செயற்கைக் கருப்பை ; குறை பிரசவ குழந்தைகளை காக்க அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்!
ஒவ்வொருவருக்கும் சுக பிரசவம் நிகழவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சுமார் 12 முதல் 18 விழுக்காட்டினருக்கு குறை பிரசவமாகி விடுகிறது. இயல்பான எடையான இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் குழந்தை பிறந்தால் அது எடை குறைந்த குழந்தை அல்லது குறை பிரசவக் குழந்தை எனப்படுகிறது. ஏழு மாதத்திற்குப் பிறகு திடீரென எப்போதாவது சிறுநீர் கசிவது அல்லது பெருக்கெடுப்பது போன்றே பனிநீர் வெளியேறுவதைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை குறைபிரசவக் குழந்தையாகும். ஒருமுறை கருத்தரித்து குறை பிரசவத்தில் குழந்தை பெற்றிருந்தால் மறு முறையும் அவ்வாறு நிகழ வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் குறைமாத குழந்தைகளின் உயிரை காக்க கருப்பை போன்ற ஒரு செயற்கை கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியில் கருப்பை போன்ற சூழ்நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டது. குறைபிரசவத்தில் பிறந்த ஆட்டுகுட்டிகள் இந்த செயற்கை கருப்பையில் வெற்றிகரமாக முழு வளர்ச்சி பெற்றன. இதையடுத்து இந்த கருவி மூலம் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தங்கள் தாயின் கருப்பையில் வளர்வது போலவே கடைசி சில வார வளர்ச்சியை பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள்தான் இந்த சாதனையை செய்துள்ளனர். தற்போதைய நிலையில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி குறைமாத குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த குழந்தைககள், பொதுவாக மருத்துவமனைகளில் உள்ள இன்குபேட்டர் எனப்படும் பெட்டியில் வைக்கப்பட்டு செயற்கையான வழியில் சுவாசம், உணவு, மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
ஆனால் இந்த நிலையில் குழந்தைகளின் நுரையீரல் மிகவும் பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜனை தாங்கும் திறன் குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல், வலிப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த காரணத்தால் பல குழந்தைகள் இறக்கின்றன.இந்த பிரச்சனையை தீர்க்கவே விஞ்ஞானிகள் இந்த செயற்கை கருப்பையை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானிகளின் குழு தலைவர் ஆலன் பிளேக் கூறுகையில் ‘‘செயற்கை கருப்பையின் செயல்பாட்டை பரிசோதிக்க 4 மாதத்தில் பிறந்த 5 ஆட்டு குட்டிகளையும், ஓரளவு வளர்ச்சி பெற்ற 3 ஆட்டுக்குட்டிகளையும் தேர்ந்தெடுத்தோம். அதற்கு காரணம் ஒரு குழந்தையின் பேறுகாலத்தில் ஏற்படும் நுரையீரல் வளர்ச்சியோடு ஆட்டுக்குட்டியின் நுரையீரல் வளர்ச்சி ஒத்துபோகும் என்பதே.
இந்த கருவியில் கர்ப்பப்பையில் இருக்கும் ஆம்னியோடிக் திரவம் (Amniotic fluid) எனப்படும் பனிக்குடநீரை, பிரத்யேக பைகளில் நிரப்பி குட்டிகளை அதனுள் வைத்தோம். குட்டிகளுக்கு தேவைப்படும் உணவு மற்றும் ஆக்ஸிஜனை அதன் தொப்புள் கொடியோடு இணைக்கப்பட்ட குழாய் வழியாக வெளியே உள்ள ஒரு கருவி மூலம் செலுத்தி வந்தோம். இதனால் தாயின் கருப்பையில் உள்ளது போலவே இயற்கையான வழியில் உணவும் சுவாசமும் குட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
குட்டிகளுக்கு தேவைப்படும் வெப்பத்தை கருப்பையில் உள்ள வெப்பநிலையைப்போல் கட்டுப்படுத்தி வந்தோம். குட்டிகளின் இதயத்துடிப்பு, சுவாசம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. இதன் பயனாக சில வாரங்களில் அந்த ஆட்டுகுட்டிகள், தாயின் வயிற்றில் வளருவது போலவே முழு வளர்ச்சி அடைந்தது.’’ என்று ஆலன் பிளேக் கூறினார்.
அதாவது இந்த கண்டுபிடிப்பின் நோக்கம், 23 முதல் 28 வாரத்தில் (5 முதல் 7 மாதம்) பிறக்கும் குழந்தைகளுக்கு, தாயின் கருப்பையில் கிடைப்பது போன்ற முழுமையான வளர்ச்சியை அளிப்பது தான். ஏனென்றால் 28 வார பேறுகாலத்திற்கு பின் பிறக்கும் குழந்தைக்களுக்கு அதிக உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
இந்த கண்டுபிடிப்பை மனித குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்க 3 முதல் 5 வருடங்கள் ஆகும். இந்த கண்டுபிடிப்பை மனிதர்களுக்கு பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


