ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களும் உலகில் நீடிக்கத்தான் செய்யும்!

ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களும் உலகில் நீடிக்கத்தான் செய்யும்!
1980களில் உக்ரைனிலிருந்து அகதியாக இடம் பெயர்ந்து தாய், தந்தை, தம்பியுடன் அமெரிக்காவில் யூரி வாழ்கிறான். அவனுக்கு ”வழக்கமான” வாழ்க்கையை வாழ விருப்பமில்லை. ஒரு சம்பவத்திற்கு பிறகு உலகில் உணவு, தண்ணீர் போல ஆயுதமும் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது என புரிந்துகொள்கிறான். ஆயுதம் விற்க துவங்குகிறான். மெல்ல மெல்ல ஆயுத வியாபாரியாக வளர்கிறான். நம்பிக்கையான கையாள் வேண்டும் என்பதற்காக தன் தம்பியையே துணைக்கு வைத்துக்கொள்கிறான்.
1982ல் லெபனான் போரின் பொழுது, இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் ஆயுதங்கள் விற்கிறான். போரில் இரு தரப்பிலும் இவன் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவன் மீது சந்தேகம் வந்து அமெரிக்க அதிகாரி இவனை பின்தொடர்கிறான். கொலம்பியாவில் மாபியா ஒருவனுக்கு ஆயுதங்கள் விற்கும் பொழுது, அதற்கு பதிலாக கொக்கையின் தருகிறான். அடுத்து வந்தநாட்களில் தம்பி கொக்கையினுக்கு அடிமையாகிவிடுகிறான். அவனை அதிலிருந்து மீட்க மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தனியாளாகவே தொழிலில் தொடர்கிறான்.
தனக்கு பிடித்த ஒரு விளம்பர மாடல் நடிகையை ஒரு புகைப்பட ஷூட்டிங் என பொய்யாய் வரவழைத்து, அவளிடம் பழகி, அவளேயே திருமணம் செய்துகொள்கிறான். கப்பல் வியாபாரி என சொல்லிக்கொள்கிறான். தான் செய்யும் சட்ட விரோத ஆயுத தொழிலை அவளிடமிருந்து மறைக்கிறான். இப்படியும் சொல்லலாம். அதற்கு மேல் அவள் ஆராய விரும்பவில்லை.
சோவியத் கூட்டமைப்பு சிதைந்த செய்தியைப் பார்த்து யூரி குதூகலிக்கிறான். ஊர் ரெண்டுபட்டால், ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் தானே! அங்கே உடனடியாக போய், ரசிய ஆயுதங்களை உக்ரைன் இராணுவ அதிகாரியாக இருக்கும் தன் மாமா மூலம் வாங்கி விற்கிறான். பிறகு தனது ஆயுத தொழிலை ஆப்பிரிக்காவிற்கு விரிவு செய்கிறான். லைபீரியா சர்வாதிகாரிக்கு ஆயுதங்கள் விற்கிறான். பதிலுக்கு வைரங்களாக வாங்கிகொள்கிறான்.
இதற்கிடையில் அமெரிக்க அதிகாரி யூரி செய்யும் தொழிலை அவனின் மனைவியிடம் சொல்லிவிடுகிறான். அவள் கடுமையாக எதிர்க்கிறாள். அவளுக்காக தன் தொழிலை சில மாதங்கள் நிறுத்திவைக்கிறான். லைப்பீரியா சர்வாதிகாரி இவனிடம் மீண்டும் ஆயுதங்கள் கேட்கிறான். எளிதாய் கோடிகளில் சம்பாதித்த ருசி விட்டுவிடுமா? மீண்டும் துவங்குகிறான். இந்தமுறை போதையின் பிடியிலிருந்து மீண்டு வாழும் தம்பியை மீண்டும் அழைக்கிறான். முதலில் மறுப்பவன் பிறகு வந்துவிடுகிறான். மீண்டும் சென்றவனுக்கு இந்த முறை கடுமையாக சிக்கலுக்குள்ளாகிறான். அது என்னவென்று வெண் திரையிலோ, சின்னத் திரையிலோ பாருங்கள்
படம் முடிவடையும் சொல்லும் செய்தி முக்கியமானது. உலகின் ஐந்து மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர்கள் தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரசியா, சீனா) என்ற செய்தியை சொல்வதோடு படம் நிறைவடைகிறது.
