தமிழகத்தில் திமுக ஆட்சி என்றாலும் கடிவாளம் மோடியின் கையில்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தமிழகத்தில் திமுக ஆட்சி என்றாலும் கடிவாளம் மோடியின் கையில்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ண்மையிலேயே நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் வென்றது பாஜகதான் என்றால் எல்லோரும் முறைத்துப் பார்ப்பார்கள். ஆயினும் உண்மை அதுதான். காங்கிரஸ் போன்ற இயக்கத்திடமிருந்து பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க ஒரு அச்சாரமாக இருந்தவர் மோடி. பாஜக கடந்த 1991 ஆம் ஆண்டிலிருந்து மக்களவையில் குறைந்தது 120-160 உறுப்பினர்களைத் தவறாது பெற்று வந்தது. அதனை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற பொருத்தமானதொரு நபராக மோடியைத் தேர்வு செய்தனர். அதில் இரண்டு முறை வெற்றியும் பெற்றனர். இப்போது பாஜக நாடு முழுதும் தனது செல்வாக்கைப் பெருக்கி வருகிறது. ஒரு காலத்தில் இடதுசாரி கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் 70 ற்கும் மேற்பட்ட பேரவை உறுப்பினர்களையும், 25 ற்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது பாஜக. இடதுசாரிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் கேரளாவில் பாஜகவின் முன்னேற்றத்தால் இடதுசாரிகள் பெரிய வெற்றியடைந்துள்ளனர். அங்கு பாஜக சுமார் 15% வாக்குகளைப் பெறலாம். ஒரு இடம் கூட வெற்றியில்லை; ஆனாலும் பிரதான எதிரியான காங்கிரஸ் 30 தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் அதிமுகவின் தோல்வி ஏற்கனவே வழிமொழியப்பட்டது என்றாலும் கூட வலுவான எதிர்க்கட்சியாக நிலைத்துள்ளது. பாஜக சில இடங்களில் வென்றாலும் அக்கட்சிக்கு நீண்ட காலம் கடந்து பேரவையில் இடம் கிடைக்கிறது.

இத்தேர்தல்களில் வியப்பு புதுச்சேரி மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி தமிழகத்தில் வென்றாலும் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கின்ற நிலை. பாஜக, ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை விஞ்சியுள்ளது. அக்கட்சிக்கு சுமார் 13% வாக்குகள் கிடைக்கின்ற வாய்ப்பு. அத்துடன் ஆளுங்கட்சித் தகுதி. என் ஆர் காங்கிரஸ் ஏற்கனவே ஐந்தாண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இப்போது பாஜகவின் நுழைவு அம்மாநிலத்தில் மட்டும் தாக்கத்தை விளைவிக்காமல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் செல்வாக்கைப் பெருக்கச் செய்யும், ஏன் பாஜகவிற்கு திடீர் செல்வாக்கு? அங்கு ஐந்தாண்டுகள் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியால்தான் இந்த வெற்றி என்று ஊடகங்கள் குறிப்பிடலாம. ஒரு துணை நிலை ஆளுநரால் அரசியல் மாற்றம் கொண்டு வர முடியுமா? அப்படியென்றால் மாநில ஆளுநரால்?

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால் அதன் கடிவாளம் மத்திய அரசிடம் இருக்கலாம் என்பதற்கு இதுவே சாட்சியமாக இருக்கக்கூடும். இது ஜனநாயக முறைப்படி சரியா என்றால் இல்லைதான். ஆனால் பொறுப்பு அதிகம் இருக்கும் சூழலில் திமுக மத்திய அரசை மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மம்தா போல நடந்து கொள்ள இயலாது. இங்கு மோடிக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. மெல்ல பாஜக தெற்கையும் வெல்லும் காலம் வரலாம் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளன. ஏற்கனவே தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, கோவா மற்றும் நீண்ட காலமாக கர்நாடகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக இப்போது தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் கால் பதித்துள்ளது தெளிவாகிறது. இதை தமிழகம் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதிக்கமுள்ள இடங்களில் சாதித்துள்ளதும், அதுவும் கூட்டணிக்கட்சியைத் தோல்விய்டையச் செய்யும் என்பதையும் கடந்து வென்றுள்ளது வியப்பிற்குரியது.

