ஜோ பிடன் ஏற்பாட்டில் பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாடு: மோடிக்கு அழைப்பு!

ஜோ பிடன் ஏற்பாட்டில் பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாடு: மோடிக்கு அழைப்பு!

திர்காலத்தில் அடிக்கடி கனமழை, வெள்ளம், புயல், வெப்பக்காற்று, கடுங்குளிர், கடல் மட்டம் உயருதல், உணவு தட்டுப்பாடு என இன்னும் எத்தனையோ விளைவுகளைப் பருவநிலை மாற்றத்தால் மக்கள் சந்திப்பார்கள் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான சாத்திய கூறுகளும் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.

பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் விஷயங்களில் ஒன்று புவி வெப்பமயமாதல். கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதுக்குமான சராசரி வெப்பநிலை என்பது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு, தொழிற்சாலைகள் என மனிதர்களால் ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவும் தொடர்ந்து அதிகரிப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இச்சூழலில்தான் அமெரிக்காவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 22 மற்றும் 23–ந்தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஸ்காட்லாண்ட் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!