அருவருப்பான அரசியல் செய்யும் ஆந்திரா முதல்வர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகையே அச்சுறுத்திய “கோவிட்-19” எனும் கொடிய வகை கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வாழ வழியின்றி கூட்டம், கூட்டமாக, சாரை, சாரையாக சாலை மார்க்கமாக நடைபயணமாக சென்று கொண்டிருந்த தருணத்திலும், பல அரசு மருத்துவமனைகளில் பிராண வாயு உருளைகள் (ஆக்சிஜன் சிலிண்டர்) இருப்பு இல்லாததால் பல உயிர்கள் கொத்துக் கொத்தாக மரணமடைந்த நிலையிலும் அந்த கொரோனாவெனும் பெருநோய் தொற்றை விரட்ட விளக்கேற்றுங்கள், பால்கனியில் நின்று கைதட்டுங்கள் என்று அந்த ரணகளத்திற்கு மத்தியிலும் காமெடி செய்த கூட்டத்திற்கு நம் தேசத்தின் பிரதமரே தலைமை தாங்கியது தான் தற்போது திருப்பதி லட்டு விவகாரம் வரை வந்து நிற்க காரணமாகியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக தனது அரசியல் எதிரியை நிரந்தரமாக ஒழிக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட அந்த சர்ச்சை குற்றச்சாட்டினை தொடர்ந்து லட்டு சாப்பிட்டவர்களுக்கும், லட்டு தயாரிக்கும் இடத்தில் மட்டுமின்றி திருப்பதி திருமலையிலும் தோஷம் ஏற்பட்டதாகக் கூறி “திங்கட்கிழமை (23.09.2024) மாலை 6.00மணிக்கு அனைவரது வீடுகளிலும் விளக்கேற்றி, “ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ” என்கிற மந்திரத்தை சொன்னால் அந்த தோஷம் கழிந்து விடும் என “ஜீ பூம்பா..!” போல தந்திரம் செய்து பக்தர்களின் இறை நம்பிக்கையை வைத்து திருப்பதி தேவஸ்தான மூடர் கூட்டம் சித்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பது உள்ளபடியே சிரிப்பையே வரவழைப்பதோடு, மிகுந்த கவலையடைச் செய்திருக்கிறது.
ஏனெனில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை உற்பத்தி செய்ய பசு மாடுகளும், எருமை மாடுகளும் தங்களின் உடலில் உள்ள ரத்தத்தை தான் மூலப்பொருளாக மாற்றி பாலாக்கி தருகின்றன (நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்து ஈன்றெடுத்த தாய் அதன் பின்னர் நமக்கு தரும் தாய்ப்பாலும் அந்த வகையைச் சேர்ந்தது தானே.?) என்பதை பகுத்தறிவு பேசுவோர் மட்டுமல்ல பெருநோய் தொற்றினை விரட்டிட விளக்கேற்றுங்கள், பால்கனியில் நின்று கை தட்டுங்கள், லட்டு சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் கழிக்க விளக்கேற்றுங்கள், மந்திரம் சொல்லுங்கள் என கோடிக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையை வைத்து பக்தர்களின் மனதில் மூட நம்பிக்கைகளை விதைக்கும் இந்த மூடர் கூட்டமும் கூட அதனை ஏற்றுக் கொள்ளத் தானே செய்யும்.?
ரத்தம் அசைவம் என்பதும், பால் தரும் கால்நடைகளும் அசைவம் என்பதும் உண்மை என்றால் அந்த கால்நடைகள் தங்களின் ரத்தத்தையே பாலாக தரும் போது பாலும், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பால் உபபொருட்கள் மட்டும் எப்படி சைவமாக இருக்க முடியும்..? என்பதை இந்த மூடர் கூட்டம் அறியாமல் போனது எப்படி.? என தெரியவில்லை. இதுவரை அவர்கள் குடித்த அசைவமான பாலும், உண்ட பால் சார்ந்த உபபொருட்களும் சேர்ந்து அவர்களின் ஒட்டுமொத்த உடலை தீட்டாக்கி வைத்து, தேசத்தையே அல்லவா தோஷமாக்கி வைத்திருக்கிறது.,
அப்படியானால் ஒட்டுமொத்த தேசமும் பல நூற்றாண்டுகளாகவே தோஷமாகி, தீட்டாகி இருக்கும் நிலையில் பல நூற்றாண்டுகளாக உள்ள இந்த தீட்டையும், தோஷத்தையும் கழிக்க இந்த மூடர் கூட்டம் எதை தட்டச் சொல்லும்.?, எதை ஏற்றச் சொல்லும்.?, என்ன ஓதச் சொல்லும்..? என்பதை நினைத்துப் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்னது போல நமக்கு தலை சுற்றித் தான் போகிறது.
