‘பிரதர்’ ஸ்டாலின். அரசியலில் நான் யாரையும் இப்படி கூறியது இல்லை – கோவையில் ராகுல் நெகிழ்ச்சி!
கோவை செட்டிபாளையத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நேற்றுமாலை நடந்த பிரம்மாண்ட பிரச்சாரபொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி (கரூர்) ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர். இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்ட நடந்த இடம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ளது. இங்கு ஒன்றரை லட்சம் சேர்கள் போடப்பட்டிருந்தது. இந்த சேர்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. உள்ளே இடம் இல்லாததால், வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் நின்றுகொண்டிருந்தனர். இவர்கள், ஸ்பீக்கர் உதவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி உரையை கேட்டனர். இதனால் பொதுக்கூட்டம் நடந்த பகுதியில், எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தன. இது, எதிர்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிரதமர் மோடியின் ரோடு ஷோ, பாஜ, அதிமுக பொதுக்கூட்டத்தில் சில நூறு பேரே கூடியிருந்தனர். மேட்டுப்பாளையத்தில் மோடி பங்கேற்ற பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. ஆனால், நேற்று நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் உட்கார இடமில்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைப்பார்த்து, பாஜ, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மிரண்டுபோய்விட்டனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து, செட்டிபாளையம் பகுதியில் நடந்த இந்தியா கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு நேற்று இரவு காரில் சென்ற ராகுல்காந்தி, சிங்காநல்லூர் பகுதியில் சென்றபோது, தனது காரை, சாலையோரம் நிறுத்தி, அங்கிருந்த ஒரு பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார். அங்கிருந்த ஒரு ஸ்வீட் கடையில், ஒரு கிலோ மைசூர்பாகு, ஒரு கிலோ ஜிலேபி வாங்கினார். இதற்கான கட்டணம் ரூ.750-ஐ அவரே கொடுத்தார். பின்னர், அந்த கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், ராகுல்காந்தியுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வாங்கி ஸ்வீட்டை பேப்பர் கேரி பேக்கில் போட்டு பத்திரமாக எடுத்துச்சென்றார். அதை, யாரிடமும் கொடுக்கவில்லை. அவரே கையில் வைத்திருந்தார். சுமார் 5 கி.மீ தூரம் பயணித்து, பொதுக்கூட்ட மேடையை அடைந்ததும், அங்கு அவரை வரவேற்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்த ஸ்வீட் பார்சலை கொடுத்து, மகிழ்ந்தார். சாலையின் குறுக்கே இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரை தாண்டிச்சென்று, ராகுல்காந்தி இனிப்பு வாங்கினார். இது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
நரேந்திர மோடியின் அரசு வெளியில் செல்லும் நேரம் இது. மோடியின் அரசு அல்ல, அதானியின் அரசு என தான் கூற வேண்டும். மோடி எல்லாவற்றையும் அதானிக்காகத்தான் செய்கிறார். நாடாளுமன்றத்தில் அதானிக்கு எப்படி சலுகை அளிக்கப்படுகிறது என நான் பேசினேன். இதனால், என் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது எம்.பி. பதவியை சில வாரங்களில் பறிக்கப்பட்டு என்னை வெளியேற்றினர். அதானி பிரச்னை குறித்து பேசியதற்கு எனது எம்.பி. பொறுப்பு மட்டும் அல்ல வீட்டையும் பிடுங்கினர். அந்த வீட்டைவிட்டு கொடுத்து விட்டேன். ஏன் என்றால் எனக்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வீடுகள் உள்ளது. உங்களின் இதயத்தில் நான் இருக்கிறேன்.