படம் கற்பனைக் கதை இல்லை. ஆயுத வியாபாரிகளின் பின்னணியை ஆய்ந்து எடுக்கப்பட்ட படம் தான் இது! ஆயுத விற்பனையில் ஏகாதிபத்தியங்களின் பங்கை பளிச்சென சொன்ன படம் தான் இது! உலகில் ஆயுத சப்ளையில் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு 54%ல் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனா 13%. இங்கிலாந்து 7.1% மூன்றாமிடம். ரசியா, பிரான்ஸ் நான்காம், ஐந்தாமிடம். 2021 வரைக்கும் நிலவரம் இது தான்! உலகம் அமைதியாய் இருந்தால், அமெரிக்க செனட்டில் உள்ள ஆயுத வியாபாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். போர்கள் வெடித்தால் படத்தில் யூரியைப் போல குதூகலிப்பார்கள்.
20ம் நூற்றாண்டின் மத்தியில் காலனி ஆட்சிகளுக்கு எதிராக போராடிய பொழுது, இனி நேரடியாக காலனி ஆட்சி சாத்தியம் இல்லை என்பதை ஏகாதிபத்தியங்கள் புரிந்துகொண்டன. மறைமுகமாக தான் ஆட்சி செய்யமுடியும் என்பதை முடிவு செய்தன. உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மூலம், காட், டங்கல் திட்டம் மூலம் உலகை மீண்டும் பங்கு போட கிளம்பின. மேல்நிலை வல்லரசு நாடுகளும், மேல்நிலை வல்லரசுகளாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளும் தங்களுக்குள் நாடு பிடிக்கும் போட்டியை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இதன் விளைவாக தான் கடந்த பல நாடுகளில் போர்கள் வெடித்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். தங்களுக்கு எதிரான ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள். தங்களுக்கு சாதகமான பொம்மை அரசுகளை நியமித்துக்கொள்கிறார்கள். இதன் தொடர்ச்சியில் தான் இன்று நடந்துவரும் ரசியா – உக்ரைன் போர் ரத்தச் சாட்சியாக இருக்கிறது. எவ்வளவு உயிர்கள்? நாடுவிட்டு நாடு அகதிகளாக பல லட்சம் பேர் இடம் பெயர்கிறார்கள்.
இவர்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவையும் ஏகாதிபத்தியத்தின் காலடியில் இணைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான், தன் குடிமக்களுக்கு 70 ஆண்டுகளாகியும் அடிப்படை கல்வியான எட்டாவது வரைக்குமான கல்வி கொடுக்கமுடியவில்லை. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அரசு அறிவிக்கிறது. இந்த பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி மட்டுமே கல்விக்கு ஒதுக்குகிறது. கொரானா அலை அலையாய் மக்களை தாக்கினால் கூட சுகாதாரத்திற்கு 86000 கோடி தான் ஒதுக்குகிறது. ஆனால் இராணுவத்திற்கு 5 லட்சம் கோடிக்கும் மேல் தாராளமாய் ஒதுக்குகிறது.
மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என்பது போல, ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களும் உலகில் நீடிக்கத்தான் செய்யும்! ஏகாதிபத்தியதற்கு பணிந்து சேவை செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து போர் தொடுத்தாலோ போதும்! போரையும் ஒழித்துவிடலாம். தங்களுக்கான விடியலையும் சாதித்துவிடலாம்.
error: Content is protected !!