இந்த 21ம் நூற்றாண்டிலும் எந்த மத கடவுளர்களையும் வழிபட இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக நின்று கொண்டு கலகம் செய்வோரை பொதுமக்கள் அடையாளம் கண்டு கொள்ள விழிப்புணர்வு பெற வேண்டும், இல்லையெனில் நம்மையே தோஷமாக்கி தேசத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக கழித்து விடுவார்கள் என்பதால் பொதுமக்களாகிய நாம் அனைவருமே மிகுந்த கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும் இந்தியாவில் உள்ள எத்தனையோ மாநிலங்களில் இதுவரை ஆண்ட கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு சென்ற பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கட்சி ஆளுங்கட்சியான பிறகு முந்தைய ஆட்சியாளர்கள் மீதான பழிவாங்கும் படலத்தை ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள், கைது செய்து சிறையில் தள்ளும் படலங்கள் என பல வழிகளில், பல வகைகளாக முன்னெடுத்து வந்திருப்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.
எதிர்கட்சி வரிசையில் இருந்த கட்சி ஆளுங்கட்சியான பிறகு ஆளுங்கட்சியாக இருந்து ஆட்சி செய்தவரை மக்கள் மனதில் இருந்தும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்தும் முற்றிலுமாக அகற்றி, அறவே துடைத்தெரியும் செயலை செய்ய இதுவரை எந்த ஒரு முதலமைச்சரும் கையிலெடுக்காத விசயத்தை தெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஆந்திரா முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் கையிலெடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை தனது மூலதனமாக்கி, முன்மாதிரி வெறுப்பரசியலை விதைக்க ஆன்மீகத்தை அதுவும் கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பக் கடவுளாக இருக்கும் ஏழுமலையான் பக்தர்களின் இறை நம்பிக்கையை ஆயுதமாக்கி, அரசியல் சதுரங்கத்தில் தற்போதைய எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிட அவர் மீது அணுகுண்டு போன்றதொரு மிகப்பெரிய குற்றச்சாட்டை வீசியிருப்பது அருவருப்பான அரசியலுக்கு ஆந்திரா அரசியலை முன்மாதிரியான அடையாளமாக்கியிருப்பது கவலைக்குரிய விசயமாகும்.
மக்களின் இயலாமையை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள், மக்களின் இறை நம்பிக்கையை வைத்து ஆன்மீக வியாபாரம் செய்யும் மதவாதிகளை கொண்டு எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம், மனிதன் படைத்த சட்டத்தை ஏமாற்றலாம். ஆனால் பலகோடி மக்களின் நம்பிக்கையாக இருக்கும் கடவுளர்களையும் சேர்த்து ஏமாற்றிட நினைக்கும் அரசியல், மதவாத கயவர்களுக்கு அதற்குரிய தண்டனை இப்பிறவியில் கிடைத்தே தீரும். ஏனெனில் வினை விதைப்பவர்கள் வினையை தான் அறுவடை செய்ய முடியும் என்பதற்கேற்க திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் செய்து கோடிக்கணக்கான பக்தர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலை செய்துள்ள தெலுங்குதேசம் தலைவரும், தற்போதைய ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு அவர்களும், அவரோடு சேர்ந்து விலை போன அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் அதற்கான விலையை மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல இறைவன் மன்றத்திலும் கொடுக்கும் காலம் விரைவில் வரும்.