பிபிசி இந்தியா செயல்படும் முறையில் மாற்றம்; கலெக்டிவ் நியூஸ்ரூம் டீம் நிறுவல்? ஏன் – முழு விபரம்!

பிபிசி இந்தியா செயல்படும் முறையில் மாற்றம்;  கலெக்டிவ் நியூஸ்ரூம் டீம் நிறுவல்? ஏன் – முழு விபரம்!

டக உலகின் ராஜா என்று சொல்லிக் கொள்ளு,  பிபிசி இந்தியா வரி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டநிலையில் அந் நிறுவனத்தை விட்டுவிட்டு, புதிதாக இந்தியர்கள் தொடங்கியுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் செய்தி வெளியிடும் உரிமையை பிரிட்டன் நிறுவனம் கைமாற்றியுள்ளது. அதாவது, பிபிசி இந்தியா என்கிற பெயரில் பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக இயங்கிவந்த நிறுவனமே, பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையாக பிபிசி நிறுவனமே பொறுப்பாக இருந்துவந்தது. இங்கு பணியாற்றும் ஏழு மொழிகளின் பிரிவுகளைச் சேர்ந்த 200+ ஊழியர்களும் பிபிசிஊழியர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை உட்பட்ட அலுவலகங்களில் வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சோதனை நடைபெற்று ஓராண்டு கடந்துள்ள நிலையில், பிபிசி இந்தியா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, பிபிசி செய்திகளை இனி ’கலெக்டிவ் நியூஸ்ரூம்’ என்கிற புதிய இந்திய தனியார் நிறுவனம் வெளியிடும். அதாவது செய்தி வெளியீட்டு உரிமையை இந்திய நிறுவனமே கையாளும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனம் வேறொரு நிறுவனம்தான் என்றாலும், பிபிசி தரப்புக்குத் தொடர்பே இல்லாத நிறுவனம் என்றும் சொல்லிவிட முடியாது. பிபிசி இந்தியாவின் முக்கிய அதிகாரிகளாகப் பதவி வகித்தவர்களே இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். இது முற்றிலும் இந்திய நிறுவனம்.

இந்த நிறுவனத்தில், 2021 நேரடி அந்நிய முதலீட்டுச் சட்டப்படி, 26 சதவீதம் அளவுக்கு தங்களின் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்குமாறு பிரிட்டன் அரசாங்க நிறுவனமான பிபிசி மத்திய அரசிடம் விண்ணப்பித்து அது கிடைத்துள்ள நிலையில் நான்கு மூத்த பிபிசி பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்துவிட்டு, கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்தை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளனர். டிஜிட்டல் மீடியா துறையில் அன்னிய முதலீட்டு விதிகளின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் கீழ், கலெக்டிவ் நியூஸ்ரூம் இந்தியாவில் பிபிசிக்கான உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிடும். ஆக்கப்பூர்வமான இதழியல் மூலம் இந்திய வாசகர்களுக்கு செய்திகளை வழங்குவதே இதன் நோக்கம். பத்திரிகை நெறிகளைக் கடைபிடிப்பதிலும், இந்தியாவில் இதழியலின் உயர் தரத்தை உருவாக்குவதிலும் கலெக்டிவ் நியூஸ் ரூம் உறுதியாக இருக்கிறதாம்.

புதிய நிறுவனம் தற்போது பிபிசிக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும், ஆயினும் எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாக பிற நிறுவனங்களுக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறது.

“மிக நம்பகமான, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான இதழியலை உருவாக்குவதற்கான தெளிவான, லட்சிய நோக்கத்துடன் அனுபவம் மற்றும் திறமை மிகுந்த பத்திரிகையாளர்களுடன் கலெக்டிவ் நியூஸ்ரூம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்”, என்று கலெக்டிவ் நியூஸ்ரூம் தலைமை செயல் அதிகாரி ரூபா ஜா தெரிவித்தார். “பல்வேறு தரப்பினரின் குரல்கள், மாறுபட்ட கண்ணோட்டங்களுடன், உண்மையை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் நலனுக்காக செயல்படும் சுதந்திரமான செய்தி நிறுவனமாக கலெக்டிவ் நியூஸ்ரூம் விரைவில் நேயர்களால் அறியப்படும் ’’ என்றும் அவர் கூறினார்.

ரூபா ஜாவுடன் சக இயக்குநர்களாக முகேஷ் ஷர்மா, சஞ்சய் மஜும்தார் மற்றும் சாரா ஹசன் ஆகியோர் செயல்படுவார்கள். அவர்கள் அனைவருமே செய்தி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பில் விரிவான அனுபவத்தை கொண்டுள்ளனர்.

கலெக்டிவ் நியூஸ்ரூமின் முதல் வாடிக்கையாளரான பிபிசி, தனது ஒப்பந்தத்தில், அதிக நேயர்களைக் கொண்ட பிபிசி மொழி சேவையான பிபிசி ஹிந்திக்கான செய்தி தயாரிப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் அனைத்து தளங்களிலும் இச் சேவையின் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 27 சதம் அதிகரித்துள்ளது.

பிபிசி நியூஸ் தமிழ், பிபிசி நியூஸ் தெலுங்கு, பிபிசி நியூஸ் ஹிந்தி, பிபிசி நியூஸ் மராத்தி, பிபிசி நியூஸ் குஜராத்தி, பிபிசி நியூஸ் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும் என்பதும்  முன்னதாக, அதானி குழுமம் தொடர்பான இண்டென்பர்க் அறிக்கையை முன்வைத்து பிபிசி சிறப்புச் செய்திகளை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!