அம்மன் பக்தை, ஐ.ஏ.எஸ் அதிகாரி, கொரோனா போராளி: பீலா வெங்கடேசன் என்னும் வரலாறு!
தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளருமான பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று( செப்.,24) காலமானார். அவருக்கு வயது 56. அன்னைக்கு உகந்த நவராத்திரி காலங்களில் முழு விரதம் கடைப்பிடித்து, அம்மன் உபாசகியாக வாழ்ந்தவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அவரது அர்ப்பணிப்பும், கடமை உணர்வும், அதன்பின் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களும் நம்மை கலங்க வைப்பவை.
பின்னணி மற்றும் குடும்பம்
1969ஆம் ஆண்டு பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர் பீலா ராஜேஷ். இவரது தந்தை வெங்கடேசன், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. இவரது தாயார் ராணி வெங்கடேசன், நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். பீலா ராஜேஷ் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தார். சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.
1992ஆம் ஆண்டு ஒடிசா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜேஷ் தாஸை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு ராஜேஷ் தாஸ் தமிழகத்திற்கு பணிமாற்றம் பெற்றார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நிர்வாகப் பயணம்
கணவரைப் போலவே தானும் ஒரு உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில், குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். ஆரம்பத்தில் பீகார் கேடர் ஒதுக்கப்பட்ட அவருக்கு, பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு கேடர் கிடைத்தது.
செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளராகப் பொறுப்பேற்றார்.

கொரோனா காலத்தில் ஒரு போராளி
2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று, தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த இக்கட்டான காலகட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் தனது பணியை ஒரு போராட்டமாகவே நடத்தினார். நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் அயராது உழைத்தார்.
காலை 8 மணிக்கு முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு கொரோனா நிலவரங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார். ஊடகங்களை எதிர்கொண்டு, புள்ளிவிவரங்களை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பகிர்ந்துகொண்டார். அவரது பணியின் மீதான அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் பலராலும் பாராட்டப்பட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் அவரது தினசரி செய்தியாளர் சந்திப்புகளின் மீதுதான் இருந்தது.
வாழ்க்கைப் புயல்
பணியில் உச்சத்தில் இருந்தபோது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. கணவர் மீதான புகார்கள், குடும்பத்தார் மரணம் எனப் பல துயரங்கள் அவரை வாட்டின. இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்படத் தொடங்கினார்.
இந்தச் சூழலில்தான், அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும், பக்க விளைவுகள் காரணமாக அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. தனது இறுதி நாட்களில், நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் இருந்தார்.
அம்மன் உபாசகி
பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், பீலா ராஜேஷ் ஒரு சிறந்த அம்மன் உபாசகி என்பதுதான். குறிப்பாக நவராத்திரி காலங்களில் முழு விரதம் மேற்கொண்டு, பூஜைகள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது வீட்டில் வைக்கப்படும் கொலுவும், நவராத்திரியில் அவர் செய்யும் ஆலய வழிபாடுகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை. வாழ்நாள் முழுவதும் அம்மனின் தீவிர பக்தையாக இருந்த அவரை, சரியாக நவராத்திரி காலத்தில் அன்னை தன் திருவடிகளில் சேர்த்துக்கொண்டார்.
கடமையின் மீது அசாத்திய பற்றும், ஆன்மீகத்தில் ஆழமான நம்பிக்கையும் கொண்டிருந்த பீலா ராஜேஷ், இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணி, அவரது அர்ப்பணிப்பு, தைரியம் ஆகியவை காலத்தால் அழியாதவை.
நிலவளம் ரெங்கராஜன்


