தமிழ்நாட்டின் புது டிஜிபி சைலேந்திர பாபு – கொஞ்சம் குறிப்புகள்!
இன்னும் இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் டிஜிபி பொறுப்பில் அமரப் போகும் சைலேந்திரபாபு குறித்து நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மிற்கு கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சிறப்புக் கட்டுரை இதோ:
தமிழகத்தின் பெரும்பாலான நிருபர்கள் தொடங்கி இதழ் ஆசிரியர்கள் வரை கேஷூவலாக நெருங்கி பழகும் போக்கு கொண்ட புது டிஜிபி ஒரு பேட்டியின் போது, ‘என் குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைங்க. நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்தியன் ஆர்மி ஷிப் செக்ஷனில் ஒர்க் பண்னிக்கிட்டிருந்தார். பின்னாளில் கேரள டிரான்ஸ்போர்ட் ஜாப்பில் இருந்தார். என்னுடையை படிப்பில், அப்பா & அம்மா ரொமப் கண்டிப்புடன் இருந்தாங்க. அதுனாலேயே கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு கவர்மெண்ட் ஹைஸ்கூலில் முதல் மாணவன் என்ற பெருமையுடன் வெளியே வந்தேன். அதே சமயம் ஏழாம் கிளாஸ் வரை ஸ்கூலில் நான் சுமாரான் ஸ்டூடண்டா, சக மாணவர்களுடன் எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தேன். அப்படி இருக்கும் போது எட்டாம் கிளாசில், சதானந்தவள்ளி -ங்கற டீச்சரின்கண்டிப்புதான், என்னை சிறந்த மாணவனாக மாற்றிச்சு. அதை அடுத்து ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியராக வந்த ராமசாமி சார், என் வாழ்வில் மறக்க முடியாத மரியாதைக்குரிய மனிதர். என் ஆங்கில ஈடுபாடைப் பார்த்து, என்னை என்.சி.சி.,யில் சேர்த்துக் கொண்டார். அங்கு, என் இன்வால்மெண்டைப் பார்த்து, 100 மாணவர்களுக்கு தலைவராக, பொறுப்பான பதவி கொடுத்தார்.போலீஸ் துறை மீது ஈடுபாடு வருவதற்கு, அவர்தான் முக்கிய காரணம். இதுனாலேயே ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதை, என் அப்பாவிற்குக் கூட இன்ஃபார்ம் பண்ணாம, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் சந்திக்கச் சென்றது, ராமசாமி சாரை தான். ஆனால், அவர் அப்போ உயிருடன் இல்லை. உள்ளுக்குள் அழுதபடியே, அவர் படத்தின் முன் நின்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். என்னை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்காமலேயே, அவர் மறைஞ்சுட்டார்” என்று சொன்னப் போது துளிர்த்த கண்ணீர் இன்னமும் இருக்கிறது.
கொஞ்சம் டீடெய்லா சொல்றதானா கன்யாகுமரி டிஸ்ட்ரிக் குழித்துறையில் 1962ஆம் வருசம் ஜூன் மாதம் 5-ந் தேதி சைலேந்திரபாபு பிறந்தார்.அங்குள்ள அரசுப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடிச்சவர் அப்பவே விவசாயத்தின் மீது தீரா காதல் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்தின் காரணமா மதுரையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் விவசாயம் மற்றும் அறிவியல் படிப்பில் சேர்ந்து இளங்கலை பட்டமும் பெற்றார். காலேஜ் லைஃப்ஃபில் சினிமா ஹீரோவின் தொடக்கக்கால லைஃப்-பை உறுதிப்படுத்துவது மாதிரி லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்டாதான் இருந்தார் சைலேந்திரபாபு, அப்படி இருக்கும் போது இவரோட காலேஜூக்கு சீஃப் கெஸ்ட்-டா வந்த ஒருவரோட பேச்சைக் கேட்டு மயங்கி ஈர்க்கப்பட்டு இனி “காவல்துறைதான் தன்னுடைய பாதை” என்று தீர்மானிச்சுட்டார்
அதை அடுத்து ஐ.பி.எஸ். அதிகாரியாக செலக்ட் ஆகி ஹைதராபாத் போலீஸ் அகாடமியில் ட்ரெய்னிங் முடிச்சு 1989ஆம் வருசம் கோபிச்செட்டிபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக (ஏ.எஸ்.பி.)யாக தன்னோட காவல்துறை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் டி எஸ் பி-யா ஒர்க் செஞ்சார். இதையடுத்து, 1992ஆம் ஆண்டு தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமான செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார். அவரது சிறப்பான பணி காரணமாக சிவகங்கை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளராக சைலேந்திராபுவை அப்போதைய அரசு நியமிச்சுது. அப்பாலே,சிங்காரச் சென்னையில் உள்ள அடையாறில் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்று சில காலம் பணியாற்றினார்.
