சென்னையின் அறிவுசார் வரலாற்று நினைவிடம் – கன்னிமாரா நூலகம்!

சென்னையின் அறிவுசார் வரலாற்று நினைவிடம் – கன்னிமாரா நூலகம்!

ரு நகரத்தின் நூலக வரலாற்றை வைத்து அதன் அறிவு சார்ந்த கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியும். பெருமைப்படக்கூடிய பல நூலகங்களை மெட்ராஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால், எக்மோரில் உள்ள கன்னிமாரா நூலகம் போல் அவைகள் பிரபலமாக இல்லை. மேலும் இன்று வரை சென்ட்ரல் ரயில் நிலையமும் எல்ஐசி கட்டிடமுனே சென்னையின் பொது அடையாளங்களாக இருக்கின்றன என்றால், சென்னைப் பல்கலைக்கழகமும் கன்னிமாரா நூலகமும் இந்தப் பெருநகரத்தின் பெருமையைப் பேசும் அறிவுசார் வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன என்றும் தயக்கமின்றிச் சொல்லலாம்.

சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், சட்டக் கல்லூரி, அருங்காட்சியகம் என்று சென்னையின் புகழ் பெற்ற இந்தோ சார்சனிக் பாணிக் கட்டிடங்களை வடிவமைத்த ஹெ.இர்வின்தான் கன்னிமாரா நூலகத்தையும் வடிவமைத்தவர். நூலகக் கட்டிடம் அரைவட்ட வடிவத்தில் அமைந்தது. மேற்கூரை, தூண்கள், ஜன்னல்கள் மட்டுமின்றி புத்தக அலமாரிகளும் நாற்காலிகளும்கூட இலைகள், மலர்கள் பின்னிப் பிணைந்தவையாக வடிவமைக்கப்பட்டன. வாசகர்களுக்கான மேஜைகளும்கூட வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டன.

இன்றைக்கும் கூட பழைய கட்டடம் என இன்று அழைக்கப்படும், கன்னிமாரா நூலகத்தின் முதன்மைக் கட்டடமான இது, அரைவட்ட வடிவத்தில் அமைந்திருக்கிறது. அரைவட்ட முகப்பிலிருந்து தொடங்கும் நூலகத்தின் நீண்ட புத்தக அறைகளுக்கான சலவைக் கற்கள் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகப் படகுகளில் கொண்டுவரப்பட்டன. பெரும் கலையழகுடன், மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கட்டடத்தின் விதானம், தனித்த அழகைத் தாங்கியிருக்கிறது. அங்கிருந்து கீழிறங்கும் பெரும் ஜன்னல்களில், அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த வண்ணக் கண்ணாடிகள் வழியாகச் சூரிய ஒளி நூலகத்துக்குள் கவிகிறது. விதானம், ஜன்னல்கள் தொடங்கி, புத்தக அடுக்குகள்வரை நூலகத்தின் ஒவ்வோர் அம்சமும் நுண்ணிய வேலைப்பாடுகளால் இழைக்கப்பட்டிருக்கிறது. நூலகக் கட்டடத்தை வடிவமைத்த ஹென்றி இர்வினும், ‘ஜங்கிள் புக்’ எழுதிய கிப்ளிங்கும் நண்பர்கள் என்பதால், புத்தக அடுக்குகளின் மேல் சீரான இடைவெளியில் அமைந்திருக்கும் குரங்கு, யாழி போன்ற மரச்சிற்பங்கள், ‘ஜங்கிள் புக்’கின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு செதுக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படியாக இந்த நூலகம் அந்தக் கால மதிப்பீட்டில் ஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

கன்னிமாரா கட்டிடத்துக்குள்தான் 1905 வரை சென்னை இலக்கியச் சங்க நூலகமும், 1928 வரை சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் இயங்கிவந்தன. 1939 வரை அருங்காட்சியகப் பொறுப்பாளரே நூலகராகவும் கூடுதல் பொறுப்பேற்றுவந்தார். 1939-ல் முதன்முறையாகத் தனி நூலகராகப் பொறுப்பேற்றார் ரா.ஜனார்த்தனம். அவர் நூலகராகப் பொறுப்பேற்பதற்கு முன்னால், மூடிய புத்தக அடுக்கு முறையே பின்பற்றப்பட்டுவந்தது. அதாவது, புத்தகங்கள் அலமாரிகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும், புத்தகம் வேண்டுவோர் நூலகரிடம் கூறி புத்தகத்தைப் பெற்று படித்து முடித்ததும் அவரிடமே கொடுத்துவிட வேண்டும். நூலகர் மீண்டும் புத்தகத்தைப் பூட்டி வைத்துவிடுவார்.

ரா.ஜனார்த்தனம் திறந்த புத்தக அடுக்கு முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி, வாசகர்களே புத்தகங்களை அலமாரிகளிலிருந்து எடுத்துப் படிக்கலாம். மேலும், நூலகத்தின் உறுப்பினர்கள் புத்தகங்களை இரவல் பெற்று வீட்டுக்கு எடுத்துச்சென்றும் படிக்கலாம். இந்த முறை படிப்படியாகப் பின்னாட்களில் மற்ற பொது நூலகங்களிலும் பின்பற்றப்பட்டது.

