மாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா?

மாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா?

ஏகப்பட்ட தடைகளை தாண்டி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில்  9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 529 பேரூராட்சிகளும், 125 நகராட்சிகளும் உள்ளன. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள 27 மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளன. சென்னை நீங்கலாக 36 மாவட்டங்களுக்கும் சேர்த்து இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அட்டவணையும் தயாராகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற 27-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட முடிவு செய்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடை பெற்ற போது புதிதாக உருவாக்கப் பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறை பணிகளை 3 மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனறு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. இதற்கான பணிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளும் 27-ம் தேதிக்குள் முடிந்து விட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்த பின்னர் இந்த 15 மாநகராட்சிகளுக்கும் தனியாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Related Posts

error: Content is protected !!