பைஜூஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பிய விவகாரம் : அமலாக்கத்துறை நோட்டீஸ்!

பைஜூஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பிய விவகாரம் :  அமலாக்கத்துறை நோட்டீஸ்!

2011இல், சில லட்சங்கள் முதலீட்டில் போட்டித் தேர்வுகளுக்கு கோச்சிங் வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜூஸின் இன்றைய சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலருக்கும் மேல் என்கிறார்கள். 5 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் பைஜூஸில் தங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இதில் 55 லட்சம் மாணவர்கள் கட்டணம் செலுத்திப் படித்துவருகின்றனர். ஆண்டுக்கு ரூ.3000 கோடி அளவில் வருவாய் ஈட்டுகிறது பைஜூஸ்.கடந்த ஓராண்டில் மட்டும் ‘ஆகாஷ் அகாடமி’ (950 மில்லியன் டாலர்), ‘கிரேட் லேர்னிங்’ (600 மில்லியன் டாலர்), ‘எபிக்’ (500 மில்லியன் டாலர்), ‘வொயிட்ஹேட்ஜூனியர்’ (300 மில்லியன் டாலர்) உட்பட 8 நிறுவனங்களை பைஜுஸ் வாங்கியிருக்கிறது.பைஜூஸின் வளர்ச்சி என்பது இந்தியக் கல்வித் துறையின் வீழ்ச்சியைக் குறிக்கிறது என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 9,000 கோடி ரூபாயை பைஜூஸ் நிறுவனம் அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக வைத்து பைஜூஸ் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த பைஜூஸ் நிறுவனம் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 9,000 கோடி ரூபாயை அந்நிறுவனம் அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில்  விளக்கம் அளிக்கும்படி ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பைஜு ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.ஆனால் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அமலாக்கத்துறையின் தகவல்களை மறுத்து இருக்கிறார். அன்னிய செலவாணி நிர்வாக சட்ட விதிமீறல்கள் எதுவும் எங்கள் நிறுவனத்தில் நடைபெறவில்லை என்று அவர் கூறினார். தங்கள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.

பைஜூஸ் நிறுவனத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும்

கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ரவீந்திரன், உள்ளூர் பள்ளியில் படித்தார். அந்த பள்ளியில் அவரது தந்தை இயற்பியல் ஆசிரியர், அவரது தாயார் கணித ஆசிரியர். பள்ளிப் படிப்பை முடித்ததும் ரவீந்திரன் இன்ஜினியரிங் படித்தார். இதையடுத்து, ரவீந்திரன் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் சேர்க்கை இருமடங்கானது. இதனால், பெரிய விளையாட்டு அரங்கத்தில் அவர் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரிடம் பயின்றனர்.நல்ல பயிற்றுனர்கள் பற்றாக்குறை மற்றும் பழமையான முறைகளில் கற்பிப்பது உள்ளிட்டவைகளுக்கு இடையே, ரவீந்திரனின் கற்பித்தல் முறைகள் இந்தியாவில் தனித்துவம் பெற்றன. ரவீந்திரன் தனது சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களை வைத்து கற்றுக் கொடுக்க வைத்தார். தொடர்ந்து 41 பயிற்சி மையங்களை அவர் திறந்தார்.

இதை அடுத்து இந்த ஆன் லைன் எஜூகேசன் சர்வீஸின் நிறுவனரான பைஜு ரவீந்திரனும், அவரது மனைவி திவ்யா கோகுல்நாத்தும் (கோச்சிங் வகுப்பின்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர்) இணைந்து 2011-ம் ஆண்டு பைஜுஸை ‘திங்க் அண்டு லேர்ன்’ என்ற பெயரில் நிறுவனமாக மாற்றினர். ரவீந்திரன் மூலமாக ஐஐஎம் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று அங்குப் படித்து முடித்த மாணவர்கள் ரவீந்திரனுடன் இணைந்தனர். நுழைவுத் தேர்வுக்கான கோச்சிங் தவிர, பள்ளி மாணவர் களுக்கான டியூஷன் வகுப்புகளை எடுக்கும் நிறுவனமாகவும் பைஜுஸ் விரிவடைந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, வகுப்புகளை டிஜிட்டல் நோக்கி நகர்த்துகிறார் ரவீந்திரன். பயிற்சி வகுப்புகள் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது; தொடர்ச்சியாக 2015இல் பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. அது பைஜுஸ் நிறுவனத்துக்கு பெரும் சந்தையைத் திறந்தது.

