கூகுள் தேடலில் ஏஐ (AI) அத்துமீறல்:செய்திகளின் தலைப்புகளை மாற்றும் போக்கு அதிகரிப்பு!
கூகுள் தேடுபொறியின் (Google Search) அடிப்படை அடையாளமே அதன் நம்பகத்தன்மைதான். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் எதைத் தேடினாலும் திரையில் தோன்றும் அந்த ’10 நீல நிற லிங்குகள்’ (10 blue links) தான் இணையத்தின் அச்சாணியாக இருந்து வருகின்றன. ஆனால், இப்போது அந்த மரபை உடைக்கும் வகையில் கூகுள் ஒரு அதிரடி மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆம்.. இணையதளங்கள் தங்களின் செய்திகளுக்கு வைக்கும் அசல் தலைப்புகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புதிய தலைப்புகளைக் கூகுள் இப்போது காட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ‘கூகுள் டிஸ்கவர்’ (Google Discover) பகுதியில் இந்தச் சோதனை நடந்து வந்த நிலையில், தற்போது வழக்கமான கூகுள் சர்ச் ரிசல்ட்டுகளிலும் இது ஊடுருவியுள்ளது.
என்ன நடக்கிறது?
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், முன்னணி செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்திகளுக்குக் கொடுத்த தலைப்புகளைக் கூகுளின் ஏஐ தொழில்நுட்பம் தன்னிச்சையாக மாற்றி அமைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும் சுருக்கம் மட்டுமல்ல, சில நேரங்களில் அந்தச் செய்தியின் முழு அர்த்தத்தையே மாற்றும் அபாயம் இருப்பதாகவும் ஊடகவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன், ஒரு இணையதள முகவரியைக் கிளிக் செய்தால் அந்தத் தளத்தில் என்ன தலைப்பு இருக்குமோ அதுதான் கூகுள் தேடலிலும் பிரதிபலிக்கும். ஆனால் இனி, கூகுள் தனது ஏஐ மூலம் ஒரு செய்தியைப் படித்துப் பார்த்து, அதற்குத் தானாகவே ஒரு புதிய தலைப்பை உருவாக்கி வாசகர்களுக்கு வழங்கும்.
ஏன் இந்த மாற்றம்?
வாசகர்கள் தேடும் வார்த்தைகளுக்கு (Keywords) ஏற்ப, அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அல்லது ஈர்க்கக்கூடிய தலைப்புகளைக் காட்டுவதற்காகக் கூகுள் இந்த முயற்சியை மேற்கொள்கிறது. இருப்பினும், இது பதிப்பாளர்களுக்கும் (Publishers) கூகுளுக்கும் இடையிலான நீண்ட கால ‘நம்பகத்தன்மை’ ஒப்பந்தத்தை மீறுவதாகப் பார்க்கப்படுகிறது.
எழும் சிக்கல்கள்:
-
அர்த்தம் மாறுதல்: ஏஐ உருவாக்கும் தலைப்புகள் சில சமயம் செய்தியின் மையக்கருத்தைச் சிதைக்கக்கூடும்.
-
பதிப்புரிமைப் போர்: தாங்கள் கஷ்டப்பட்டு எழுதிய தலைப்புகளை மாற்றுவதற்கு கூகுளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி ஊடக நிறுவனங்களிடையே எழுந்துள்ளது.
-
கிளிக்பைட் (Clickbait) அபாயம்: வாசகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஏஐ மிகைப்படுத்தப்பட்ட தலைப்புகளை உருவாக்கினால், அது தவறான தகவல்கள் பரவ வழிவகுக்கும்.
கூகுளின் இந்த ஏஐ ஆதிக்கம், இணையத்தின் சுதந்திரமான செய்திப் பரிமாற்றத்தில் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பப் போட்டி, வரும் காலங்களில் தேடுபொறிகளின் நம்பகத்தன்மையை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


