டெல்லியில் காற்று மாசுவை தடுக்க செயற்கை மழையை வரவைக்கும் முயற்சி !?

டெல்லியில் காற்று மாசுவை தடுக்க  செயற்கை மழையை வரவைக்கும் முயற்சி !?

டெல்லியில் காற்று மாசு காற்று மாசு 400 முதல் 470 புள்ளிகளாக இருந்து வருகிறது. தலைநகரில் காற்று மாசு நேற்று 399 ஏ.கியூ.ஐ. ஆக இருந்தது. இந்த காற்றை சுவாசிக்கும் நபர் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் ஆகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.அதனால் இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக டெல்லி அருகே உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிரிடப்பட்ட பின்னர், மீதம் இருக்கும் விவசாய கழிவுகளை தீயிட்டு அழிப்பதன் காரணமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறி, விவசாய கழிவுகளை தீயிட்டு அழிக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது .

மேலும், காற்று மாசு அதிகம் இருக்கும் பகுதிகளில் தண்ணீர் லாரி கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து அதன் மூலமும் காற்று மாசுவை குறைக்க டெல்லி மாநில அரசு முயற்சித்து வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக செயற்கை மழையை வரவைக்க மாநில அரசு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இதற்கான தகவலை, நேற்று டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கோபாலராய் வெளியிட்டார். அதன்படி, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன், டெல்லியில் செயற்கை மழையை உருவாக்கி மழைபொழிவை வரவைத்து அதன் மூலம் காற்று மாசுவை கட்டுப்படுத்த உள்ளது.

செயற்கை மழை என்பது மேகங்களில் மழைத்துளிகள் உருவாவதை அதிகரிப்பதன் மூலம் மழைப்பொழிவைத் தூண்டும் செயலாகும். இது ஒரு வானிலையை மாற்றும் தொழில்நுட்பமாகும். சில்வர் அயோடைடு அல்லது பொட்டாசியம் அயோடைடு போன்ற வேதிப்பொருட்களை மேகங்களுக்குள் செலுத்துவதன் மூலம் இது மேக மூட்டம் அதிகரிப்பு அல்லது பனிக்கரு உருவாக தூண்டுதலாக செயல்படும். இது மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் அதிகரிக் செய்கிறது. இதன் மூலம் நீர்த்துளிகள் அதிகமாக உருவாகி மழை பெய்ய வழிவகுக்கிறது.

இந்த செயற்கை மழையை உருவாக்க 40 சதவீத மேகமூட்டம் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால், வரும் நவம்பர் 20,21 ஆகிய தேதிகளில் டெல்லில் மேகக்கூட்டம் உருவாக உள்ளது. அன்றைய தினம் செயற்கை மழை பொழிய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக இன்று டெல்லி மாநில அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோர உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இதற்கான வேலைகளை அரசு மேற்கொள்ளும்.

error: Content is protected !!