சர்வதேச கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் – ஐ.சி.சி. அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கிரிக்கெட் போட்டிகளை விரைந்து முடிக்கும் நோக்கத்தில் புதிய விதிமுறை கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு ஓவருக்கும், மற்றொரு ஓவருக்கும் இடையில் ஒரு நிமிடம் மட்டுமே இடைவெளி இருக்க வேண்டும். இல்லை எனில் 5 ரன்கள் பெனால்டியாக கொடுக்கப்படும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
.பல போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக பந்து வீசி முடிக்கப்படாத நிலையில் போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 50 ஓவர்கள் போட்டியைக் காண்பதற்கு ரசிகர்களின் வருகை குறைந்து வருகிறது. அதற்கு நேரம் வீணடிக்கப்படுவதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.அதனால், 50 ஓவர்கள் போட்டியைக் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், ஓவர்களுக்கு இடையில் எடுக்கப்படும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக சோதனை அடிப்படையில் இந்த ஸ்டாப் கிளாக் முறை கொண்டுவரப்படுகிறது. நடப்பாண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சோதனை முயற்சியாக இந்த விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருக்கும் ஐசிசி, விளையாட்டின் வேகத்தையும் பார்வையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்கான பரந்துபட்ட முயற்சியின் ஒரு பகுதி என்றும் கூறுகிறது.
அடுத்து கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளும் சம ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஐசிசி வெளியிட்டிருக்கிறது. ஆடவர் போட்டியோ, மகளிர் போட்டியோ நடுவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஐசிசி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.
மேலும் ஆண்களாக பிறந்து பெண்களாக மாறிய திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ஆண் எந்த அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச பெண்கள் விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற மாட்டார்கள் என ஐசிசி கூறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விதி மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஜெஃப் அல்லார்டிஸ், சர்வதேச பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் வீரர்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை என்று தெரிவித்தார்