துருவ் விக்ரம் ரசிகர்களுடன் தன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ச்சி!

துருவ் விக்ரம் ரசிகர்களுடன் தன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ச்சி!

சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பிற்காகவே ஒருவர் மெனக்கிடுகிறார் எனில் அது நிச்சயம் விக்ரமாகத்தான் இருக்க முடியும். படத்திற்கு படம் வித்தியாசமான தோற்றம், உடல்வாகு என தன்னையே வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரு உன்னதமான கலைஞன் தான் விக்ரம்.இவரின் அப்பா வினோத் ராஜ் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், இவரின் உறவினரான தியாகராஜன், பிரஷாந்த் போன்றோர் முன்னணி இடத்தில் இருந்தாலும் யாருடைய உதவியும் இன்றி முன்னணி இடத்திற்கு வந்தவர் விக்ரம்.

அப்பேர்பட்ட விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் கடந்த 2019 ஆம் ஆண்டு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின்… தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஓரிரு படங்கள் நடித்தவர் இப்போது வாழை ஹிட் டைரக்டர் மாரி செல்வராஜ் படத்தில் நடித்து வருகிறார் .. இப்போது தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் 27ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக (Private Show) திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார்.

பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது… ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான திரு. சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார்.இதனிடையே நடிகர் துருவ் விக்ரம் தற்போது முன்னணி நட்சத்திர இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்- காளமாடன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!