2001ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று விழுப்புரத்திலும், 2006ம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னையிலும் பணியாற்றினார். 2012ம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திரபாபு திருச்சியில் டி.ஐ.ஜி.யாகவும், கரூர் தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். சிறப்பு காவல்படையின் ஐ.ஜி,யாக பணியாற்றிய சைலேந்திர பாபுவை, தமிழக அரசு கோவை சிட்டி கமிசனராக நியமித்தது. கோவை மாநகரா ஆணையராக அவர் பணியாற்றியபோது, பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோவையில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கணினிப்பயற்சி குறித்தும், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இப்படி காவல்துறையின் அயராத பணிகளுக்கு இடையிலேயும் மாணவர்களின் கல்வி நலனில் அதிக அக்கறையுடன் சைலேந்திரபாபு செயல்பட்டு வருகிறார். நல்ல காவல்துறை அதிகாரியாக மட்டுமின்றி, முன்னேறத் துடிப்பவர்களுக்கு உந்துசக்தி அளிக்கும் விதமாக “சிந்தித்த வேளையில்”, “உனக்குள் ஒரு தலைவன்”, “உங்களுக்கான 24 போர் விதிகள்”, “அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்”, “உடலினை உறுதி செய்”, “சாதிக்க ஆசைப்படு”, “You too can become IPS officer”, “நீங்களும் ஐ,பி.எஸ். ஆகலாம்” என தமிழிலும், ஆங்கிலத்திலும் எக்கச்சக்கமான புத்தகங்களை எழுதி இருக்கார்.
இதுமட்டுமின்றி கல்லூரிகள், பள்ளிகளுக்கு பல முறை நேரில் சென்று மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக பல முறை தன்னம்பிக்கை ஊட்டும் . மேலும், ஐ.பி.எஸ். ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத்துடிப்பவர்கள் பலருக்கும் உத்வேக உரையும் பலமுறை அளித்துள்ளார். பதவி உயர்வுகள் எத்தனை பெற்ற போதிலும், கல்வியின் மீது தீராத தாகம் கொண்ட சைலேந்திர பாபு 2013ம் ஆண்டு தனது “missing children” என்ற ஆய்வுக்கட்டுரைக்காக சென்னை பல்கலைகழகத்தின் முனைவர் பட்டத்தை பெற்றார்.
பொறுப்பான காவல்துறை அதிகாரி, தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர் என்ற பொறுப்புகளுக்கு இடையில் தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதையும் சைலேந்திர பாபு நிரூபித்துள்ளார். 2004ம் ஆண்டில் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதுநிலை அத்லெட் போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டார். சென்னை, கோவையில் நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் மாராத்தான் போட்டியில் பங்கேற்று இருக்கார். கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 32 நாட்கள் சைக்கிளிலே சென்று சாதனை படைச்சிருக்கார். தேசிய போலீஸ் அகாடமி நடத்திய நீச்சல் போட்டிகளில் “ஆர்.டி.சிங்” கோப்பையை வென்றுள்ளார்.காவல்துறையில் தனது நேர்மையான பணிக்காக பதவிகள் மட்டுமின்றி ஏராளமான பதக்கங்களையும் சைலேந்திரபாபு குவிச்சிருக்கார்.
1993ம் ஆண்டு நக்சலைட் என்கவுண்டருக்காக வீரப்பதக்கத்தையும், கடலூரில் சாதிக்கலவரத்தை வெற்றிகரமாக தடுத்ததற்காக 2000ம் ஆண்டில் முதல்-அமைச்சர் பதக்கமும், 2001ம் ஆண்டு யானை தந்தத்தை வெட்டியவர்களை கைது செஞ்ச வீரப்பதக்கத்தையும், 1997ம் ஆண்டு சிவகங்கை ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியதற்காக 2001ம் ஆண்டு பிரதமர் பதக்கத்தையும் பெற்றுள்ளார். 2005ம் ஆண்டு புகழத்தக்க சேவை செய்தததற்காக குடியரசுத் தலைவரின் விருதையும், சிறப்புமிகு சேவைக்காக 2013ம் ஆண்டு ஜனாதிபதி போலீஸ் விருதையும் வென்றுள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற காவல்துறையின் தாரக மந்திரத்தின் அடிப்படையிலே 50 வயதை கடந்தும் காவல்துறையில் பணியாற்றியதற்காக, பதவி உயர்வுகள், பதக்கங்களை பெற்ற சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். தற்போது காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தனது பணிக்காலத்தில் டெல்லியில் அயல்பணியில் சிபிஐ, ரா, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் என ஏதாவது ஒரு பணிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றல் வாங்கி அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு வருவார்கள். ஆனால் அயல்பணியில் செல்லாத முழுவதும் தமிழக அரசுப்பணியிலேயே பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி இவர். அயல்பணியில் பணியாற்றாமல் பதவிக்கு வந்த 2 வது டிஜிபி இவர். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத பதவி இது. அப்பேர்பட்ட பொறுப்பில் பழக எளிதானவர் என்றும் இதுவரை காவல்துறையில் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் எனவும் சமூக வலைதளங்களில் பிரபலமான சில ஐபிஎஸ் அதிகாரிகளில் சைலேந்திரபாபு முன்னோடி என்று குறிப்பிடப்படும் சைலேந்திரபாபு தமிழக காவல்துறைக்கு இன்னொரு கலங்கரை விளக்காக ஒளி வீச ஆந்தை ரிப்போர்ட்டர் வாழ்த்துகிறது