சென்னை: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை!

சென்னை: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை!

மிக்ஜாம் புயல் அடித்து துவைத்து போட்டு விட்டு போன சென்னையின் முக்கிய சாலைகளிலும் கூட இன்னும் மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில், திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நாளை – டிசம்பர் 7ம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயலால். பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளை துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளைத் தள்ளி வைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி தலைமையாசிரியர்களே, நிலைமை சீரான உடன், தனித்தனியே கேள்வித்தாள்கள் தயாரித்து அரையாண்டு தேர்வுகளை நடத்திட அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத சூழல் நிலவி வருகிறது. வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.சென்னையில் பெய்த மழையால் நேற்று அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் பகுதியில் 29 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, மீனம்பாக்கத்தில் 19 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 செ.மீ, நந்தனத்தில் 18 செ.மீ, பள்ளிக்கரணையில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு 69 செமீ ஆக உள்ள நிலையில் தற்போது 89 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக மின்சாரம் ஏதும் இல்லாததால் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களை வழங்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

தற்போது மழை சற்றே ஓய்ந்துள்ள போதும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில், டிசம்பர் 7 ஆகிய நாளை சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!