சந்திரயான்-3 -நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு!

சந்திரயான்-3 -நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு!

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கப் போகும் முதல் தேசமாக, இந்தியா புதிய வரலாறு படைக்க இருக்கிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தை எட்டும் அந்த நிகழ்வை நேரலையில் காணவும் இஸ்ரோ வழி வகை செய்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்துக்குப் பின்னதாக ஏவப்பட்டு, அதற்கு முன்பாக நிலவை எட்டத் திட்டமிடப்படிருந்தது ரஷ்யாவின் லூனா-25 விண்கலம். ஆனால் ரஷ்யாவின் கணிப்புகளை பொய்யாக்கி, சனி இரவு நிலவின் பரப்பில் மோதி சிதைந்து சுக்கு நூறாய் நொறுங்கியது. இதனால் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மீது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.

மாற்றி அறிவிக்கப்பட்ட நேரத்தின்படி, நாளை மறுநாள்(ஆக.23) மாலை 6.04 மணியளவில் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் பாதம் பதிக்க உள்ளது. தற்போது நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பயணிக்கும் விக்ரம் லேண்டர், நிலவுடனான சராசரி தொலைவாக நேற்றைய நிலவரப்படி சுமார் 25 கிமீ அளவில் நெருங்கி உள்ளது.

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா என நிலவை எட்டியுள்ள நாடுகள் அனைத்துமே இதுவரை அதன் வடதுருவத்திலேயே தடம் பதித்துள்ளன. முதல்முறையாக தென் துருவத்தை எட்டப்போகும் தேசமாக இந்தியா, வரலாற்று சாதனை படைக்க உள்ளது. இந்த சாதனையை நேரலையாக காண இஸ்ரோ வழிவகை செய்துள்ளது.

இதன்படி ஃபேஸ்புக், எக்ஸ் தளம்(ட்விட்டர்), யூடியூப் என இஸ்ரோவின் சமூக வலைதள பக்கங்களிலும், தூர்தர்ஷன் டிவி வாயிலாகவும் சந்திரயான் சாதனையை நேரலையில் காணலாம். மேலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பை செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் பலவும் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன.

error: Content is protected !!