சிறந்த நடிகர் ‘வடிவேலு’, சிறந்த படம்‘அயோத்தி’-சென்னை திரைப்பட விழாவில் தேர்வு!
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. ராயப்பேட்டை சத்யம் மற்றும் அண்ணா தியேட்டர்களில் திரைப்பட விழாவில் இடம் பெற்ற உள்ளூர் முதல் உலக படங்கள் அனைத்தும் திரையிடப்பட்டது. இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் 12 படங்களும், உலக சினிமாவில் 12 படங்களும் , இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட்டது. தமிழில் இருந்து 1. வசந்தபாலனின் ‘அநீதி’, மந்திரமூர்த்தியின் ‘அயோத்தி’, தங்கர் பச்சனின் ‘கருமேகங்கள் கலைகின்றன’, மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ விக்னேஷ் ராஜா டி, செந்தில் பரமசிவம் ஆகியோரின் ‘போர் தோழில்’, விக்ரம் சுகுமாரனின் ‘ராவண கோட்டம்’, அனிலின் ‘சாயவனம்’, பிரபு சாலமனின் ‘செம்பி’, சந்தோஷ் நம்பிராஜனின் ‘ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’, கார்த்திக் சீனிவாசனின் ‘உடன்பால்’, வெற்றிமாறனின் ‘விடுதலை’, அமுதவாணனின் ‘விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3’ ஆகிய படங்கள் இடம் பெற்றது. இந்த திரைப்பட விழா நேற்று (டிசம்பர் 21) நிறைவடைந்தது.
இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.
மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்த்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்த்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது.
உலக சினிமா பிரிவிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்ட விபர இதோ:
World Cinema Feature film awards
11.Best Feature Film
Freedom(Libertate) : Dir.:Tudor Giurgiu Producer: Oana Bujgoi Giurgiu
Romania |2023
12.Second Best Feature Film
Wilding Country(Agreste) : Dir.: Sergio Roizenblit; Producers: Gustavo Maximiliano, Viviane Rodrigues,Sergio Roizenblit |Brazil|2023
13.Special Jury Award:
Act Natural(Seid einfach wie ihr seid)
Dir.: Alice Gruia : Producers: Corinna C. Poetter, Marco Gilles,Lutz Heineking,Alice Gruia | Germany|2023
14.Special Mention Certificate:
Nathalia Syam, the director of Footprints on Water |UK|2023
இவ்விழாவில் விருது வாங்கிய பின பேசிய வடிவேலு, “சர்வதேச திரைவிழா 7 நாட்கள் இங்கே நடக்கிறது. எனக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. சர்வதேச படவிழாவுக்கு நான் இதுவரை சென்றதில்லை. பழைய படங்களைப் பார்த்தால் சௌகார் ஜானகி அழுதுகொண்டேயிருப்பார். ‘வீட்ல தொல்ல தாங்காம தானே இங்க வந்தோம். நீ ஏன்மா அழுகுற’ என கேட்பார்கள். அழுவதெல்லாம் இப்போது வொர்க் ஆகாது. ஆனால், அப்படியிருந்தும் ‘மாமன்னன்’ கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விருது நீங்கள் எனக்கு கொடுத்தது. அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். இது படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் போல. சீரிய சிந்தனைவாதி. நாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர் கண்முன் கொண்டுவருகிறார். அந்தக் காட்சியில் காமெடி நிறைய இருக்கிறது. அதனை முன்பே சொல்லியிருந்தால் படத்துக்கு போயிருக்க மாட்டீர்கள்.
‘மாமன்னன்’ படத்தின் காட்சிகளை கொஞ்சம் திருப்பினால் காமெடியாகிவிடும். ஒரு காட்சியில், ‘கதவ சாத்திட்டு ஏங்க உள்ள உட்காரணும்’ என மாரி செல்வராஜிடம் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘அண்ணே சிரிச்சுடாதீங்க’ என்றார். சீரியஸான அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிறைய காமெடி நடந்தது. ஒரே ஒரு ‘மாமன்னன்’ படத்தில் நடித்தேன்… இப்போதெல்லாம் எனக்கு வரும் கதைகள் ஒரே சோகக் கதைகளாகவும், அழுகை கதைகளாக வருகிறது. அவர்களிடம் நான் கொஞ்ச நாட்கள் ஆகட்டும். பிறகு இப்படியான கதைகளில் நடிக்கிறேன் என்று சொன்னேன். மாமன்னன் படம் மக்களிடம் சென்று சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.