நீங்கள் புத்திசாலிகள், உங்களின் நாகரீகம் தொன்மையானது, ஒருவரை எப்படி மதிக்க வேண்டும் என உங்களுக்கு தெரியும். உண்மையானதை ஒருவர் பேசுவதை கேட்டு முடிவு செய்வீர்கள். உங்களுக்கு என தனி வரலாறு உள்ளது. உங்களின் வரலாறு என் கண்முன் தெரிகிறது. பெரியார், அண்ணா, காமராஜ், கலைஞர் ஆகியோர் அறிவாற்றல் மிகுந்தவர்கள். தமிழ்நாட்டிற்கு பல செய்துள்ளனர். அவர்கள் உண்மையான தலைவர்கள். அவர்கள் பேசியதை உலகம் கேட்டது. அவர்கள் தங்களின் உள்ளத்தில் இருந்து தமிழக மக்களுக்காக பேசினார்கள். இப்போது, தமிழ் மக்கள் தங்களின் குரலில் எளிமையான கேள்வியை எழுப்ப வேண்டும். மோடி, அதானி, ஆர்எஸ்எஸ் பற்றி கேள்வி கேட்க வேண்டும். ஏன் எங்களின் மொழி, வரலாறு, பாரம்பரியத்தை அவதூறாக பேசுகிறீர்கள்? என கேட்க வேண்டும்.
மோடி தமிழ்நாடு வந்தால் தோசை பிடிக்கும் என கூறுவார். டெல்லி சென்றால் ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவார். நீங்கள் இங்கு வந்து தோசை பிடிக்கும் என கூறி தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள். உங்களுக்கு தோசை இல்லை வடை கூட பிடிக்கலாம். அது எங்களின் பிரச்னை இல்லை. தமிழ் மொழி பிடிக்குமா? என்பதுதான் பிரச்னை. மீனவர்கள், விவசாயிகள் தற்கொலையும், இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். சிறு, குறு தொழில் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டது. நாங்கள் தமிழ் வரலாற்றை மதிக்கிறோம். நீங்கள் என்ன செய்வதை கவனமாக கண்காணித்து வருகிறோம்.
‘பிரதர்’ ஸ்டாலின். அரசியலில் நான் யாரையும் இப்படி பிரதர் என கூறியது இல்லை. ஆனால், ஸ்டாலினை கூறுகிறேன். அவர் தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து பேசினார். பாஜ வாஷிங் மிஷின் வைத்துள்ளது என தெரிவித்தார். அந்த வாஷிங் மிஷின் என்ன சிஸ்டம் என்றால், முதலில் மோடி அரசியலை சுத்தம் செய்வதாக கூறினார். பின்னர், தேர்தல் பத்திரம் என்ற திட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் யார் பாஜவுக்கு பணம் கொடுத்தாலும், அது யார், எவ்வளவு பணம் என்பது குறித்த விவரம் தெரியாது. சில வருடங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தேர்தல் திட்டம் சட்ட விரோதம் என கூறி, அந்த பணம் அளித்தவர்களில் பாஜ விவரம் தெரிவிக்க கூறியது. ஆனால், பெயர் விவரம் வெளியிடவில்லை.
பின்னர், நீதிமன்றம் தலையீடுக்கு பின், சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பாஜ கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. அந்த பத்திரம் மூலம் நிதி அளித்தவரின் பெயர், தேதி, நேரம், எவ்வளவு பணம் என அனைத்தும் வெளியானது. இதன் மூலம் மோடியின் அறிவாளித்தனமான ஊழல் தெரியவந்தது. மேலும், எந்த கம்பெனியின் மீது சிபிஐ, ஈடி, வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்ததோ, அந்த ரெய்டுகளுக்கு பிறகு அந்த கம்பெனிகள் பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் அளித்ததும் தெரியவந்தது. பின்னர், பணம் அளித்த கம்பெனிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. இது ஒரு சமூக அவலம். பணத்தை மிரட்டி வாங்குவது தான் அச்சுறுத்தல் என்கிறோம். சுரங்கம், சாலைகள் போன்றவைக்கு ஒப்பந்தங்களை வாரி வழங்கியுள்ளனர்.
