தண்டி யாத்திரை தொடங்கிய தினமின்று!

தண்டி யாத்திரை தொடங்கிய தினமின்று!

காத்மா காந்தி தலைமையேற்று நடத்தியது தான் இந்திய விடுதலை போராட்டம். அதில் 1930-ல் தண்டியில் நடந்த உப்பு சத்தியாகிரகமே இந்திய  மக்களின் போராட்டமாக உருவெடுத்தது.

அதாவது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவில் உப்புக்கு வரி விதித்து வந்தது. ஏழை மக்களை கடுமையாக பாதித்த உப்பு வரி குறித்து காந்தியடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 1930 மார்ச் 2-ந் தேதி வைஸ்ராய்க்கு நீண்ட கடிதமும் எழுதினார். இதில், 9 நாளில் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கும் என்று முன்னறிவிப்பு செய்தார். மக்களின் மனங்களை துல்லியமாக உணர்ந்த காந்தியடிகள், உப்பு விஷயத்தை கையில் எடுப்பதே சுதந்திர போராட்டத்தில் சாமானிய மக்களையும் ஈடுபடுத்துவதற்கான சரியான வழி என்று கண்டுகொண்டார். தாம் தொடங்க இருக்கும் போராட்டம் குறித்து அரசாங்கத்தின் தலைமைக்கு முன்கூட்டியே விவரமாக தெரிவித்தார். காந்தியடிகள் அறிவித்ததைப் போல, 12 மார்ச் 1930 அன்று 80 தொண்டர்களுடன் 386 கி.மீ. குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரையை நோக்கி பயணம் தொடங்கியது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும், உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் காந்தியடிகளின் தண்டி யாத்திரை தொடக்கத்தை காண சபர்மதி ஆசிரமத்தில் குழுமியிருந்தனர்.

சற்றே கூன் விழுந்த ஒல்லியான அந்த உருவம்! இரும்புப் பூண் போட்ட மூங்கில் தடியைக் கையில் ஏந்திய அந்த உருவம்! வெளியில் வந்தவுடனேயே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் இடையே மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு புத்தெழுச்சி பரவியது. இவரது யாத்திரையில் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் பங்கேற்றனர். அப்போது காந்திக்கு வயது 61.

முதல் நாள் யாத்திரை தொடங்கி 11 கி.மீ. தூரம் கடந்த பிறகு, ஒரு ஏரிக்கரையில் சில நிமிடங்கள் காந்தியடிகள் ஓய்வு பெற்றார். அப்போது அங்கே உரையாற்றினார். காந்தியடிகளின் தமக்கை மகன் அவரது பைகளை கிராம தலையாரியிடம் சுமந்து வருமாறு கூறினார். இதனால் கடும் சீற்றமடைந்த காந்தியடிகள் தமது பைகளை தாமே சுமந்து நடக்க தொடங்கினார். தமது யாத்திரையின் முழு தூரத்தையும் எத்தகைய சிறு தடங்கலுமின்றி காந்தியடிகள் நடந்தே வந்தார்.

தண்டியை சென்றடைய 24 நாட்கள் பிடித்தன. நாட்டின் மொத்த கவனமும் காந்தியடிகள் பக்கம் திரும்பியது. தேசபக்த அலை இந்தியா முழுவதும் வீசியது. காந்தியடிகளின் தலைமையில் சத்தியாகிரகிகள் தண்டிக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் காந்தியடிகள், ‘நான் விரும்பியதை எடுத்துக்கொண்டு திரும்புவேன் அல்லது எனது செத்த உடல் சமுத்திரத்தில் மிதக்கும்’ என்று உணர்ச்சி பொங்க முழங்கினார்.

ஏப்ரல் 6-ந் தேதி 1930-ம் ஆண்டு காந்தியடிகள் தாம் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்க குழுமியிருந்தனர். சிறிது நேரம் கடலில் நீந்திய காந்தியடிகள், கடலில் இருந்து வெளியே வந்தார். காந்தியடிகள் கீழே குனிந்து கைப்பிடி அளவு உப்பை அள்ளி எடுத்தார். அடுத்து நின்றிருந்த சரோஜினி நாயுடு உணர்ச்சிக் கடலில் மூழ்கியவராய், ‘அடிமைத் தளையை நீக்க வந்த இரட்சகர் வாழ்க’ என்று தம்மை மறந்து பலமுறை முழங்கினார்.

