கல்லூரியில் தலை விரித்தாடும் ஜாதி வெறி!

கல்லூரியில் தலை விரித்தாடும் ஜாதி வெறி!

ரு அரசுக் கல்லூரியில் உரையாற்ற சென்றிருந்தேன்.காலை முதல் மதியம் வரை இலக்கிய உரைகளும் மதியத்திற்கு மேல் கலைநிகழ்ச்சிகள் என்று அழைப்பிதழில் சொல்லியிருந்தார்கள்.ஆனால் நிகழ்ச்சியை மத்தியானத்தோடு முடித்து விட்டார்கள்.நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான பேராசிரியர்களிடம் கேட்டேன்.

“சார்….பத்து இருபது பேர் தண்ணியடிச்சிட்டு வந்திட்டாங்க சார்..கலாட்டா பண்ணுவாங்க அதனால முடிச்சிட்டோம்”என்று சொன்னார்கள்.

இன்னொரு கல்லூரி வகுப்பறையில் குடித்து விட்டு நான்கு மாணவர்கள் படுத்துக் கிடக்கிறார்கள்.பேராசிரியர்கள் கிட்டத்தில் போக பயப் படுகிறார்கள்.பெற்றோர்களிடம் சொன்னால் அவர்கள் சொல்கிறார்களாம்.

“அவன் எப்படியாவது வீட்டை விட்டு வெளியே போனால் போதும் என்று நாங்கள் இருக்கிறோம்.அவனை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நாங்கள் வர மாட்டோம்”என்ன செய்ய?

நேற்று ஒரு பேராசிரியரை சந்தித்தேன்.ஒரு வாரம் கல்லூரிக்கு லீவு போட்டிருப்பதாக சொன்னார்.எதற்காக லீவு என்று கேட்டேன்.

“கல்லூரியில் நிறைய்ய ஜாதிப் பிரச்சினை சார்.பிரின்சிபால் என்னை விசாரிக்கும்படி சொல்கிறார்.அவர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.பேராசிரியர்களும் இரண்டு பிரிவாக இருக்காங்க.நமக்கு எதுக்கு சார் வம்புனு லீவு போட்டுட்டேன் சார்”

சென்ற வாரம் ஒரு கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேசினார்.பண்ணாட்டு கருத்தரங்கிற்கு உங்களை பேச அழைப்பதற்காக பிரின்சிபாலிடம் கேட்டோம்.சோ.தர்மன் வேண்டாம்.பதிலுக்கு வேறு ஒரு நபரை அழைக்கும் படி சொன்னார்.அவர் சொன்ன நபர் எழுத்தாளர் இல்லை.சார் அவர் எழுத்தாளர் இல்லை என்று சொன்னோம்.நான் சொல்வதைக் கேளுங்கள்.நான் பிரின்ஸ்பாலா?நீ பிரின்ஸ்பாலா? என்கிறார்.பிரின்ஸ்பால் சொன்ன நபர் பிரின்ஸ்பாலின் ஜாதி.

இக்கல்லூரியில் தலை விரித்தாடும் ஜாதி வெறி பேராசிரியர்களிடம் மட்டுமில்லை.பிரின்ஸ்பாலிடமும் இருந்தால் என்ன செய்ய.

இன்னொன்று பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கம்.அதில் பங்கு பெற்ற ஐந்து பேராசிரியர்களும் அந்தப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரின் ஜாதி.அந்தப் பேராசிரியர் இடதுசாரி இயக்க முன்னோடி.படித்தவர்களே இப்படி இருந்தால் படிக்காத பாமரர்களை எப்படி திருத்துவது.

சோ. தர்மன்

error: Content is protected !!