும்பி அணிய வேண்டும். அப்போது தான், அதை மட்டுமே நம்பி தொழிலில் இருக்கும் கைத்தறி நெசவாளர்கள் பிழைக்க முடியும். நம் பாரம்பரியமும், காலம் காலம் நிலைத்து நிற்கும். அண்டை மாநிலமான கேரளாவில் வேட்டி பயன்படுத்தும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேட்டி பயன்படுத்தப்படுவதில்லை. இன்றும் கேரள கோயில்களில் வேட்டி கட்டாயம். அதுமாதிரியான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாவது, வேட்டியை வேரூன்றி வளர்ப்போம்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!