June 2, 2023

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா அறிவிப்பு!

நம்மூர் நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதனை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கைப்பற்றியது. இந்த வெற்றியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்ட நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷுப்மான் கில் ஆகிய வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கவுள்ளதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் உள்பட 6 இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி ரக ஜீப் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆனந்த் மஹிந்திரா , ஆறு இளம் வீரர்கள் தங்களது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சாத்தியமில்லா ததை கனவு காண்பதையும், அதனை சாத்தியப்படுத்துவதையும் இவர்கள் நிகழ்த்தியுள்ளனர். பல தடைகளைத் தாண்டி இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இளம் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக எனது சொந்த செலவில் இந்த பரிசை வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.