June 3, 2023

காற்றிலிருந்து எரிபொருள்.. இது புது தொழில்நுட்பம்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

லகத்தின் காற்று, கடல் மாசுபாட்டை நீக்க அறிவியலர்கள் அல்லும்பகலும் பாடுபட்டு பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, வான் போக்குவரத்து மனிதர்கள் பயணம் செய்யவும், சரக்குகளைக் கையாளவும் மிக அவசியம். கதிரவ ஆற்றலில் இயங்கும் வானூர்தி எல்லாமே துவக்க நிலையில்தான் உள்ளன. விமானங்களை இயக்க நம்பகமான, உடனடியாக உற்பத்தி செய்து இன்றுள்ள மாசு வெளியிடும் எரிபொருள்களை அறவே ஒதுக்க, ஓர் தொழில்நுட்பமும் இல்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமின்றி, கடலில் சரக்கு போக்குவரத்திற்கான கப்பல்களுக்கு எரிபொருளும் தேவை. எனவே உடனடியாக உற்பத்தி செய்யக்கூடிய மாற்று எரிபொருள் திட்டங்களே இன்றையத் தேவையாக உள்ளது. அப்படியொரு முயற்சியில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளனர் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸூரிச் நகரின் அறிவியலர்.

இங்குள்ள பிரபலமான ஆய்வு நிறுவனமான இ டி எச் சின் அறிவியலர் இணைந்து காற்றிலிருந்தும், கதிரவ ஆற்றலிலிருந்தும் எரிபொருள் உற்பத்தி செய்யும் முறையைக் கண்டறிந்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான ஆய்வுகளை முடித்துவிட்ட இவர்கள் வரும் 2025 ஆம் ஆண்டில் பேரளவு உற்பத்திக்காக இலக்கு குறித்துள்ளனர். அதன்படி ஆண்டிற்கு 10 மில்லியன் லிட்டர் மெத்தனால் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.

வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம் எனும் அமைப்பு அடுத்த 10 அறிவியல் தொழில்நுட்பங்களில் இரண்டாம் இடத்தில் இத்தொழில்நுட்பத்தை வரிசைப்படுத்தியுள்ளது. சரி அதென்ன தொழில்நுட்பம் காணலாமா?

இந்த ஆய்வு மையத்தின் மறுசுழற்சி வளங்கள் தொடர்பான பேராசிரியர் ஆல்டோ ஸ்டீன்ஃபீல்ட் டும் அவரது ஆய்வுக்குழுவினரும் தங்களது மையத்தின் கூரையில் ஒரு கூம்பு வடிவ கதிரவ ஆற்றல் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவியுள்ளனர். இந்த கூம்பு வடிவ ஆலையில்தான் கதிரவ ஆற்றல் உள் நுழைந்து இரசாயன மாற்றங்களைச் செய்து எரிபொருளைத் தருகிறது. முதலில் காற்றையும், தண்ணீரையும் சுற்றுப்புறக் காற்றிலிருந்து உறிஞ்சி எடுத்து அதை சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே செலுத்துகிறது. இயந்திரத்தின் இதயப்பகுதி செரியம் ஆக்சைட் எனும் பொருளால் செய்யப்பட்டுள்ளது. இதனுள் காற்றும், தண்ணீரும் கலக்கப்பட்டு அவற்றின் மீது கதிரவ ஒளியானது சுமார் 1500 டிகிரி செல்ஷியஸ் வெப்ப அளவில் செலுத்தப்படுகிறது. இப்போது இரசாயன விளைவாக சின் கேஸ் (Syngas) எனும் வாயு கிடைக்கிறது. இதிலிருந்து வழக்கமான எரிபொருள் வகைகளான கெரசின், மெத்தனால் போன்றவை பெறப்படுகின்றன. இதிலுள்ள நன்மை இவை செயற்கை எரிபொருட்களாக இருப்பதால் மாசு விளைவிக்கும் மூலக்கூறுகள் கிடையாது. எனவே புவி வெப்பமடைதல் தவிர்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக ஓர் ஆலை இருந்தால் ஆண்டு முழுவதும் உலகின் மொத்த வானூர்திகளையும் இயக்க செலவாகும் எரிபொருளை உற்பத்தி செய்து விட முடியுமாம். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள ஓர் ஆலை மூலம் சுமார் 20,000 லிட்டர் கெரசினை தினசரி உற்பத்தி செய்ய முடியுமாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தளவிற்கு உற்பத்தி செய்ய நல்ல கதிரவ வெப்பம் தேவை. ஐரோப்பிய நாடுகளில், அதிலும் குறிப்பாக ஸ்விட்சர்லாந்து போன்ற மலைசூழ் நாட்டில் கிடைக்கும் வெப்பத்தின் அளவு கொண்டு கணிசமான எரிபொருளை தயாரிக்க முடியும் என்றால், வளைகுடா நாடுகளின் பாலைவனத்தில் எவ்வளவு லிட்டர் எரிபொருள் தயாரிக்க முடியும் என்பதே. மிகக்குறைவான அளவில் உற்பத்தி செய்தால் எரிபொருளின் விலை கடுமையாக இருக்கும். பேரளவு உற்பத்தியின் மூலமே இதை மலிவாக தயாரிக்க முடியும். ஆயினும் தொடர்ந்து ஆய்வாளர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதிரி ஆலை துவங்கப்பட்டு உற்பத்தி செய்தால்தான் இதன் முழுப்பயனும் நமக்குக் கிடைக்கும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு!