பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மரண தண்டனை: மத்திய அரசின் புதிய விளம்பர ஆயுதம்!

பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மரண தண்டனை: மத்திய அரசின் புதிய விளம்பர ஆயுதம்!

த்திய அரசு அண்மையில் பத்திரிகைகளுக்கான விளம்பரக் கட்டணத்தை 26% உயர்த்தி அறிவித்துள்ளது. இது ஊடகத் துறையினருக்கு வருமானத்தைப் பெருக்கி, குறிப்பாகச் சிறு பத்திரிகைகளைக் காப்பாற்ற உதவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரிய ஆங்கிலம் மற்றும் இந்தி நாளிதழ்களுக்கு இது சற்றே நன்மை பயக்கும் என்றாலும், உண்மை நிலை வேறு விதமாக உள்ளது

ஆம்,இந்த அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளும், அதன் பின்னால் மறைந்திருக்கும் அதிகாரத்தின் அரசியலும், கிராமங்கள் மற்றும் மாவட்டங்களின் குரலாக ஒலிக்கும் சிறிய, பிராந்திய மொழிப் பத்திரிகைகளின் கழுத்தை நெரிப்பதாகவே இருக்கின்றன. பெரிய நாளிதழ்களுக்கு இது “வரம்” என்றால், தமிழ், மலையாளம், கன்னடம், ஒடியா போன்ற மொழிப் பத்திரிகைகளுக்கு இது ஒரு கொடுமையான நகைமுரண்.

“பத்திரிகைகளைக் காப்பாற்றுகிறோம்” என்ற முழக்கத்தின் பின்னால், எதிர்க் குரல்களை அணைத்து மூச்சுத் திணறச் செய்யும் ஒரு தந்திரமே ஒளிந்திருக்கிறது. எலியை அணைத்துக் கொல்லும் பாம்பின் அணைப்பைப் போல, இந்த 26% உயர்வு ஒரு பொருளாதார உதவி அல்ல; மாறாக, இது ஊடக சுதந்திரத்தின் மரணப் பிடி.

1. நிபந்தனைகளின் சுமை: நிதியைத் தாண்டும் நஷ்டம்

புதிய விதிகளின்படி, இனி அரசு விளம்பரம் பெற வேண்டுமென்றால், ஒரு பத்திரிகை சராசரியாகக் குறைந்தது 25,000 பிரதிகள் விற்பனையாவதை நிரூபிக்க வேண்டும்.

  • சின்ன பத்திரிகைகள்: 8,000 முதல் 15,000 பிரதிகளே அச்சடிக்கும் சிறிய ஊடகங்கள், விளம்பரத்திற்காக 25,000 பிரதிகள் அச்சடித்தால், அது கூடுதல் செலவினத்தினால் கடுமையான நஷ்டத்தில் முடியும். அரசு விளம்பரம் கிடைப்பதற்கு முன்பே, நிதிச் சுமையைத் தாங்க முடியாமல் கதவைப் பூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது வருமானப் பெருக்கம் அல்ல; நஷ்டத்தைப் பெருக்கும் வழிமுறை.

2. நிர்வாகத் தடைகள்: இணையமும் ஆட்களும் இல்லாத கிராமங்கள்

அனைத்து ஆவணங்களையும் (காகிதச் சான்று, GST ரசீதுகள்) சமர்ப்பிப்பது, தினமும் பத்திரிகையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது போன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

  • சிறு பத்திரிகைகளுக்கு இதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்கும் வசதியில்லை. மேலும், பல கிராமப்புற அலுவலகங்களில் நம்பகமான இன்டர்நெட் இணைப்பு கூட இல்லை. ஒரு நாள் தவறினாலும், விளம்பரப் பேனலில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்த நிபந்தனைகள் வேண்டுமென்றே சிறிய ஊடகங்களைத் தகுதி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

3. தாமதமான கொடுப்பனவு: உயிர் பிரிந்த பிறகு பணம்

26% கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டாலும், விளம்பரப் பணம் ஆறு மாதம் முதல் ஒன்றரை வருடம் வரை தாமதமாகவே கிடைக்கிறது. ஒரு பத்திரிகையின் அன்றாடச் செலவுகள் உடனடியாகச் செலுத்தப்பட வேண்டிய நிலையில், இந்தத் தாமதமான கொடுப்பனவு, அதன் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கிறது. பத்திரிகை மூடிய பிறகு 26% கூடுதல் பணம் கிடைப்பதனால் என்ன பயன்? இது காலங்கடந்த ஆறுதல்.

4. சுதந்திரத்தின் விலை: “பேலன்ஸ்” என்னும் மிரட்டல்

இந்த நிபந்தனைகளிலேயே மிகவும் ஆபத்தானது, அதிகாரத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டினால் விளம்பரம் மறுக்கப்படும் என்ற எழுதப்படாத விதி. உள்ளூர் எம்.எல்.ஏ. அல்லது கலெக்டர் செய்யும் தவறுகளை எழுதினால், தொலைபேசியில் “சார், கொஞ்சம் பேலன்ஸ் வைங்க, பேனல் ரின்யூ பண்ணணுமே” என்று வரும் “செல்லமான அழுத்தம்”, பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும்.

  • இங்கே சிறு பத்திரிகைகள், பத்திரிகைச் சுதந்திரமா அல்லது உயிர் பிழைப்பா? என்ற ஆபத்தான தேர்வைச் சந்திக்கின்றன. சுதந்திரத்தைத் தேர்வு செய்தால், வருமானம் இன்றி மூடல்; உயிரைத் தேர்வு செய்தால், அரசின் கைப்பாவையாக மாற வேண்டும்.

இறுதி முடிவு: குரல் ஒடுக்குதலின் வெற்றி

இந்தக் கட்டண உயர்வு, ஒருபுறம் பெரிய பத்திரிகைகளை மேலும் பொருளாதார ரீதியாக வலுவாக்குகிறது. மறுபுறம், கடுமையான நிபந்தனைகளை விதிக்க முடியாத, நிதியாதாரமற்ற சிறு பத்திரிகைகளை மெல்ல மெல்ல ஒழித்துக் கட்ட முயல்கிறது.

கிராமங்கள் மற்றும் சிறிய ஊர்களில் உள்ள மக்களுக்கு உண்மையான செய்திகளைச் சொல்ல யாருமே இல்லாத ஒரு வெற்றிடத்தை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் இறுதி விளைவாக இருக்கும்.

மத்திய அரசு, “ஊடகங்களைக் காப்பாற்றுகிறோம்” என்று உலகிற்கு முழக்கமிட்டுக்கொண்டே, உண்மையிலேயே அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் பிராந்திய மொழிப் பத்திரிகைகளின் மூச்சைப் பிடுங்குகிறது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சந்திரபாரதி

Related Posts

error: Content is protected !!