இத்தனைக்கு, கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 – 1902) என்பவராவார். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமா காட்சியளிக்குது இந்த நூலகம்.

1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய ஆளுநர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணலாம். கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் இதே டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

Delivery of Books and Newspaper Act எனப்படும் ‘இந்திய நூல்கள் வழங்கல்’ சட்டம் கன்னிமாரா நூலகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. 1955-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி இந்தியாவில் பதிப்பிக்கப்படும் நூல்களின் பிரதி ஒன்று கன்னிமாரா நூலகத்திற்குக் கண்டிப்பாக அனுப்பிவைக்கப்பட வேண்டும். அதன்படி, இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்த மொழியிலும் வெளியாகும் நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்களின் பிரதிகள் நாள்தோறும் இங்கு வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன. கொல்கத்தா தேசிய நூலகம், தில்லி பொது நூலகம், மும்பை டவுன் ஹால் பொது நூலகம், இந்திய நாடாளுமன்ற நூலகம் ஆகியவற்றிலும் கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூல்களின் பிரதி ஒன்று இருக்கும். இந்தியாவின் நான்கு தேசிய வைப்பக நூலகங்களுள் (Depository Library) ஒன்றாக, கன்னிமாரா நூலகத்தை 1981-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. ஐநா, யுனெஸ்கோ, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகளின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும் தகவல் மையமாகவும் கன்னிமாரா விளங்குகிறது.

தேசிய நூலக அந்தஸ்து பெற்றவுடன் இந்தியாவில் வெளியிடப்படும் ஒவ்வொரு புத்தகத்தையும் சேகரித்து வைக்கப் பழைய கட்டடம் போதுமானதாக இல்லை. புத்தக வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க 1974 இல் ஒரு கான்கிரீட் கட்டடம் உருவானது. பார்ப்பதற்கு ஒரு நூலகத்தை விட அரசாங்க அலுவலகம் போல் தெரியும் இந்தக் கட்டடத்துக்குள் மட்டும்தான் பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பொது மக்களால் அணுக முடியாத பழைய புத்தகங்கள் பழைய கட்டடத்தில் உள்ளன. பழைய நூலகத்துக்குள் வருடம் ஒரு முறை நூலக தினம் கொண்டாடப்படும் போது எல்லோரும் செல்லலாம். சென்றவர்கள் எல்லாம் பிரமித்துப் போகும் அளவுக்கு அழகு அந்த நூலகம்.

அந்த வகையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம்! முன்னேற்றம்! தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப் படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.பேரறிஞர் அண்ணா தன் வாழ்நாளின் கணிசமான நேரத்தை கன்னிமாரா நூலகத்தில் செலவிட்டுள்ளார்; ராஜாஜி, சி. சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், சாண்டில்யன், சுஜாதா, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி எனப்படும் சென்னை இலக்கியச் சங்கம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், கீழ்த்திசை சுவடிகள் நூலகம் ஆகியவை ஒருகாலத்தில் கன்னிமாரா நூலகத்தில்தான் இயங்கிவந்தன.

தொடர்ந்து அதிகரித்துவந்த உறுப்பினர்கள், வாசகர்களின் வசதிக்காக, 1973-ம் ஆண்டு 55,000 சதுர அடி பரப்பில் மூன்று மாடிப் புதிய கட்டடம் கட்டித் திறக்கப்பட்டது. 1998-ல் 12,000 சதுர அடியில் மற்றொரு மூன்று மாடிப் புதிய கட்டடம் கட்டித் திறக்கப்பட்டது. இப்போது ஆங்கில நூல்கள் பிரிவு, குடிமைப்பணிக் கல்வி மையம், குழந்தைகள் நூலகம், பருவ இதழ் பிரிவு, குறிப்பு உதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, பாடநூல் பிரிவு, நுண்படப் பிரிவு (Microfilm Section), உருப்படப் பிரிவு (Digitisation Section) அரசு வெளியீடுகள் பிரிவு, ஆகிய பிரிவுகள் நூலகத்தில் உள்ளன. மாணவர்களின் தேவை கருதி பாடநூல் பிரிவு 1984-ல் தொடங்கப்பட்டது; தனி வருகைப் பதிவேடு பராமரிக்கும் அளவுக்குப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கன்னிமாராவில் வந்து படிக்கின்றனர்.

கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களின் தலைப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தபடியே நூல் பற்றிய விவரங்களை இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்துகொண்டு, நேரில் வந்து நூல்களைப் படிக்க முடியும். பார்வைச் சவால் உடையவர்களும், செவித்திறன் சவால் உடையவர்களுக்கும் படிப்பதற்கு பிரெய்லி. ஒலிப்புத்தக வசதிகள் இங்கு உள்ளன.

இப்போது கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது.

நீங்களும் வந்து பாருங்க – அசந்து போவீங்க

-அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!