நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 லேண்டர் தரையிறங்கியது! – வீடியோ!

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 லேண்டர் தரையிறங்கியது!  – வீடியோ!

ர்வதேச அளவில் முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல் பதித்திருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தின் சாதனையை ஒவ்வொரு நிலையிலும் விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தென்ஆப்பிரிக்காவில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இந்த வரலாற்று நிகழ்வை விஞ்ஞானிகளுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தார்.

நம் நாட்டின் கனவுத் திட்டமான நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் முதன்முதலில் 2008ம் ஆண்டில் சந்திராயன் 1 விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்தது. 2019ம் ஆண்டில் அடுத்த கட்ட ஆய்விற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்கும் நேரத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது.

அதில் இருந்து குறைபாடுகளுக்குத் தீர்வு கண்டு இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை வடிவமைத்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை14ல் சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் அனுப்பியது இஸ்ரோ. விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 3, புவி வட்டப் பாதையில் பயணித்து, அங்கிருந்து நிலவு வட்டப் பாதைக்கு செலுத்தப்பட்டு, அதன் பின்னர் நிலவு வட்டப்பாதையில் சுற்றி வந்தது போன்ற அனைத்து சவால்களையும் கடந்து இறுதிக் கட்டத்தை அடைந்தது. ரோவரை சுமந்து செல்லும் லேண்டரை சரியான இடத்தில் சரியான வேகத்தில் தரையிறக்குவதே அடுத்த சிக்கலான மிகவும் முக்கியமான தருணமாக இருந்தது.

அதையொட்டி சரியாக 5.44 மணிக்குத் தொடங்கிய இந்த தரையிறங்கும் பணியானது 8 நிலைகளில் தரையிறக்கப்பட்டது. பரபரப்பான 15 நிமிடங்கள் நிலவிற்கு மேல் 30 கி.மீட்டர் தூரத்தில் சந்திராயன் 3 தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கடந்த முறை சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்கும் போது லேண்டர் விழுந்து நொறுங்கியது. 15 நிமிடங்கள் தான் தரையிறங்குவதற்கான நேரம் என்றாலும் இதுவே மிக முக்கியமானது என்பதால் உலக நாடுகள் அனைத்து உற்று நோக்கின.

கிட்டத்தட்ட 8 நிலைகளில் சந்திராயன் 3 விண்கலமானது தரையிறங்கும் விதத்தில் இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டிருந்தது. நிலவை நோக்கிச் செல்லும் விண்கலம் மெல்ல சுற்றி சுற்றி வந்து நீள் வட்டப் பாதையை அமைத்து அருகில் செல்லும் போது 30 கி.மீ தூரம் செல்லும் போது 100 கி.மீ என்ற பாதையை அமைத்தது. நிலவுக்கு அருகில் 30 கி.மீ தூரத்தில் தான் சந்திராயன் 3 விண்கலத்தை தரையிரக்கும் நிகழ்வானது திட்டமிடப்பட்டது. இதன் முதற்கட்டமாக 30 கி.மீட்டரில் இருந்து 7.4 கி.மீட்டருக்கு கீழே இறங்க வேண்டும். இந்த நேரத்தில் விண்கலமானது நிலவை 4 கால்களும் முன்பக்கம் இருக்கும் வகையில் சுற்றியது.

எந்த ராக்கெட் கொண்டு விண்கலமானது பூமியில் இருந்து ஏவப்பட்டதோ அதே ராக்கெட்டை வைத்து தான் நிலாவில் தரையிரங்கியது. ஒரு பக்கம் ராக்கெட்டின் எரிவாயு வெளியே வந்ததால் இன்னொரு பக்கம் விசை ஏற்பட்டது. கால் முன்நோக்கி சுற்றி வந்த விண்கலத்திற்குள் தான் 4 ராக்கெட்டுகள் இருந்தன, அவை இயங்கத் தொடங்கியதும் பின்பக்க விசை அதிகரித்ததால் முன்னால் செல்லும் வேகம் குறைந்தது. வேகம் குறைந்ததால் விண்கலமானது கீழே வந்தது.