இந்த ஊழல் பாஜவின் சிறு பகுதிதான். ஆனால், மோடி தன்னை நல்லவர் என கூறி வருகிறார். நீட் தேர்வினால் தமிழக இளைஞர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை எப்படி கற்கிறார்கள் என தெரியும். இதனால், நீட் தேர்வு வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நாங்கள் தமிழ்நாட்டின் வசம் விட்டுவிடுவோம்.இது சாதாரண தேர்தல் இல்லை. இது ஒரு தத்துவம் போன்றது. தமிழ்நாட்டு மக்களின் வரலாறு, மொழி, உரிமைகள், அரசியல் சட்டம் அடிப்படையின் மூலம் பாதுகாக்கப்படும். அரசியல் சட்டம் என்பது ஒரு புத்தகம் இல்லை. நாட்டு மக்களின் ஆத்மா. அந்த ஆத்மாவை ஆர்எஸ்எஸ், மோடி தாக்கி வருகின்றனர். இந்தியா மக்களுக்கான நாடு. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சொந்தமானது இல்லை. இன்றைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆர்எஸ்எஸ் தத்துவம் அடிப்படையில் கல்வி குறித்து பேசுகின்றனர்.
கல்வி நிறுவனம், தேர்தல் ஆணையத்தில் ஆர்எஸ்எஸ் தாக்கம் உள்ளது. இது நாட்டின் கோட்பாட்டை தாக்குகிறது. பாஜ அரசியல் சட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி உள்ளது. அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வைத்து தாக்குதல் செய்கின்றனர். இந்த நாடு பிரதமரின் சொத்து இல்லை. இந்த நாடு இங்குள்ள மக்களுக்கு சொந்தமானது. இதனை பிரதமர், அமைச்சர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த யோகியதை இல்லை. அரசியல் சட்டம் ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளோம். இந்தியா கூட்டணி நிச்சயமாக இத்தேர்தலில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.=இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நம் வெற்றிக்கு மகுடம் வைத்ததுபோல் இந்தியாவின் இளம்தலைவர் ராகுல்காந்தி இங்கு வருகை தந்துள்ளார். நாடு சந்திக்கக்கூடிய இரண்டாம் விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த திமுக தோளோடு தோள் நிற்கிறது. திமுக எப்போதும், சோதனை காலத்தில், காங்கிரஸ் கட்சியுடன் இருக்கும் கூட்டணி கட்சி. எப்போதும் வெல்லும் கூட்டணி, நமது கூட்டணி. அன்னை சோனியாகாந்தி மீதும், இளம் தலைவர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாத அன்பும், பாசமும் கொண்டவர்கள். நான், இந்த கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன். ‘‘ராகுல் அவர்களே வருகே, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக’’. இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து உங்களை வரவேற்கிறேன். ராகுல்காந்தியின் நடைபயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் இருந்து துவங்கி வைத்தேன்.
மும்பையில் நடந்த நிறைவு விழாவிலும் நான் கலந்து கொண்டேன். ‘‘மக்களிடம் செல்…, மக்களிடமிருந்து கற்றுக்கொள்…’’ என அண்ணா கூறிய வழியில் ராகுல்காந்தி நடைபயணத்தை துவக்கினார். மக்களோடு மக்களாக இருந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். இந்த தேர்தலின் ஹீரோ, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். திமுக தொடர்ந்து வலியுறுத்தும் சமூக நீதி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த வாக்குறுதிகளை ராகுல்காந்தி நிறைவேற்றுவார். நமது பிரதமர் மோடி எப்போதும் வெளிநாட்டில்தான் இருப்பார். ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால், அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். அப்படி வருகிற இடத்தில், எங்காவது தனது 10 ஆண்டுகால சாதனை பற்றி பேசுகிறாரா? இந்தியா கூட்டணி கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வசைபாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
எங்கு பார்த்தாலும் ஒரே பல்லவியை பாடி வருகிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்கக்கூடிய முழு தகுதிகளும் பிரதமர் மோடிக்கு உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு, இதுவரை மோடியிடம் இருந்து பதில் வரவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது யார்? கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துவது யார்? என ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கும் இதுவரை பதில் வரவில்லை. அதற்கு பதிலாக, ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்தீர்கள். இப்போது ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள். யார் ஊழல்வாதி? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்… ‘‘யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை…’’ என சொல்வதுபோல் உங்கள் கதை உள்ளது.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு என்னென்ன சிறப்பு திட்டம் கொண்டு வந்தீர்கள்? என உங்களால் எதையும் சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் 10 ஆண்டாக, தமிழகத்தை சீரழித்த பழனிசாமி. நாங்கள், இந்தியா கூட்டணிதான் ஆளவேண்டும் என்கிறோம். ஆனால், யார் ஆள வேண்டும்? என அதிமுகவினரால் சொல்ல முடியவில்லை. யார் ஆளக்கூடாது என்றும் அவர்களால் சொல்ல முடியவில்லை. கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடி தரும் களத்துக்கு வந்துள்ளார் பழனிசாமி. தன்னை சுற்றியுள்ள அத்தனை பேர் முதுகில் குத்தினார் பழனிசாமி. பாஜவை எதிர்த்து பேச பழனிசாமியால் முடியாது. ஏன்? என கேட்டால், அது, கூட்டணி தர்மம் என்கிறார். இது, சிம்பிளி வேஸ்ட்.
