32°C

டிசி (DC) – சினிமா விமர்சனம்!

admin Published: August 8, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:
தை, திரைக்கதை, லாஜிக் என எதுவுமே இல்லாமல் லாரி லாரியாக டம்மி ரத்தங்களை ஊற்றி கோலிவுட்டைச் சீரழிக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த ஜீவன் – இயக்குநர் என்று சொல்லிக்கொள்ளும் அருண் மாதேஸ்வரன், மற்றும் ‘வயலன்ஸ் வெறியன்’ என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் 2கே டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கைகோத்து, சன் பிக்சர்ஸ் தயவில் வழங்கியிருக்கும் மகா குரூரச் சினிமா இது என்றால் மிகையல்ல. அளப்பரிய அதிகாரம் கொண்ட காவல்துறையை டம்மி பீஸாகக் காட்டியிருப்பதுடன், காதுகூசும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படமாகவும் இது வந்துள்ளது. திரையரங்கில் ரசிகர் முகத்தில் பக்கெட் பக்கெட்டாக ரத்தத்தைத் தெளித்தாலும், இந்த அத்தனை வன்முறைக்கும் பின்னணியில் ஒளிரும் காதலால் இரண்டரை மணி நேர அவஸ்தையைச் சமாளித்து விடுவதில் படம் ஓரளவு ஜெயித்து விடுகிறது.   அதிவேக வன்முறை, நரக வேதனை, சாம்பல் நிற மனிதர்களின் உலகம் என ஒரு பிரத்யேக பாணியை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், ‘DC’ என்றால் என்னவென்று கேட்டால்… நாயகன் பெயர் ‘தேவதாஸ்’, நாயகி பெயர் ‘சந்திரா’ – ஆகிய இருவர் பெயர்களின் முதல் எழுத்தாம்!

கதைச் சுருக்கம்

வழக்கம்போல பெற்றோர் இல்லாத நாயகன் லோகேஷும் அவரது குழுவும் காவல்துறையிடம் இருக்கும் துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கிறார்கள். அப்படிச் சேர்த்த ஆயுதங்களை விற்பனை செய்து ஓய்விலிருக்கும் வேளையில், ஒரு போலீஸ் டீம், மகனின் படிப்புக்காக 7 லட்ச ரூபாய் வைத்திருந்த ஓர் அப்பாவைக் காசுக்காகக் கொன்று புதரில் வீசுகிறது. பாதிக்கப்பட்ட அந்த குடும்பம் லோகேஷிடம் உதவி கேட்க, காவல் நிலையத்திற்குள்ளேயே சென்று அந்த அதிகாரியைத் தன் குழுவினருடன் கொடூரமாக அடித்துக் கொல்கிறார் தேவதாஸ். போலீஸ் துரத்தலால் தன் குழுவுடன் அடைக்கலத்திற்காகச் சென்னைக்குச் செல்கிறார். அங்கு பாடகியான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மேல் ஈர்ப்பு வர, சில நாட்கள் அமைதி நிலவுகிறது. ஆனால், அவரைத் தேடிவரும் காவல்துறையால் சஞ்சனா சுட்டுக் கொல்லப்பட, லோகேஷ் சிக்கிக்கொள்கிறார்.
போலீஸிடமிருந்து தப்பித்து ஓடும் லோகேஷ் கனகராஜ், நரக வாழ்க்கையில் பாலியல் தொழில் செய்துவரும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். அவரது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவரைக் காப்பாற்றுகிறார். மீட்கப்பட்ட வாமிகா கபி, எங்கு செல்வதென்று தெரியாமல் லோகேஷுடன் பயணிக்கிறார்; வழியில் தன்னைச் சீரழித்த மருத்துவரை அவரே கொலையும் செய்கிறார். இதனால் காவல் துறை இருவரையும் சேர்த்துத் துரத்துகிறது. தேவதாஸ் ஏன் இந்த வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்? காவல் துறைக்கும் கேங்ஸ்டர்களுக்கும் இடையிலான இந்த மோதல் எங்கு போய் முடிகிறது என்பதை விவரிப்பதே ‘டிசி’.
https://www.youtube.com/watch?v=2kntxizQIFI

நடிகர்களின் பங்களிப்பு

  • லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்): படத்தின் மிக முக்கியமான தூண். தமிழ்ச் சினிமாவின் வழக்கமான நாயகனுக்கான திரைப் ஆளுமையோ, ஆக்ஷன் ஸ்டாருக்கான தோற்றமோ அவருக்கு இல்லை. ஆனால், திரைக்குப் பின்னால் பல ஆண்டுகள் இயங்கிய அனுபவம் இருப்பதால், ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
  • வாமிகா கபி (சந்திரா): தன் நரக வாழ்க்கையின் வலியைத் தனது உடல்மொழியிலேயே மிகச் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார்.
  • சஞ்சனா ஏ.கே: அதிகப்படியான ஒப்பனையோடு அறிமுகமாகி சில காட்சிகளே வந்தாலும், அவரது முடிவு பார்வையாளர்களின் மனதைக் கனக்கச் செய்கிறது.
  • இதர நடிகர்கள்: தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ஜோஷி, அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

  • ஒளிப்பதிவு (முகேஷ் ஜி): ஆக்ஷன் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, படம் முழுவதும் ஒரே வண்ணக் கருப்பொருளைப் (Color Tone) பயன்படுத்திப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். வித்தியாசமான கோணங்களும் வேகமான கேமரா நகர்வுகளும் சாதாரண காட்சிகளையும் கவனிக்க வைக்கின்றன.
  • இசை (அனிருத்): படத்தின் மிகப்பெரிய பலமே அனிருத்தின் இசைதான். அதிரடி ஆக்ஷன் காட்சிகளைக் கூடச் சலிப்பிலாமல் ரசிக்க முடிகிறது என்றால் அதற்குப் பின்னணி இசையே காரணம். ‘They ain’t nobody’, ‘ஹேங்கோவா’, ‘பூம் பா டிகா’ போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.
  • படத்தொகுப்பு (ஜி. கே. பிரசன்னா): படம் முழுவதும் ரத்தகளறியாக இருந்தாலும், அதைச் சீரான வேகத்தில் கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.
  • சண்டைப்பயிற்சி (பிரபு – PC Stunts): ஆக்ஷன் காட்சிகளுக்குக் கடும் உழைப்பைத் தந்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக் காட்சி மிரட்டல் ரகம்!

பலமும் பலவீனமும்

ஒரு வன்முறை சார்ந்த சிகப்பு நிற உலகில், ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு விலையும், ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒரு அழுத்தமும் இருக்கும் கதையாக ‘டிசி’ அமைந்திருக்கலாம். அதற்கான பாணி, சூழல், சிறந்த நடிகர்கள், உலகத் தரத்திலான இசையமைப்பாளர் என அனைத்தும் இருந்தும், கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் துல்லியமான பதிலைச் சொல்லத் தெரியாத திரைக்கதையே படத்தின் பலவீனம். சிகப்பு நிறத்தின் பல்வேறு நிழல்களில் தன் குரலைப் பதிவு செய்ய நினைத்த இயக்குநர், வன்முறையை மட்டுமே பிரதானமாக நம்பியுள்ளார்.
சுருக்கமாக:
ரத்த வெறி ஆக்ஷன் பிரியர்களுக்கும், வித்தியாசமான க்ரைம் த்ரில்லர்களை விரும்புபவர்களுக்கும் மட்டும் ஏற்ற ஒரு ரத்தக் களறிப் படைப்பு!  
மார்க்: 3 / 5