June 2, 2023

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல்! வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11

இந்திய தலைநகரமான டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்து கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள்ளாக தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும்.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ”டெல்லி பேரவைத் தேர்தல் குறித்து 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1.46 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 90,000 அலுவலர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மொத்தம் 13,000 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

70 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட டெல்லிக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வ தற்கான கடைசி தேதி ஜனவரி 21 ஆகும். இதையடுத்து, பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது” என்றார்.

இதை அடுத்து டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

டெல்லி சட்டசபை தேர்தல்:

ஜனவரி 14ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஜனவரி 21ம்தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு

ஜனவரி 22ம் தேதி வேட்பு மனு பரிசீலனை

ஜனவரி 24ம்தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்

பிப்ரவரி 8ம்தேதி டில்லி சட்டசபைக்கு வாக்குப் பதிவு

பிப்ரவரி 11ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம். யாரையும் அவமரியாதையாக பேசமாட்டோம். எங்களுடைய பிரச்சாரம் நேர்மறையானதாக அமையும் என்று கூறினார்.

அதே சமயம் ஐந்தாண்டு காலம் டெல்லி மக்கள் அனைவரையும் ஏதாவது ஒன்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். பிரதமர் மோடி தலைமையில் அடுத்த அரசு டெல்லியில் அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூறினார்.