30 கி.மீ உயரத்தில் பறந்த போது மணிக்கு 6ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் சென்ற விண்கலமானது தள்ளுவிசையினால் வேகம் படிப்படியாக குறைந்து 7.4 கி.மீட்டருக்கு வந்து சேரும் போது அதன் வேகமானது மணிக்கு 1200 கி.மீட்டர் என்கிற அளவில் குறைந்தது. 10 நிமிடங்கள் இந்த நிகழ்வானது நடந்தது. நேர்நிறுத்தப்பட்ட விண்கலம் இரண்டாவது கட்டத்தில் 7.4கி.மீட்டர் வேகத்தில் இருந்த விண்கலத்தின் வேகத்தை படிப்படியாகக் குறைத்து 6.8கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் 2 முக்கியமான விஷயங்கள் இருந்தன. விண்கலத்தின் கால்கள் முன்நோக்கி இருந்ததால் அப்படியே இறங்கினால் நிற்க முடியாது என்பதால் அதனை சாய்க்கும் பணி நடந்தது. பக்கவாட்டில் இருந்த விண்கலம் 50 டிகிரி கோணத்தில் திருப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி அங்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்தது. புதுமையான முறையில் இஸ்ரோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்த விண்கலத்தில் செய்திருந்தது. தரையிறங்கும் பகுதி ஏற்கனவே விண்கலத்தில் உள்ள கேமராவில் படம்பிடிக்கப்பட்டிருந்தது, அந்தப் புகைப்படத்தை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான தரையிறங்கும் பாதையை முடிவு செய்தது. அந்தரத்தில் பரந்த 22 நொடிகள் 6.3கி.மீட்டரில் இருந்து 800 மீட்டராக்குவதே மூன்றாவது கட்டமாக இருந்தது.

இதில் 50 டிகிரியில் இருந்த விண்கலத்தின் கால்கள் நேர்கீழாக இருப்பது போல மாற்றப்பட்டது. ராக்கெட் இன்ஜினை முன்பக்கமாக இயக்கினால் விண்கலத்தின் வேகம் படிப்படியாகக் குறையும் மணிக்கு ஆயிரத்து 200 கி.மீட்டர் வேகத்தில் சென்ற விண்கலம் 800கி.மீட்டர் வந்த பிறகு முன்னாடி செல்லும் வேகம் பூஜ்யமானது. நான்காவது கட்டத்தில் 800மீட்டரில் இருந்த விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு அடி மேல் அடி வைத்து 150 மீட்டருக்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்திற்கு வந்ததும் 22 நொடிகள் அந்தரத்தில் அதே இடத்தில் பறந்தது. இந்த நேரத்தில் தான் இந்த விண்கலத்தில் உள்ள ஆபத்தை தவிர்க்கும் கேமராவானது செயல்படத் தொடங்கியது. தரையிறங்கிய கடைசி நிமிடங்கள் தரையிறங்கும் விண்கலம் பாறை அல்லது சரிவு அல்லது பள்ளத்தில் விழுந்து விடாமல் இருப்பதற்காக செயற்கை நுண்ணறிவு ஒன்று கணினியில் வைக்கப்பட்டிருந்தது. எந்த இடத்தில் தரையிறங்குவது என்பதை அதுவே முடிவு செய்தது.

நிலா விண்கலத்தை தனது ஈர்ப்புவிசையால் இழுத்தது, அதற்கு சரிசமமாக மேல்நோக்கி தள்ளுவிசை கொடுப்பது போல அதே அளவிற்கு ராக்கெட் இயங்கியது. இதனால் விண்கலம் விழாமல் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து 150 மீட்டரில் இருந்து 60 மீட்டருக்கு வந்தது. பின்னர், ராக்கெட்டின் வேகம் குறைக்கப்பட்டதும் நிலவின் ஈர்ப்பு விசையால் மெல்ல தரையிறங்கியது. 60 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு வரும் சவாலையும் வெற்றிகரமாகக் கடந்தது. லேண்டர் வேகமாக விழுந்தாலும் பாதிக்காத வகையில் அதன் கால்கள் மிக உறுதியாக வடிவமைக்கப் பட்டிருந்ததும் இஸ்ரோவின் தொலைநோக்கு திட்டத்தில் ஒன்று. 10 மீட்டர் வந்த பிறகு ராக்கெட் இயக்கம் நிறுத்தப்பட்டு நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதன் மூலம் உலக அரங்கில் தனிச்சிறப்பை அடைந்திருக்கும் இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

error: Content is protected !!