32°C
விளம்பரம்
Advertisement

பெத்லகேம் குடும்ப யூனிட்: நிவின் பாலி – மமீதா பைஜூ புதிய காதல் கொண்டாட்டம்!

admin Published: September 2, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


பிரபல பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பிரேமலு’ புகழ் இயக்குநர் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, தமிழ் ரசிகர்களுக்குப் படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பிரமாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தமிழில் வெளியிடுகின்றன.

கேரளாவில் மலர்ந்த பிரம்மாண்ட வெற்றி

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி மலையாள மொழியில் திரைக்கு வந்த இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உணர்வுபூர்வமான காதல் மற்றும் குடும்ப நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிநடை போட்டு வரும் சூழலில், தற்போது தமிழிலும் திரையரங்குகளை அலங்கரிக்கத் தயாராகி வருகிறது.

நிஜ வாழ்க்கையின் பிம்பம்: இயக்குநர் கிரீஷ் ஏ. டி. பகிர்வு

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கிரீஷ் ஏ. டி., கதையின் பின்னணி குறித்துப் பேசுகையில், கேரளா தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை மக்கள் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்று அழைப்பார்கள். அந்தப் பின்னணியைக் கொண்டுதான் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவை என்றும், முக்கியமாக கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் தனக்கு நன்கு தெரிந்த ஒருவரின் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்றும் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

நட்பும் திரைப் பயணமும்: தயாரிப்பாளர் பகத் பாசில் நெகிழ்ச்சி

படத்தின் தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான பகத் பாசில் பேசுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் நாயகன் நிவின் பாலி மற்றும் நாயகி மமீதா பைஜூ இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், தானும் தினேஷ் மற்றும் ஷியாம் ஆகியோரும் இணைந்து 2018 ஆம் ஆண்டு தொடங்கிய நட்புப் பயணம் இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்வதாகவும், இதயத்திற்கு நெருக்கமான நல்ல கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறினார். மேலும், நல்ல திரைப்படங்களை என்றும் கைவிடாத தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தையும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

திரையரங்குகளில் காண அழைப்பு: தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத்

தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத் பேசுகையில், மலையாள ரசிகர்கள் அளித்த ஆதரவைப் போலவே தமிழ் ரசிகர்களும் இந்தத் திரைப்படத்திற்குப் பெரும் ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புவதாகக் கூறினார். குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் கண்டு மகிழுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நட்சத்திரப் பட்டாளமும் தொழில்நுட்பக் கலைஞர்களும்

ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ ஆகியோருடன் சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் பகத் பாசில் & ஃபிரண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, தமிழகத்தில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் வழங்குகின்றன.

உடனடி செய்திகள்