இந்த வெற்றி மோடியின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் கிளையாக அதிமுக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் வலுவிழந்துவிட்டதைத்தான் இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே பாஜகவின் நான்கு வெற்றிகள் ஒரு துவக்கத்தையே காட்டுகிறது. வாக்காளர்களால் புறம் தள்ளப்பட்டதாகக் கருதப்பட்டக் கட்சி நான்கு இடங்கள் கிடைத்துள்ளது அதிமுக+ பாஜக கூட்டணியை மக்கள் ஏற்கின்றனர் என்பதையே காட்டுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கடுமையாக வாக்குகளைப் பிரித்தாலும் அதிமுக 1000 வாக்குகளுக்கு குறைவாகத் தோல்வியடைந்த இடங்கள் ஏராளம். ஏறக்குறைய 5.75 கோடி மக்கள் வாக்களித்த இத்தேர்தலில் திமுக-அதிமுக வாக்குகள் வேறுபாடு 4% மாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த வேறுபாடு மிக அதிகமாக இருந்தது. நடுநிலை வாக்குகள் அதிமுகவிற்கு கூடுதலாக கிடைக்கவில்லை என்பதே தேர்தல் முடிவு காட்டுகிறது. இதற்கு காரணம் மத்திய அரசு தமிழக அரசுடன் கொண்டிருந்த இணக்கமான போக்காகும். ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகும் வரையில் பாஜக நேரடியாக அதிமுக மீது செல்வாக்கு செலுத்தவில்லை என்றாலும் பின்னர் திமுக அக்கட்சியை அடிமைக் கட்சி என்று அழைக்கத் துவங்கியது பின்னடைவாகக் கருதப்பட்டது. இந்த நிலையில் பெரியதொரு தோல்வியின்றி அதிமுக 60 இடங்களுக்கு மேல் பெற்றிருப்பது ஆறுதல் மட்டுமின்றி மாநிலத்தில் தவற விட்ட அமைச்சரவைப் பதவியை மத்தியில் பெற ஏதுவாக அமையலாம். இப்படி அதிமுகவை மத்திய அமைச்சரவையில் சேர்ப்பதன் மூலம் திமுகவின் ஆட்சியை கட்டுக்குள் வைக்க மோடி முயல்வார். அதை அதிமுகவும் வலியுறுத்தும்.

திமுக அமைச்சர்கள் அதிமுகவின் மத்திய அமைச்சர்களிடம் சுமுகமான போக்குடன் நடந்துக் கொள்ள வேண்டியச் சூழல் உள்ளது. முக்கியமாக கிடைக்காத வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளதும். அதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டியதும் மிக முக்கியமாக இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் இணக்கமான முறையில் அணுக வேண்டியதுள்ளது. இது மோடியின் முக்கியத்துவத்தையே மேலும் கூட்டும். அத்துடன் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பாஜக ஆளுங்கட்சி எனும் போதும், அங்கு தொழில் வளர்ச்சி அதிகரித்தால் தர்மசங்கடம் திமுகவிற்கே ஏற்படும். இதைத் தவிர்க்க மத்திய அரசுடன் இணக்கமான போக்கு அவசியம். மாநிலத்தின் கடன் மிக அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு நிதி ஆணையம் மூலம் அதிக நிதியளிக்க அனுமதிக்காது.

தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ள திமுக அவற்றை நிறைவேற்ற வேண்டும். இதற்கு நிதியாதாரங்களைத் திரட்ட வரி விதிப்பது தவிர வேறு வழியில்லை. ஆனால் வரி விதித்தால் மக்களின் அதிருப்தியைப் பெற வேண்டும். ஆகையால் மத்திய அரசிடமிருந்தே நிதிப் பெற வேண்டியுள்ளது. மாநில உரிமைகள் என்று வலியுறுத்தி அதே சமயம் பாஜக அல்லாத மாநில முதல்வர்களை திரட்டியும் இதைச் சாதிக்க வேண்டும். இதற்கு மக்களவையில் திமுகவிற்கு அதிக பலமுள்ளதால் அங்குக் குரல் கொடுப்பது எளிது. ஆனாலும் மோடியின் ஆதரவு அவசியம். பாம்பும் அடிபட வேண்டும்; தடியும் உடையக்கூடாது எனும் நிலையில் திமுகவை பாஜக வைக்கும். இதை ஸ்டாலின் எதிர் பார்த்துதான் இருப்பார் என்றாலும் நிகழ்காலத்தில் அதை எதிர்கொள்வது என்பது வேறு. பல மாநிலப் பேரவைகளில் வென்றுள்ளதால் பாஜக் புதுத் தெம்புடனுள்ளது. இதை திமுக புரிந்துகொண்டால்தான் ஆட்சி சிறக்கும். இதையே மோடியும் எதிர்பார்ப்பார்.

கொரோனா அதிக காலம் தொல்லைத் தராது. மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பும் காலம் அதிகம் இராது. எனவே இப்போதே திமுக மத்திய அரசிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. திமுகவின் அணுகுமுறை முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தெரிந்துவிடும். அதில்தான் மோடியின் தாக்கும் எப்படியிருக்கும் என்பது தெரியும். ஆக, இப்போது மோடியின் பார்வையிலேயே ஆட்சி தொடர்கிறது என்பதில் மாற்றம் இல்லை.

error: Content is protected !!