June 7, 2023

வெல்லட்டும் விவசாயிகளின் உரிமைப் போராட்டம்!

அம்பானி, அதானி மற்றும் பிற கார்பரேட் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் இந்தியாவின் உணவு தானியங்கள் சந்தையில் களம் இறங்கினார்கள், ஆனால் அங்கே ஏராளமான பிரச்சனைகள் அவர்களுக்காக காத்திருந்தன.

பிரச்சனை 1 :

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு தானியங்கள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள், நடைமுறைகள் இருந்தன. அதனால் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள வேண்டியதிருந்தது.

மோடியின் தீர்வு:

மாநிலங்களிடமிருந்து இந்த உரிமைகளை கையகப்படுத்தி ஒரே நாடு ஒரே சட்டம் என்று நிறைவேற்றினார். கார்பரேட்டு களுக்கு, இந்திய முதலாளிகளுக்கு பெரு மகிழ்ச்சி

பிரச்சனை 2 :

கார்பரேட்டுகள் இந்த உணவுத் தாணியங்களை கொள்முதல் செய்து பெரிய பெரிய கிட்டங்கிகளில் (பதுக்கி) வைப்பார்கள். இந்த நீண்ட கால பதுக்கல், சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒரு செயற்கையான பற்றாக்குறையை சந்தையில் ஏற்படுத்தும், விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி நெடுங்காலம் பதுக்கி வைப்பது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி குற்றம்.

மோடியின் தீர்வு:

இனி உணவு தானியங்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வராது. அதனால் இனி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவர்கள் உணவு தானியங்களையும் பதுக்கலாம். கார்பரேட் முதலாளிகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

பிரச்சனை 3:

விவசாயிகளுக்கு எந்த மாதிரியான பயிர்களை எந்த காலத்தில் வளர்ப்பது என்கிற தேர்வில் சில குழப்பங்கள் இருந்தன.

மோடியின் தீர்வு:

புதிய வேளாண் சட்டத்தின்படி இனி ஒப்பந்த அடிப்படையிலான விவசாயம். எந்த பருவத்தில் எந்த பயிர் வளர்க்க வேண்டும் என்று கார்ப்பரேட்டுகள் கூறுவார்கள். அவர்களின் சொல்படி விவசாயி நடக்க வேண்டும். கார்பரேட் பெரு முதலாளிகளுக்கு பெரு மகிழ்ச்சி.

பிரச்சனை 4 :

இந்த ஒப்பந்தங்களில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்தால், விவசாயிகள் நீதிமன்றத்திற்கு சென்றால் இதனை பெரு முதலாளிகள் எவ்வாறு கையாள்வது ? இது பெரும் பிரச்சனைதானே.

மோடியின் தீர்வு;

கார்பரேட்கள் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக விவசாயிகள் உயர்/உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது. அவர்கள் Sub-Divisional Magistrate அல்லது (District Court) மாவட்ட நீதிமன்றங்கள் அளவில் மட்டுமே செல்ல இயலும் அதற்கும் மேல் செல்ல இயலாது.

இந்த கீழ் நீதிமன்றங்களில் முறைகேடுகள் தலை விரித்து ஆடும்போது கார்பரேட்கள் தங்கள் பணத்தின் உதவியுடன் தப்பித்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் மோடி விவசாயிகளை மட்டும் குறிவைக்கவில்லை. மாறாக மூன்று வேளை உணவு உண்ணும் ஒவ்வொருவரின் பசியிலும் அடுத்து கைவைக்க காத்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள சராசரி மனிதனின் ஒட்டு மொத்த சிறுசேமிப்புகளையும் பணமதிப்பிழப்பின் மூலம் நிர் மூலமாக்கினார்கள். ஜி.எஸ்.டி மூலம் இங்கே குறுந்தொழில், சிறுதொழில் செய்து கொண்டிருந்தவர்களை எல்லாம் நடுத்தெருவிற்கு கொண்டு வந்தார்கள்,

இன்று இந்திய விவசாயிகளின் எதிர்காலத்தை முற்றாக சிதைக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள், காலிஸ்தான் பிரிவினை வாதிகள் என்றார்கள்.

இன்று வெட்கமேயில்லாமல் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் இந்த பேச்சுவார்த்தைகளின் போது தங்களுக்குகான உணவை தாங்களே அங்கே எடுத்துச் செல்வதை விட ஒரு அசிங்கம் மோடி – அமித் ஷா தங்களின் வாழ்நாளில் சந்தித்திருக்க முடியாது.

அதுவெல்லாம் சரி, விவசாயிகள் யாருக்காக போராடுகிறர்கள், அவர்களுக்கு மட்டுமா போராடுகிறார்கள்? இல்லை, உணவு உண்ணும் மனிதர்களுக்கு மட்டுமா போராடுகிறார்கள் என்றால் அதுவும் இல்லை.எல்லா ஜீவராசிகளுக்கும் இணைந்தே போராடுகிறார்கள். ஆதலால் உணவு உண்ணும் ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணைவோம்.

வெல்லட்டும் விவசாயிகளின் உரிமைப் போராட்டம்!

மணிமாறன்