ஓடும் ரயிலில் டாப்-பில் ஓட்டைப் போட்டு கொள்ளையடித்த ரியல் ஜெண்டில்மேன் யார்?
ரொம்ப பழசான, கொஞ்சம் கிழிஞ்ச, சேதம் அடைந்த, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் பேங்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை அந்த பகுதியில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர். இதில் 342 கோடி ரூபாயை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல வங்கி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 226 மரப்பெட்டி களில் ரூ.10, ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக தனித்தனியாக அடுக்கி கட்டப்பட்டன. பின்னர், அவை சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயிலில் தனிப்பெட்டியில் நேற்று முன்தினம் ஏற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதற்கு ஒரு டிஎஸ்பி தலைமையில் 10 போலீஸார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக வந்தனர்.

சேலத்தில் இருந்து ரயில் சரியாக நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புறப்பட்டது. பணம் இருக்கும் பெட்டியில் அமர யாருக்கும் அனுமதி கிடையாது. எனவே, பணம் உள்ள ரயில் பெட்டிக்கு முன் பெட்டியிலும், பின் பெட்டியிலும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் வந்தனர். ரயில் நின்று சென்ற அனைத்து நிறுத்தங்களிலும் போலீஸார் இறங்கி இறங்கி சீல் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், பயணிகளை இறக்கிவிட்டு யார்டுக்கு சென்றது. அங்கு பணம் இருக்கும் பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு மீண்டும் காலை 11 மணிக்கு அந்த பெட்டி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஅங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியாகி அண்ணாந்து பார்த்தால் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது.
5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள் ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளைபோன பணத்தின் சரியான மதிப்பை அறிய மீதம் உள்ள பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொள்ளை குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஓடும் ரயிலில் ஜெண்டில்மென் சினிமா பாணியில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த இடத்துக்கு தடய வியல் நிபுணர் பஞ்சாட்சரம் தலைமை யிலான தனிப்படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகை களை சேகரித்தனர். விரைவில் அதன் அறிக்கையை எழும்பூர் ரயில்வே போலீஸிடம் கொடுக்க உள்ளனர்.
இதனிடையே நேற்று கொள்ளை நடந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் எந்தெந்த வங்கிகளை சேர்ந்தது என்ற தகவல் தெரியவந்துள்ளது.
அதன் விவரம்:
சேலம் இந்தியன் வங்கியைச் சேர்ந்த பணம் 43 பெட்டிகளில் கொண்டுவரப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சேர்ந்த பணம் 83 பெட்டிகளில் கொண்டுவரப்பட்டது,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ராசிபுரம் வங்கியை சேர்ந்த பணம் 42 பெட்டிகளில் கொண்டுவரப்பட்டது,
இந்தியன் வங்கி கிருஷ்ணகிரியை சேர்ந்த பணம் 38 பெட்டிகளில் கொண்டுவரப்பட்டது,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சத்தியமங்கலம் வங்கியை சேர்ந்த பணம் 20 பெட்டிகளில் கொண்டுவரப்பட்டது.
மொத்தம் 226 பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் பணம் கொண்டுவரப்பட்டது.
அவற்றில் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சேர்ந்த 5.75 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்


