32°C

உலக தருக்கவியல் தினம்: சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு சிறப்புத் திருவிழா!

admin Published: January 14, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

“நான் சொல்வது சரி, நீ சொல்வது தவறு” – இந்த விவாதங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சூத்திரம் எது? மனிதன் வெறும் உணர்ச்சிகளால் ஆளப்படும் உயிரி மட்டுமல்ல, அவன் ‘சிந்தனை செய்யும் விலங்கு’ என்பதை உரக்கச் சொல்வதுதான் தருக்கவியல் (Logic). ஒரு சிறு குழந்தையின் ‘ஏன்?’ என்ற கேள்வியில் தொடங்கி, இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் ‘AI’ தொழில்நுட்பம் வரை அனைத்திற்கும் உயிர்நாடியாக இருப்பது தர்க்கம் மட்டுமே. அறிவின் வேரையும், உண்மையின் ஒளியையும் தேடும் பயணமான “உலக தருக்கவியல் தினத்தை” (World Logic Day) இன்று (ஜனவரி 14) கொண்டாடுவோம்!

வரலாற்றுப் பின்னணி

யுனெஸ்கோ (UNESCO) 2019-ல் இத்தினத்தை அறிவித்தது. ஜனவரி 14-ஐத் தேர்ந்தெடுக்க இரண்டு மேதைகள் காரணம்:

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

  • கர்ட் கோடல்: 20-ஆம் நூற்றாண்டின் தர்க்கச் சக்கரவர்த்தி மறைந்த தினம்.

  • ஆல்பிரட் தார்ஸ்கி: நவீன தருக்கவியலின் தந்தை பிறந்த தினம்.

அறிவின் ஆசான்கள்: வரலாற்றை மாற்றிய தத்துவவாதிகள்

  1. அரிஸ்டாட்டில்: “மனிதன் ஒரு பகுத்தறிவுள்ள உயிரி” என்றவர். முறையாக வாதம் செய்வது எப்படி என்பதை உலகிற்கு முதலில் கற்றுக்கொடுத்த மேற்கத்திய தந்தை.

  2. திக்நாகர் & தர்மகீர்த்தி: இந்திய மண்ணில் பிறந்த தருக்கப் புலிகள். ஒரு பொருளைப் பார்ப்பதற்கும், அதைப் புரிந்து கொள்வதற்கும் இடையே இருக்கும் தர்க்கப் பாதையை விளக்கியவர்கள்.

  3. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்: கணிதத்தையும் தத்துவத்தையும் ஒரு புள்ளியில் இணைத்தவர். குழப்பமான சிந்தனைகளைத் தர்க்கம் மூலம் தெளிவுபடுத்த முடியும் என்று நிரூபித்தவர்.

நவீன உலகில் ‘லாஜிக்’ இல்லையென்றால் என்னவாகும்?

இன்று தர்க்கம் என்பது வெறும் தத்துவம் அல்ல, அது ஒரு தொழில்நுட்ப ஆயுதம்:

  • AI மற்றும் கோடிங்: நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் முதல் சாட்ஜிபிடி வரை அனைத்தும் ‘தர்க்க வாயில்கள்’ (Logic Gates) வழியேதான் இயங்குகின்றன.

  • போலிச் செய்திகள்: சமூக வலைதளங்களில் பரவும் ‘வாட்ஸ்அப் கதைகளை’ உடைத்தெறிய நமக்குத் தேவைப்படுவது நுணுக்கமான தருக்க அறிவு.

  • நீதித்துறை: நீதிமன்றத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை விட, ஆதாரங்களோடு கூடிய தர்க்க ரீதியான வாதங்களே நீதியை நிலைநாட்டுகின்றன.

தினத்தின் நோக்கம்

  • தர்க்கம் என்பது கடினமான பாடம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்பதை உணர்த்துதல்.

  • புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் தருக்கவியல் எவ்வளவு முக்கியம் என்பதை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல்.

2026-ன் கருப்பொருள்: “தருக்கவியலும் பன்முகத்தன்மையும்” (Logic & Diversity)

இந்த ஆண்டு உலக தருக்கவியல் தினம் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது: உண்மை என்பது ஒன்றுதான், ஆனால் அதை அடையும் தர்க்கப் பாதைகள் பலவா?

யுனெஸ்கோ மற்றும் CIPSH இணைந்து அறிவித்துள்ள இந்தத் தீம் மூலம் பின்வரும் சுவாரசியமான விஷயங்கள் ஆராயப்படுகின்றன:

  • வெவ்வேறு தருக்க முறைகள்: உலகில் ஒரே ஒரு தருக்க முறைதான் உள்ளதா அல்லது கலாச்சாரம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அவை மாறுபடுமா?

  • முரண்பாடுகள்: வெவ்வேறு தருக்க அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, உண்மையை எப்படிக் கண்டறிவது?

  • கிராஃபிக் டிசைன் சவால்: இந்தத் தத்துவார்த்தமான கருப்பொருளைக் கலைநயத்துடன் விளக்க உலகளாவிய அளவில் வடிவமைப்பாளர்களுக்கும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தர்க்கம் என்பது அறிவின் தொடக்கம், முடிவல்ல.” ஒரு சமூகம் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கும்போதுதான் ஜனநாயகம் மற்றும் அறிவியல் முன்னேற்றம் தழைக்கும். தர்க்கம் என்பது வெறும் விவாதம் செய்வதற்கான கருவியல்ல; அது ஒரு சமூகத்தைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வெளிச்சம். வெறும் தகவல்களைச் சேமிக்காமல், அவற்றைச் சிந்தித்துச் செயலாக்கும் சமூகமாக மாறுவோம். வாதங்களை நேசிப்போம், உண்மைகளைத் தருக்கத்தின் துணைகொண்டு வெல்வோம்!

நிலவளம் ரெங்கராஜன்