உப்புச் சட்டம் உடைத்தெறியப்பட்டது. உப்புச் சட்டத்தை மீறுமாறு நாட்டு மக்களுக்கு அரைகூவல் விடுத்தார். பணி முடிந்ததும் காந்தியடிகள் அந்த இடத்தில் இருந்து விலகிக்கொண்டார். இந்தியாவிற்கு ஒரு சைகை கிடைத்து விட்டது. கடற்கரையில் இருந்து சிறிதளவு உப்பை, சட்டத்தை மீறி எடுத்ததன் மூலம் இந்தியர் அனைவருடனும் தொடர்பு கொண்டு விட்டார்.

சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீசாரின் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனர். மரத்தடி நிழலில் சத்தியாகிரகிகளோடு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த காந்தியடிகள் உள்ளிட்டோரை ஆங்கிலேய போலீசார் கைது செய்தனர். காந்தியடிகள் பூனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியடிகள் கைது செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பரவியது. எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் அகிம்சை முறையில் போராடினர். 45 கிலோ எடையும், ஒல்லியான உருவமும் கொண்ட 61 வயதான அந்த மனிதர் ஊன்றி நடப்பதற்காக ஒரு மூங்கில் குச்சியைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது தாங்கிச் செல்லவில்லை. ஆனால், அவரது போராட்டத்தை உலகமே திரும்பி பார்த்தது. அதுதான் காந்தியம்.

தண்டியில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தைப் போல, 1930-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு நாளான ஏப்ரல் 13-ந் தேதி அதிகாலையில் திருச்சியில் இருந்து டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் வீட்டில் இருந்து 100 தொண்டர்கள் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் செய்ய புறப்பட்டார்கள். வேதாரண்யத்தை சேர்ந்த சிறந்த தேசபக்தர் வேதரத்தினம் பிள்ளையிடம் இதை நடத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதைத் தடுக்க ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தடை உத்தரவு பிறப்பித்தனர். மக்களிடையே பீதியை உருவாக்கினர். ராஜாஜி தலைமையில் சென்ற முதல் தொண்டர் படையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த 98 பேர் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்ற திடமான முடிவோடு புறப்பட்டனர். சத்தியாகிரக தொண்டர்கள் தங்களது மூட்டைகளை தாங்களே சுமந்து கொண்டு கையில் மூவர்ணக் கொடியேந்தி நாமக்கல் கவிஞரின் ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே’ என்ற பாடலை முழங்கிக்கொண்டு வீரமிக்க யாத்திரையை மேற்கொண்டனர். ஏப்ரல் 30-ந் தேதி விடியற்காலை உப்பு சட்டத்தை மீறி கடற்கரையில் ராஜாஜி உப்பை அள்ளினார். ராஜாஜியும், போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடக்கும் போது தலைநகரான சென்னையில் தேசபக்தர் சேலம் ஏ.சுப்பிரமணியம் முயற்சியால் உப்பு சத்தியாகிரகம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஆந்திர கேசரி டி.பிரகாசம், தேசபந்து நாகேஸ்வரராவ் பந்துலு, துர்காபாய் அம்மையார், வேலூர் குப்புசாமி முதலியார், உபயதுல்லா, சரஸ்வதி பாண்டுரங்கம், கமலாதேவி ஆர்யா, வழக்கறிஞர் பாஷ்யம், டாக்டர் யு.ராமாராவ் போன்றவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் ஆட ஆரம்பித்தது. இதையொட்டி, 17 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெற்றது. இதன் மூலம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் தண்டி உப்பு சத்தியாகிரகம் நினைவில் நீங்காத வகையில் இடம் பெற்றுள்ளது. உப்பு சத்தியாகிரகம் நடந்து 90 ஆண்டுகள் கடந்துள்ளது. இதை நினைவு கூறுவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

Related Posts

error: Content is protected !!