இணைய கூட்டங்களுக்கு மாற்றாக ஒரு சேவை!

இணைய கூட்டங்களுக்கு மாற்றாக ஒரு சேவை!

ப்போது நாம் பார்க்க போகும் புதிய இணைய சேவை உங்களுக்கு பிடிததமானதாகவோ, பயனுள்ளதாகவோ இல்லாமல் போகலாம். ஆனால், இந்த சேவை ஒரு தெளிவான செய்தியை உங்களுக்கு புரிய வைக்காமல் போகாது. இணைய சேவைகள் அல்லது செயல்பாடுகளில் ஒரு பிரச்சனை அல்லது மனக்குறை என்றால், அதற்கு தீர்வாக அமையக்கூடிய மாற்று சேவையை நாடிச்செல்லுங்கள் என்பது தான் அந்த செய்தி. அது மட்டும் அல்ல, இத்தகைய மாற்று சேவைகள் அநேகம் இருக்கின்றன என்பதும் தான் விஷயம். ’கேசட் ஆப்’ (https://www.cassetteapp.com/index.html) செயலியும் இத்தகைய சேவை தான்.

ஸ்பாட்டிபை போன்ற சேவைகள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்டிரீமிங் யுகத்தில், வழக்கொழிந்து போன ’கேசட்’ நுட்பத்தின் பெயரில் இந்த சேவை உருவாகியிருப்பதே பொருத்தமானது தான். ஏனெனில், இந்த செயலி, உடனடி அல்லது நேரடி இணைய சந்திப்புகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.

இணையவழி சந்திப்பு எனும் போது, ஜூம் சேவை தான் நினைவுக்கு வரும். வீடியோ சந்திப்பு சேவையான ஜூம் போன்ற சேவைகள் இணையவழி கூட்டங்களுக்கு ஏற்றவை. வர்த்தக நிறுவனங்களும், அலுவலக அமைப்புகளும், ஜூம் கூட்டங்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

நேரில் சந்திப்பதற்கு பதில் மெய்நிகராக இணையத்தில் சந்திப்புகளை ஏற்பாடு செய்யும் வகையில் ஜூம் ஏற்றது என்றாலும், இணைய வழி கூட்டங்களில் பல பிரச்சனை இருப்பதை மறுப்பதற்கில்லை. வீடியோ சந்திப்பால் ஏற்படும் ஜூம் களைப்பு ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருக்க வேண்டியிருப்பது, நேரம் வீணாவது, இலக்கு தவறிய ஆலோசனைகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

இன்னொரு ஜூம் கூட்டமா? என மனதுக்குள் அலறும் அனுபவம் பலருக்கு இருக்கலாம்.

இந்த இடத்தில் தான், கேசட் செயலி வருகிறது. வீடியோ கூட்டங்களுக்கு மாற்றாக, கூட்டத்தின் நோக்கத்தை பதிவு செய்து பகிர்ந்து கொள்ள இந்த சேவை வழி செய்கிறது. இப்படி பகிரப்படும் பதிவை, உறுப்பினர்கள் வாய்ப்புள்ள நேரத்தில் கேட்டு, அதற்கான பதிவை பதிவு செய்து அனுப்பலாம். இலக்கு மற்றும் பதில் அளிப்பதற்கான காலத்தையும் குறிப்பிட்டு திட்டமிடும் வாய்ப்பும் இருக்கிறது.

ஆக, சந்திப்புக்கு என்று தனியே நேரம் ஒதுக்காமலே, எதைப்பற்றி பேச இருக்கிறோமா அதை குரல் வழி பதிவாக பகிர்வதன் மூலம் கூட்டத்தின் பலனை கூட்டம் இல்லாமலே பெற இந்த சேவை உதவுகிறது.

நிகழ் நேரத்தில் பதில் சொல்வது அல்லாமல், விரும்பிய நேரத்தில் பதில் சொல்லும், ஒருங்கிணைக்கப்படாத தகவல் தொடர்பு முறையை அடிப்படையாக கொண்டு இந்த சேவை அமைந்துள்ளது. வீடியோ அம்சத்தையும் இதற்காக பயன்படுத்திக்கொள்கிறது.

இணைய கூட்டத்தின் சங்கடங்களை உணர்ந்தவர்களுக்கான சேவை.

சைபர்சிம்மன்

error: Content is protected !!