“படை தலைவன்” பட இசை வெளியீட்டு விழாத் துளிகள் !!

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”. வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார், இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர் சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் வசனகர்த்தா பார்த்திபன் தேசிங்கு பேசியதாவது….
சினிமாவில் என் மானசீக குரு, இன்ஸ்பிரேஷன் எல்லாமே முருகதாஸ் சார்தான், அவரது ஆசீர்வாதத்துடன் இங்கு இருப்பது மகிழ்ச்சி. நான் கேப்டனின் தீவிர ரசிகன். அவரது கேப்டன் பிரபாகரன் பட தலைப்பைத் தான் என் முதல் கதைக்கு வைத்தேன் அது கிடைக்கவில்லை. கேப்டன் உடன் வேலை பார்க்கும் எனும் என் ஆசை நிறைவேறவில்லை. படை தலைவன் வாய்ப்பு மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது. இந்தப்படத்திற்குத் தலைப்பு படைத் தலைவன். ஒருவன் பின்னால் ஒரு படையே நிற்கும் என்றால், அவன் தான் படை தலைவன், அது கேப்டன் மட்டும் தான். அவருக்குப் பிறகு, அது சண்முக பாண்டியனுக்குத் தான் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக்கதையை அன்பு முதலில் சொன்ன போது, நான் இதற்கு வசனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் நான் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் பேசியதாவது…,
நான் இங்கு கேப்டனுடன் எனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், அவருடன் ஒரு ஸ்டண்ட் காட்சியில் பணி புரிந்தேன், பெரிய அனுபவம் இல்லை என்றாலும் அனைவரின் சொல்லுக்கும் மதிப்பளிப்பவர் எங்கள் கேப்டன் அதை நான் அன்று உணர்ந்தேன், அதே போல் சண்முக பாண்டியனும் பொறுமையாகக் கோபம் கொள்ளாமல், எத்தனை டேக் சென்றாலும் அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவார், அவரிடத்தில் நான் என் கேப்டன் சாரை பார்க்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும், சண்முக பாண்டியன் அவர்களுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமையும் அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர் ரிஷி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அன்புவிற்கு நன்றி என் தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி, நான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் பணி புரியும்போது எல்லோரும் கேப்டன் சாரின் ஸ்டண்ட் பற்றித்தான் பேசுவார்கள், அவரை நேரில் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்தேன் ஆனால் அவர் மகனுடன் நடிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது, இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், என் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, படம் பார்க்கும் போது அது உங்களுக்குத் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி.
நடிகை யாமினி சந்தர் பேசியதாவது…,
இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன் சாரின் வாழ்த்து நமக்குக் கிடைத்துள்ளது அதுவே பெரிய பாக்கியம். இளையராஜா சார் பாடல்களில் நான் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. சண்முக பாண்டியன் சார் எங்கள் அனைவரையும் அன்பாய் பார்த்துக்கொண்டார். இதில் எங்களை விட, யானையுடன் தான் அவர் அதிக காட்சிகள் நடித்துள்ளார். இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்தப் படமும் அவர்களைப் பற்றித் தான். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..
”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்.. எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் U அன்பு பேசியதாவது,
என் தயாரிப்பாளர்களுக்கும், சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், படத்தின் வெற்றி நிகழ்வில் மீண்டும் நம் சந்திப்போம் நன்றி.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், அவரது இசையில் மூன்று அற்புதமான பாடல்கள் இப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.