அமேசானில் மீண்டும் ‘லே-ஆஃப்’ இடி: 16,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் கார்ப்பரேட் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், இ-காமர்ஸ் ஜாம்பவனான அமேசான் (Amazon), தனது கார்ப்பரேட் பிரிவில் சுமார் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு அமேசான் மேற்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகச் சுமையைக் குறைக்க அதிரடி முடிவு
நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் (Bureaucracy) களைந்து ஊழியர்களுக்கான உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி (Beth Galetti) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காகவும், முடிவெடுக்கும் வேகத்தை அதிகரிக்கவும் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மென்பொருள் பொறியாளர்கள்
பிசினஸ் இன்சைடர் (Business Insider) இதழ் பார்த்த அமேசானின் உட்புற ‘ஸ்லாக்’ (Slack) செய்திகளின்படி, இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் பெரும்பாலும் மென்பொருள் பொறியியல் (Software Engineering) துறையைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் தொழில்நுட்பப் பிரிவிலேயே இந்த அளவிற்கு ஆட்குறைப்பு நடப்பது ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரண உதவிகள் மற்றும் அவகாசம்
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை அமேசான் வெளியிட்டுள்ளது:
-
90 நாட்கள் அவகாசம்: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புதிய வேலை தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
-
பணிநீக்கக் கால ஊதியம்: 90 நாட்களுக்குள் வேலை கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு முறைப்படி பணிநீக்கக் கால ஊதியம் (Severance Pay) வழங்கப்படும்.
-
மருத்துவக் காப்பீடு: ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு மற்றும் பிற சலுகைகள் குறிப்பிட்ட காலம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பாதிப்பு இருக்குமா?
எந்தெந்த நாடுகளில் இந்தப் பணிநீக்கம் அதிகம் இருக்கும் என்பது குறித்த தெளிவான விவரங்களை அமேசான் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், உலகளாவிய ஆட்குறைப்பு என்பதால், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமேசான் அலுவலகங்களிலும் இந்தப் பணிநீக்கப் படலம் எதிரொலிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊழியர்களைப் பலிகடா ஆக்குவது இன்று வாடிக்கையாகிவிட்டது. 16,000 என்பது வெறும் எண்கள் அல்ல, அதற்குப் பின்னால் 16,000 திறமையான மனிதர்களின் வாழ்வாதாரமும், குடும்பக் கனவுகளும் உள்ளன. அதிகாரத்துவத்தைக் குறைப்பதாகக் கூறும் நிர்வாகம், மனிதநேயத்தையும் குறைத்துவிடக்கூடாது என்பதே எமது கருத்து.
ரமாபிரபா


