கொரோனாவால் பொருளாதார நிலை – ஆஸ்திரேலியா அப்செட்!
உலக மக்களை முடக்கி போட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்த ஊரடங்கால் ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுக்க உற்பத்தி, வணிகம் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது. வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாரப்பட்சமில்லாமல் அனைத்து நாடுகளும் பொருளாதார மந்தநிலையை எதிர் கொண்டு uள்ளன.அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனாவால் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக சுருங்கியது.
இது கடந்த 1991ம் ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாகும். மேலும் இந்த பொருளாதார வீழ்ச்சி ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வருட துவக்கத்தில் ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கோடிக்கணக்கான டாலர் மதிப்புக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் மார்ச் மாதத்திற்கு பின் ஆஸ்திரேலியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலியா பொருளாளர் ஜாஷ் பிரீட்ன்பெர்க், “கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் சமூக விலகல் நடைமுறைகளால் சுற்றுலா, போக்குவரத்து, உணவகங்கள் ஆகியவற்றின் வருவாய் குறைந்துவிட்டது. இது நம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசியளவிலான புள்ளிவிவரங்கள் நம் நாடு இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் இருந்த மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன.
கொரோனா வைரஸ் எங்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதேசமயம் எங்களிடம் நம்பிக்கை உள்ளது.ஆஸ்திரேலிய சமூகத்திற்கு கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம் என ஜாஷ் பிரீட்ன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் வீழ்ச்சி அடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்ய ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.