அலைபேசிகளால் விமானப் பாதுகாப்புக்கு ஆபத்தா?

அண்மை காலமாக உலக அரங்கில் தலைப்புச் செய்தியாகி வருவது விமானங்களில் ஏற்படும் தொடர் கோளாறுகள். ஏர் இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு விமான நிறுவனங்களும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. உதாரணத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜப்பானிய விமானம் ஒன்று பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. இந்த தொடர் நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய விமானப் பொறியாளர்களும் நிபுணர்களும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகளவில் பயணிகள் விமானங்களை போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரு நிறுவனங்களே பிரதானமாகத் தயாரிக்கின்றன. இதில், போயிங் நிறுவனத்தின் ஆதிக்கம் சற்று அதிகம். இந்த இருபெரும் நிறுவனங்களின் விமானங்களிலும் ஏன் இத்தகைய கோளாறுகள் ஏற்படுகின்றன என்ற கேள்விக்குத் தற்போது ஒரு புதிய ஆய்வு முடிவு உலக அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அலைபேசிகளின் அச்சுறுத்தல்: ஒரு புதிய கோணம்
தற்போதுள்ள நவீன விமானங்கள் அதிநவீன நுணுக்கமான தானியங்கி முறையில் இயங்குமாறு வடிவமைக்கப்படுகின்றன. இங்கு மின்னணு சாதனங்களின் அலைவரிசை மற்றும் இயங்கு தன்மை மிகவும் முக்கியமானவை. இந்தச் சூழலில்தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கசிந்துள்ளது: அதாவது பயணிகளின் அலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் விமானத்தின் மின்னணு கருவிகளில் சில பாதிப்புகளை ஏற்படுத்தி, குழப்பங்களை விளைவிக்கக்கூடுமாம்.
ஆம்.. விமானப் பயணத்தின்போது அலைபேசிகளை ‘விமானப் பயன்முறை’ (Flight Mode) அல்லது முழுமையாக அணைத்து வைக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதி. ஆனால், இந்த விதி வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது; தீவிரமான சோதனை கிடையாது. மனித சுபாவப்படி, 100 சதவீதம் எல்லாப் பயணிகளும் இதைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தக் கட்டுப்பாடற்ற பயன்பாடுதான் விமானத்தின் மின்னணு சாதனங்களில் ஏற்படும் சில குழப்பங்களுக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடுமையாகும் கட்டுப்பாடுகள்: என்னவாகும் செல்ஃபி பிரியர்களின் நிலை?
இந்த சந்தேகம் வலுக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் விமானத்துக்குள் அலைபேசிகளைக் கொண்டு செல்லும் நடைமுறை மிகவும் கடுமையாக்கப்படலாம். இது விமானப் பாதுகாப்புக் கருதி எடுக்கப்படும் தவிர்க்க முடியாத நடவடிக்கையாக இருக்கக்கூடும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், விமானத்துக்குள் செல்ஃபி எடுத்து மகிழும் பயணிகளின் நிலை சிக்கலாகும். ஆகையால், “கூகுள் மேப்ஸ்” வழிகாட்டுவது போல, “இப்பொழுதே அவர்கள் ஆசை தீர செல்ஃபி எடுத்துக் கொள்வது நல்லது” என்ற ஒரு சாவாலான நிலை உருவாகியுள்ளது. விமானப் பாதுகாப்புக்கும், நவீன தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கும் இந்த அலைபேசி சர்ச்சை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
பிரம்மரிஷியார்