நாம் மூன்றே ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகள் செய்துளோம். அதைத்தான் அடையாளமாக காட்டி, வாக்கு கேட்கிறோம். கடுமையான நிதி நெருக்கடியிலும் இவ்வளவு திட்டங்களை தருகிறோம். மத்தியில், இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் இன்னும் பல திட்டங்களை தர முடியும். தொழில்வளம் நிறைந்த கோவை மாவட்டத்தை ஒன்றிய பாஜ அரசு நசுக்கிவிட்டது. இரண்டு தாக்குதல் நடத்தி நசுக்கிவிட்டது. ஒன்று – கருப்பு பணம் ஒழிப்பு என்கிற பெயரில், ஏழைகளில் சுருக்கு பையில் இருந்து பணத்தை எடுத்து விட்டார்கள். அடுத்து – ஜி.எஸ்.டி சட்டத்தை கொண்டுந்து முதலாளிகளை, கடனாளிகளாக மாற்றி விட்டனர்.
அண்டை நாடான வங்கதேசத்துடன், ஒன்றிய பாஜ அரசு போட்ட ஒப்பந்தம் காரணமாக, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் முடங்கி கிடக்கிறது. அத்துடன், 35 சதவீத டெக்ஸ்டைல் மில்கள் முடங்கி கிடக்கிறது. இப்படி தொழில்களை முடக்கிவிட்டு, கொங்கு பகுதி எனக்கு நெருக்கமான பகுதி… என பிரதமர் மோடி கோவை வந்தபோது வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும். பாஜ போன்ற கலவர கட்சிகளை உள்ளே விட்டால் அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சியும் போய்விடும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது யார்? என்று மக்களுக்கு தெரியும்.
இட்லி, பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும் என ஏமாற்றுகிறவர்களையும் தமிழ் மக்களுக்கு தெரியும். இதன்மூலம், பிரதமர் மோடியின் முகமூடி மொத்தமாக கிழிந்து தொங்கிவிட்டது. கோவை வேண்டாம், தமிழ்நாடு வேண்டாம் என புறக்கணித்த மோடிக்கு நாம் இப்போது பதில் சொல்வோம். ‘‘வேண்டாம் மோடி… வேண்டாம் மோடி….’’ என ஓங்கி ஒலிப்போம். தெற்கில் இருந்து வரும் இந்த குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டை புறக்கணித்தால், தமிழ்மொழியை புறக்கணித்தால், தமிழர் மீதும், தமிழ் பண்பாட்டு மீதும் தாக்குதல் நடத்தினால் நமது பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஏப்ரல் 19ம் தேதி காண்பிக்க வேண்டும். நமக்கு எதிராக அணி வகுத்துள்ள பாஜவையும், அதிமுகவையும் ஒருசேர வீழ்த்துவேர். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க, உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன், வாருங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.