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஆண்டில் 55 லட்சம் பேர் பைஜுஸ் செயலியைத் தரவிறக்கம் செய்தனர். 2.5 லட்சம் மாணவர்கள் ஆண்டு சந்தா செலுத்தினார்கள். பைஜுஸ் கைவைத்திருக்கும் சந்தை உலக கவனத்தை ஈர்த்தது. பைஜூஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே ‘செக்யுயா கேபிடல்’ (Sequoia Capital), ‘ஸோபினா’ (Sofina) ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜூஸில் முதலீடு செய்கின்றன, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான ‘சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்’ (chan zuckerberg initiative) பைஜூஸில் 50 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தபோது உலகம் உற்று அதை நோக்கியது. தற்போது, ‘சில்வேர் லேக்’, ‘பாண்ட்’, ‘பிளாக் ராக்’, ‘சேண்ட் கேபிடல்’, ‘டென்சென்ட்’, ‘ஜெனரல் அட்லான்டிக்’, ‘டைகர் குளோபல்’ என இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் பைஜூஸில் முதலீடு செய்துள்ளன.

கொரோனாவுக்குப் பிறகு இந்தியக் கல்வித் துறையே ஆன்லைனை நோக்கிய நகரலானது, பைஜூஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பைஜூஸ் நிறுவனம் வருவாய் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. நன்றாகத்தானே இருக்கிறது, திறமை கொண்ட சாமானியர் ஒருவர் கல்வித் துறையில் உச்சம் தொட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்றுதானே கேட்கிறீர்கள்? ஆமாம், தன் திறமையை மூலதனமாகக் கொண்டு ரவீந்திரன் எட்டிய வளர்ச்சி உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், ஒரு நிறுவனமாக பைஜூஸ், சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் வரவேற்கத்தக்க ஒன்று அல்ல. இந்தியக் கல்வி அமைப்பில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநிலையில் பெரும் சிதைவை பைஜூஸ் ஏற்படுத்திவருவதும் நடக்கிறது. இப்படியான கோச்சிங் சென்டர் வியாபாரத்துக்கு பைஜூஸ் ஒரு முன்னுதாரணமாகிவருகிறது. தற்போது கிராமப்புறப் பெற்றோர்களிடமும்கூட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கும் யூடியூப் வீடியோக்களிலும், கேம்களிலும் பைஜுஸ் விளம்பரம் வருகிறது. கைதவறி பைஜூஸ் செயலியை டவுன்லோட் செய்துவிட்டால்கூட அவர்கள் இந்நிறுவனத்தின் இலக்குப் பட்டியலில் வந்துவிடுகிறார்கள். ஆனால் அடிப்படையில் கல்வி என்பது சேவை என்பது பைஜூக்கு பின்னர் கல்வி சந்தைப் பண்டமாக மாறிவிட்டதென்னவே உண்மை.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அடுத்தடுத்து எழ ஆரம்பித்தன. ஊழியர்கள் சிலர் நிறுவனத்துக்கு எதிராக வெகுண்டெழுந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், பைஜூஸ் நிறுவனத்துக்கு வேறு சில வகைகளில் சரிவை ஏற்படுத்தியது. அப்போது அவர் பணத்தைப் பாதுகாப்பதற்கும், லாபத்தை ஈட்டுவதற்கும் பதிலாக முதலீடுகளை உயர்த்த முயன்றார்.

அதைவிட, மார்ச் 2021 இல் முடிவடையும் நிதியாண்டிற்கான நிதிக் கணக்குகளையும் அவர் தாக்கல் செய்யாதது குறித்து அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி மீறல்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகமும், பைஜூஸ் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக அந்நிறுவனத்தில் சோதனையும் நடைபெற்றது.நிதியாண்டு முடிவடைந்த பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு, பைஜூஸ் இறுதியாக தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டது. அதில், 45.7 பில்லியன் ரூபாய்கள் நஷ்டம் காட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13 மடங்கு அதிகமாகும் என்ற நிலையில்தான்9,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறி நிதி பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.அமலாக்கத் துறையின் அறிவிப்பு இன்னும் பைஜூஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்படவில்லை, ஆனால் இது தொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!