ப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா உள்ளிட்ட 9 இடங்களில் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சட்ட விரோத பணப்பரிவர்தனை தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதாவது இதனிடையே தமது பதவி காலத்தில் 250 சீன தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாகவும் அது தொடர்பாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ப. சிதம்பரம் மீதான சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமது சமூக வலைத் தளப் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம், மத்திய ஆணையங்கள் எண்ணில் அடங்கா முறை சோதனை நடத்தியுள்ளதாகவும் அதன் எண்ணிக்கையை தான் தற்போது மறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிபிஐ அதிகாரிகளின் சோதனை குறித்து தனது சமூக வலத் தளப் பக்கத்தில் ப. சிதம்பரம், சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ இன்று காலை சோதனை நடத்தியதாகவும், சோதனை தொடர்பாக அதிகாரிகள் கட்டிய எஃப் ஐ ஆரில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும் இருந்த போதும் தமது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிகாரிகளில் சோதனயில் எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என்றும் எதையும் கைப்பற்றவில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.